விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்
மாத்திரமே தேசிய தலைவர் என கருணா தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்து
தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஹெல பொது சவிய அமைப்பு கேள்வி
எழுப்பியுள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் புதுகல ஜீனவங்ச தேரர் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை
ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி
வெளியிட்டுள்ளது.
அந்த ஊடகத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவர் என
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதித் தலைவருமான
கருணா கூறிவருகின்றார் எனவும் பிரபாகரன் என்பவர் முப்பது ஆண்டுகள் இலங்கை
யுத்தம் ஒன்றை நடத்தி நாட்டு மக்களின் உயிர்களையும் தேசிய வளங்களையும்
பெருமளவில் அழித்த நபர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக
அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்து தமிழ், சிங்கள
மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களையும் மரண அச்சத்திற்குள்
தள்ளினார். அது மட்டுமன்றி இலங்கையில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியில்
அங்கீகரிக்கப்பட்ட புத்திசாலியான லக்ஷ்மன் கதிர்காமர், முன்னாள் ஜனாதிபதி
ஆர்.பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸாநாயக்க, இந்தியாவின் முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொன்ற நபர்
எப்படி இலங்கையின் தேசிய தலைவராக இருக்க முடியும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் கருணா போன்ற பயங்கரவாத தலைவர்கள் முதலில் தமிழ், சிங்கள, முஸ்லிம்
மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையாக
வீழ்ச்சியடைய விடுதலைப்புலிகளின் அழுத்தங்களே காரணம். தமிழ் இனவாத
நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர் புதிய நூற்றாண்டுக்கும் கொண்டு வந்து, மீண்டும்
பின்நோக்கி இழுத்து சென்று தமிழ் மக்களையும், நாட்டையும் அழிப்பது
தொடர்பில் கருணா உட்பட உயிருடன் இருக்கும் பயங்கரவாத தலைவர்கள் தமது
மக்களிடம் மட்டுமல்ல முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகி
வருகிறார்கள், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க இடமளிக்கின்றனர் போன்ற
மூடத்தனமான கருத்துக்களை பரப்பியே தற்போது அரசாங்கம் 69 லட்சம் வாக்குகளை
பெற்றுக் கொண்டது. எனினும் தற்போது கடந்த அரசாங்கங்களின் காலத்தை விட
சிறப்பாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அவை மக்களுக்கு மூடி மறைக்கப்பட்டது. இப்படியான நிலைமையில் பிக்குமார்,
தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொள்ளும் சிறிய குழுக்கள் தற்போது ஊமையாக
இருப்பது ஏன்? கிழக்கு மாகாண பிரதிநிதியான கருணா இப்படியான கருத்துக்களை
ஏற்றுக்கொள்கின்றனரா?
தற்போதைய அரசாங்கம் பிரபாகரனை தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதா? என்பதை
முழு நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் புதுகல ஜீனவங்ச
தேரர் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment