• Latest News

    March 09, 2020

    கொரனாவினால் கிழக்கு மாகாண மக்களுக்கு அநீதி : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கண்டனம்

    அனைத்து சமூகங்களும் வாழும் பகுதியை கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவிற்காக தேர்ந்தெடுத்துள்ளமை பெரும் சந்தேகத்தையும், மாற்றாந்தாய் மனப்பாங்கையும் வெளிப்படுத்துகின்றதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

    மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை கொரோனா சந்தேகநபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றுவது தொடர்பான தீர்மானத்தினை கண்டித்து இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

    அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
    மனிதாபிமான அடிப்படையில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் , குணமடைய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம். ஆனால் அதற்காக ஒட்டு மொத்த உலகமும் அஞ்சி நடுங்கி கொண்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தங்கவைத்து ஆரம்ப சிகிச்சை அளிப்பதற்காக அனைவரையும் மேல் மாகாணத்தில் இருந்து கிழக்கிற்கு கொண்டு வருவது என்பது ஏற்க முடியாததும் , மக்களுக்கு அச்சத்தை தோற்றுவிக்கக் கூடியதாக அமைவதுடன் எமது பிரதேசங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நோக்குவதை வெளிக்காட்டி நிற்கின்றது.

    ஏற்கனவே குறித்த நோய் தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்கும் நிலையமாக ஹெந்தல உட்பட பல இடங்களை அடையாளப்படுத்திய நிலையில், அவற்றிற்கு மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதன் காரணமாக ஒட்டுமொத்த பயணிகளையும் மட்டக்களப்பு கெம்பஸை நோக்கி அனுப்பி வைக்கின்ற விடயம் தொடர்பில் அனைவரும் ஒன்றுபட்டு கரிசனையுடன் செயலாற்ற வேண்டும்.

    கிழக்கு மாகாணத்திலே வாழுகின்ற மக்களுக்கு மாத்திரம் இவ்வாறானதொரு அநீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. உடனடியாக தீர்வு எட்டப்பட வேண்டும்.

    குறித்த பகுதியை அண்மித்து வாழ்கின்ற அன்றாடம் உழைத்து வாழ்கின்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள், கூலித் தொழிலாளிகளான அப்பாவிகள் அனைவரும் மிகுந்த அச்சத்துடனான சூழலை தற்போது எதிர்கொண்டுள்ளனர்.

    ஆகவே குறித்த தீர்மானத்தை மாற்றுவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக செயற்பட்டு நிரந்தர தீர்வொன்றினை வழங்கிட வேண்டும் என மக்களின் சார்பிலே கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரனாவினால் கிழக்கு மாகாண மக்களுக்கு அநீதி : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கண்டனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top