(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும்
செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்று தேர்தல்கள்
ஆணைக்குழு எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. நிவாரணம் வழங்குவதன் மூலம்
அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்பதையே ஆணைக்குழு
வலியுறுத்துகிறது என்று அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசியல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாம். என்று ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு பலர் கடுந்தொனியில்
விமர்சனங்களை முன்வைத்துள்ள போதிலும் அதே தொனியில் தானும் பதிலளிக்க
விரும்பவில்லை என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
சுயாதீன தேர்தல்களை ஆணைக் குழுவை அரசியல்வாதிகள் சிலர்
விமர்சித்துள்ளமைக்கு பதிலளித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இதனைத்
தெரிவித்திருக்கும் அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :
வழமையாக தேர்தல்கள் ஆணைக் குழு அல்லது என்னைப் பற்றியும் ஆணைக்குழு
உறுப்பினர்களைப் பற்றியும் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படுகின்ற
விமர்சனங்களுக்கு நாம் பதிலளிப்பதில்லை.
எனினும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு
நிவாரணங்களை வழங்கும் போது கட்சி அல்லது வேட்பாளரை பிரசாரப்படுத்தும்
வகையில் அரசியல்வாதிகள் அல்லது வேட்பாளர்கள் செயற்படுவதிலிருந்து விலகிக்
கொள்ள வேண்டும் என்று ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில்
பல்வேறு தரப்பினராலும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
தற்போது தேர்தல் காலம் என்பதாலும் முழு நாடும் இடரொன்றுக்கு
முகங்கொடுத்திருப்பதாலும் அடிப்படையின்றி தேர்தல்கள் ஆணைக் குழுவால் இவ்வாறு
விமர்சிக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர். இதன் காரணமாகவே அவற்றுக்கு
பதிலளிக்க வேண்டியது அவசியமாகும் என்று நான் எண்ணுகின்றேன்.
ஒரு சிலர் கடுந்தொனியில் எம்மை விமர்சிக்கின்ற போதிலும் அதே பானியில்
தேரல்தல்கள் ஆணைக்குழு தலைவர் என்ற ரீதியில் என்னால் அவர்களுக்கு பதிலளிக்க
முடியாது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிட
வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
'நிவாரண செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது அரசியல்வாதிகள் அல்லது
வேட்பாளர்கள் தமது கட்சியை அல்லது வேட்பாளரை பிரசாரப்படுத்தக் கூடாது'
என்பதையே ஆணைக்குழு வலியுறுத்தியது. தேர்தல் காலத்தில் மாத்திரமின்றி
சாதாரண சூழலிலும் இவ்வாறு செயற்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
சிறந்த பிரஜைகள் அனைவரும் இந்த கருத்துடன் ஒத்துப்போவார்கள் என்பதை நாம்
அறிவோம்.
நிவாரணங்கள் வழங்கும் செயற்திட்டங்கள் மூலம் அரசியல் பிரசாரங்கள்
முன்னெடுக்கப்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையின்
காரணமாகவே ஆணைக்குழு இதனைத் தெரிவித்தது. அந்த முறைப்பாடுகளில்
பெரும்பாலானவை உண்மைக்கு புறம்பானவை என்று புறக்கணித்து விட முடியாது.
பெரும்பாலான முறைப்பாடுகள் குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியை மாத்திரமே
அடிப்படையாகக் கொண்டவையாகவே உள்ளன. அத்தோடு அவ்வாறான முறைப்பாடுகள் அதே
கட்சியைச் சேர்ந்த வேறு வேட்பாளர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளன என்பது
விசேட அம்சமாகும். அவ்வாறான முறைப்பாடுகள் பற்றி தனியாக குறிப்பிட
விரும்புகின்றேன். நாம் கூறுவது ஒரு கட்சிக்கு மாத்திரமல்ல. அனைத்து
கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் உரித்தாகும் என்பதைத்
தெரிவிக்கின்றேன்.
மிகக் குறுகிய குழுவினர் நிவாரணம் வழங்குவதன் ஊடாக தொகுதிகள் பற்றி
சிந்திக்கிறார்கள். சிறந்த அரசியல்வாதிகள் அவ்வாறு செயற்பட மாட்டார்கள்
என்று நாம் எண்ணுகின்றோம். கட்சிகளையும் வேட்பாளர்களையும்
பிரசாரப்படுத்தும் நோக்கில் செயற்பட வேண்டாம் என்று எம்மால்
முன்வைக்கப்பட்டுள்ள கருத்தில் எவ்வித தவறும் இல்லை. நிவாரணங்கள்
வழங்குவதன் மூலம் இலாபம் தேட முற்பட வேண்டாம் என்பது எமது அறிவித்தல் மூலம்
தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 3ஆம் திகதி அரசியல்வாதியொருவர் கிராம சேவர்களை தமது
வீட்டுக்கு அழைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாக முறைப்பாடொன்று கிடைக்கப்
பெற்றுள்ளது. இது போன்ற செயற்பாடுகளின் போது நிவாரணங்கள் தேவைப்படும்
பிரதேசங்களை தெரிவு செய்யும் போது அரசியல்சார்பற்று செயற்படுமாறு
ஆணைக்குழு வலியுறுத்துகிறது.
இதனை அனைத்து கட்சிகளிடமும் வேட்பாளர்களிடமும் வலியுறுத்துகின்றோம்.
இதனை ஆணைக்குழு எவ்வித பேதமும் இன்றியே தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை
ஒழித்து சுதந்திரமானதும் ஜனநாயக ரீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு
முயற்சிப்போம்.
0 comments:
Post a Comment