ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தின் இயலாமையே ஐக்கிய மக்கள் சக்தி
உருவாக்கப்படக் காரணம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரமேதாச, புதிய கூட்டணிக்கான தலைவர் மற்றும் செயலாளரை நியமித்து அனைத்து
அதிகாரங்களையும் வழங்கிய பின்னர் தற்போது முரண்பாடுகளை உண்டாக்குவது
சிறந்ததல்ல என்றும் கூறினார்.
பாராளுமன்ற குழு அறையில் இன்று -02- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் முறையான
வாக்கெடுப்பொன்று இடம்பெறவில்லை. வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தால் அதனை
உத்தியோகபூர்வமாக அறிவித்து அனைவரும் பங்குபற்ற வேண்டும் என்று
அறிவிக்கப்பட வேண்டும். எனினும் அவ்வாறு அழைப்பு எதுவும்
விடுக்கப்படவில்லை. செய்குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது மக்கள்
பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்ற வேண்டியது
அத்தியாவசியமானதாகும். எனினும் அதுவும் இடம்பெறவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் ஏற்றுக்
கொள்ளப்பட்டு அதற்கேற்ப செயற்படும் கூட்டணியாகும். இது தொடர்பில் ஐ.தே.க.
பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி
உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் ' பொதுத்
தேர்தலில் பிரதமர் வேட்பாளர், போட்டியிடும் கூட்டணியின் தலைவர் மற்றும்
வேட்புமனு சபையின் தலைமைத்துவம் என்பவற்றிற்கு ஐ.தே.க.வின் பிரதி தலைவர்
சஜித் பிரேமதாசவுக்கு வழங்க செயற்குழுவில் ஏகமனதாக
தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் பொதுச் செயலாளரை தெரிவு
செய்யும் அதிகாரமும் அவருக்கே வழங்கப்படுகிறது. ' என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.தே.க.வின் பெரும்பாலான உறுப்பினர்கள் எனது தலைமையில் பொதுத் தேர்தலில்
போட்டியிட விரும்புவதாகக் கோரியதால் நான் கேட்காமலேயே செயற்குழுவில்
மேற்கூறிய அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில் கூட்டணியை ஸ்தாபித்து
வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு சிக்கல்கள்
ஏற்பட்டுள்ளன. செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முறையான
நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாகவே இந்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களை சந்திப்பதற்காக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களை இரத்து செய்ய
வேண்டியதாயிற்று.
தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கூறி, அந்த பொறுப்புக்களையும்
அதிகாரங்களையும் என்னிடம் வழங்கி தற்போது சின்னம் பிரச்சினை என்று
கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் சின்னம் தொடர்பில் எந்த பிரச்சினையும்
இல்லை. யானை , அன்னம் அல்லது வேறு எந்த சின்னமானாலும் நாம் இணக்கம்
தெரிவித்தோம். சின்னம் ஒன்றை தெரிவு செய்தாலும் தேர்தலுக்கு முன்னர் அதில்
மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் எவ்வித சிக்கலும் கிடையாது.
அனைத்து அதிகாரங்களையும் எனக்கு வழங்கிய போதிலும் சின்னம் தொடர்பில்
முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்கள் வைத்துக் கொண்டார்கள். உண்மையில் கட்சி
தலைவர் , பொதுச் செயலாளர் இருக்கும் போது தேர்தல் நடவடிக்கைகளுக்காக
பிரிதொரு தலைவரோ செயலாளரோ நியமிக்கப்படத் தேவையில்லை. எனினும் தேர்தல்
நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அந்த பொறுப்புக்கள் எம்மிடம்
வழங்கப்பட்டன.
யானை மற்றும் அன்னம் சின்னத்தை வழங்குவதில் சிக்கல் இருப்பதாகக்
கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தான் இந்த சின்னங்களை பரிந்துரைத்தார்கள்.
தற்போது அவர்களே அதனை நிராகரிக்கின்றார்கள்.
எவ்வாறிருப்பினும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும்
சின்னம் தொடர்பில் நாம் வெகுவிரைவில் சரியானதொரு தீர்மானத்தை எடுப்போம்
என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment