முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டியது
அவசியமானதாகும். அத்துடன், கண்டிய விவாக ரத்துச் சட்டம் மற்றும்
பொது விவாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற
உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். இராஜகிரியவில்
அமைந்துள்ள சதனம் செவனவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ்,
முஸ்லிம் மக்களின் 05 சதவீத வாக்குகளே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்
ஷவிற்கு கிடைக்கப்பெற்றிருந்தது. இருப்பினும் சிங்கள மக்களின்
வாக்குகள் அதிகளவில் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு
கிடைக்கப்பெற்றிருந்தது. விசேடமான முறையில் ஏராளமான தேரர்களும்
இந்த தேர்தலின் போது தமது பங்களிப்பை நாட்டிற்காக
வழங்கியிருந்தனர். அது மாத்திரமல்லாது வெளிநாடுகளிலிருந்தும்
ஏராளமான சிங்கள மக்கள் நாட்டிற்கு வருகை தந்ததுடன், இந்த தேர்தலின்
போது தமது பங்களிப்பினை முழுமையாக வழங்கியிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் பல்வேறு
பிரச்சினைகள் எழுந்தன. அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை
எடுக்குமாறு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.
இந்நிலையில், குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய
குற்றவாளிகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது
அவசியமானதாகும். அந்த விடயம் தொடர்பிலும் சிந்தித்தே சிங்கள பௌத்த
மக்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
தமிழ் மக்கள் சிலரும் இதன் போது கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்து
தமது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கும் எமது
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்களவர்களின் வாக்குகளால் மாத்திரம்
ஜனாதிபதியை தெரிவு செய்யமுடியாது என கூறினர். ஆயினும் அந்த கருத்து
பொய்யானது என்பதனை நாம் இந்த தேர்தல் வெற்றியின் ஊடாக
உறுதிப்படுத்தியுள்ளோம்.
கருத்தடை விவகாரம் தொடர்பில் குருநாகல் போதனா வைத்தியசாலையின்
வைத்தியருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளை திசார,
நிஷாந்த சில்வா மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் முறையாக
மேற்கொள்ளவில்லை. ஆகவே இந்த விசாரணைகள் கட்சி பேதமின்றி உரிய
விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும்.
இது தொடர்பில் நாம் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தோம்.
ஆயினும் அந்த வழக்கு விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என்றே
கூற முடியும். இந்த அரசாங்கம் அது தொடர்பில் தகுந்த நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமென நம்புகின்றோம்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான விடயங்களிலும் உரிய
விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறையிட்டிருந்தோம். ஆயினும், கடந்த
அரசாங்கத்தில் முறையான விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆகவே,
இது தொடர்பில் விசேட ஆணைக்குழு நிறுவப்பட்டு விசாரணைகள்
நடத்தப்படுமென நம்புகின்றோம். அத்துடன், தேசிய ரீதியில்
சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமானதாகும்
1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விவாக பொது கட்டளைச்சட்டம், 1951ஆம்
ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் மற்றும் 1952 ஆம்
ஆண்டின் 44ஆம் இலக்க கண்டிய விவாக நீக்க சட்டம் ஆகியவற்றில்
திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அத்துடன்,
நாட்டிற்குப் பொதுவானதொரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் .
தேர்தல் முறைமை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நிலையான
அபிவிருத்தி மற்றும் சர்வதேச நாடுகளுக்கு அடிபணியாத உறுதியான தன்மை என்பவை
தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியிருந்ததுடன், அனைத்து
துறைசார் அபிவிருத்தி தொடர்பிலும் சிறந்த கொள்கைகளை முன்வைத்திருந்தார்.
அந்த வகையில் அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படவேண்டியது அவசியமானதாகும்.
ஆகவேதான் நாம் அவருக்கு எமது ஆதரவை வழங்கியிருந்தோம்.-
Vidivelli

0 comments:
Post a Comment