• Latest News

    March 23, 2020

    ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கல்முனையில் அமுல்படுத்தப்படவுள்ள ஒழுங்கு விதிகள்

    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வு உயர்மட்டக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை (22) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

    இதன்போது கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் நெரிசலாக கூடுவதை எவ்வாறு தவிர்க்கச் செய்வது என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

    இதன்போது வர்த்தகர்களும் பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.  

    இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற குடும்பங்களில் ஒருவர் மாத்திரமே வீட்டிலிருந்து வெளியேறி, தேவையான பொருட்களை கொள்வனவு செய்தல் வேண்டும்.

    * ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வீட்டிலிருந்து சந்தை மற்றும் கடைத்தெருக்களுக்கு செல்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    * வீட்டில் இருந்து வெளியேறுகின்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.

    * மாஸ்க் அணிந்து வராதோரை சந்தை மற்றும் கடைகளுக்குள் அனுமதிக்காதிருத்தல்.

    * சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருப்போர் எக்காரணம் கொண்டும் வீட்டில் இருந்து வெளியேறாமல், தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

    * சந்தைகளின் உள்ளே வியாபார நடவடிக்கைகள் முற்றாக தடை செய்யப்படுவதுடன் அவற்றுக்கு வெளியே வீதியோரங்களில் மாத்திரமே வியாபாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

    * கல்முனை மாநகர பொதுச் சந்தையை பொறுத்தளவில் ரெஸ்ட் ஹவுஸ் வீதியிலும் பன்சல வீதியிலும் வியாபாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    * ஒவ்வொரு வியாபார தலத்திற்குமிடையில் குறைந்தது 10 மீட்டர் இடைவெளி இருத்தல் அவசியம்.

    * கல்முனை மாநகர பொதுச் சந்தை வளாகத்தில் கைகழுவுவதற்கான ஏற்பாடு செய்யப்படும். அவ்வாறே ஏனைய சந்தைகளிலும் கடைகளுக்கு முன்னாலும் கைகழுவுவதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அல்லது கைகளுக்கு கிருமி தொற்று நீக்கி ஸ்ப்ரே பயன்படுத்தப்பட வேண்டும்.

    * கைகளை சுத்தப்படுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்படாத வியாபார தலங்களையும் கடைகளையும் பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

    * கைகளை சுத்தப்படுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட வியாபார தலங்களுக்கு வருகை தருவோரில் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளாத எவரும் பொருள் கொள்வனவுக்கு அனுமதிக்கப்படக் கூடாது.

    * ஓரிடத்தில் பொருள் கொள்வனவுக்காக ஒரே நேரத்தில் மூவருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது. ஏனையோர் போதுமான இடைவெளி விட்டு வரிசையில் காத்திருக்க வேண்டும்.

    * கல்முனை மாநகரில் பெரிய வாகங்னகளுக்கான தரிப்பிடமிடமாக சந்தாங்கேணி விளையாட்டு மைதானமும், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான தரிப்பிடமாக பிஸ்கால் வளவும் முச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடமாக பாபுஜீஸ் முன்பாக அமைந்துள்ள பகுதியும் பயன்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வொழுங்கு விதிகளை வர்த்தகர்களும் பொது மக்களும் முழுமையாக கடைப்பிடிப்பதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மை முழுமையாக பாதுகாக்க முடியும் என்று சுகாதாரத்துறையினர் இக்கூட்டத்தில் வலியுறுத்தியதற்கமைவாக இத்தீர்மானங்களை கண்டிப்பாக அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பொலிஸ், முப்படை உள்ளடங்கலாக தொடர்புடைய திணைக்களங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தடுப்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதோர் மீது தராதரம் பாராமல், கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    அதேவேளை கல்முனை மாநகர சபை எல்லையினுள் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்ததாக இனம் காணப்பட்டுள்ள 145 பேரின் விபரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்கள் கட்டாயம் கண்காணிக்கப்பட்டு, அவர்களில் யாராவது வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அந்நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கொரோனா கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

    வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் ஊருக்கு வந்த கல்முனையை சேர்ந்த ஒருவர் வீட்டில் இல்லாமல் தலைமறைவாகியிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

    உலகை புரட்டிப் போட்டிருக்கின்ற கொரோனா தாக்கத்தில் இருந்து எமது நட்டு மக்களை பாதுகாப்பதற்கு சுகாதாரத்துறையினரும் பொலிஸ் மற்றும் முப்படையினரும் பெரும் அர்ப்பணிப்புடன் போராடி வருகின்றனர் என்று தெரிவித்த கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவார்களானால் அடுத்த சில வாரங்களில் கொரோனா அற்ற இலங்கையை நாம் காண முடியும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

    இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ்வரன், பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சம்சுதீன் ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலகம் என்பவற்றின் பிரதிநிதிகளும் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் மாநகர சபை உறுப்பினர்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கல்முனையில் அமுல்படுத்தப்படவுள்ள ஒழுங்கு விதிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top