(எம்.எப்.எம்.பஸீர்)
நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணங்களை முன்னெடுக்க பலருக்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் தனது கையெழுத்திட்டு அனுமதிப் பத்திரங்களை விநியோகித்துள்ளார்.
அத்தியவசிய தேவைகளுக்காக குறித்த அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டு புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் பெயர், தொலைபேசி இலக்கத்தையும் இணைத்து இந்த அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த அனுமதிப் பத்திரம் பெற்ற பலர், புத்தளம் மாவட்ட எல்லையையும் தாண்டி சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பயணத் தடை நிலவும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்காக அனுமதிப் பத்திரம் வழங்கும் அதிகாரம் பிரதேச மற்றும் மாவட்ட செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமின் இந்நடவடிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேராவை தொடர்புகொண்டு கேட்டபோது, 'அவ்வாறு அனுமதிப் பத்திரம் வழங்கியிருப்பின் அது சட்ட ரீதியானது அல்ல எனவும், அவ்வாறு இடம்பெற்றிருப்பின் உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை தொடர்புகொண்டு கேட்ட போது,
' தான் அனுமதி பத்திரம் விநியோகிக்கவில்லை எனவும், தான் விநியோகித்தது குறித்த நபரை பயணிக்க அனுமதிக்குமாறு கோரும் ஒரு கடிதம் மட்டுமே எனவும் தெரிவித்தார். அந்த நடவடிக்கை தற்போதும் தொடர்வதாக அவர் கூறினார்.
மக்கள் பிரதி நிதி என்ற ரீதியில், அதிகாரிகள் தமக்கு கீழேயே செயற்படுவதாகவும் அதன் பிரகாரம், ஒருவருக்கு பயணம் செய்ய அனுமதி வழங்க அனுமதிக்குமாறு பொலிசாரை கோர தன்னால் முடியும் எனவும், தான் கடந்த 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றரிக்கை பிரகாரமே செயற்பட்டதாகவும் அலி சப்றி ரஹீம் எம்.பி. கூறினார்.

0 comments:
Post a Comment