• Latest News

    July 31, 2021

    மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார் தவிசாளர் ஜெயசிறி

    காரைதீவு பிரதேச சபையின்
    தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறி தாம் அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். இனவாத சிந்தனையும், செயற்பாடுகளும் இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்துவதற்கு உதவுமே அன்றி, இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஆக்கத்தை உருவாக்குவதற்கு உதவாது  
     
    இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் நபி(ஸல்) அவர்களின் மீது அபாண்டம் தெரிவித்து  முகநூலில் எழுதப்பட்டமையை காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறி பரப்புரை செய்தமையை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
     
    முஸ்லிம்கள் தங்களின் உயிரிலும் மேலாக நேசிக்கக் கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறி மிகவும் மோசமான அபாண்டத்தை முன் வைத்து முகநூலில் (Reginold Rgi என்ற பெயரில் முகநூலில்) வெளியிடப்பட்ட கருத்துக்களை பரப்புரை செய்தமையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதனை பரப்புரை செய்தமையை வாபஸ் வாங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன். 
     
    முஹம்மது நபி (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய மதத் தலைவர்களும், பொது மக்களும் நேசிக்கின்றார்கள் என்ற உண்மையை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறி புரிந்து கொள்ள வேண்டும்.
     
    அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளரான மைக்கேல் ஹர்ட் என்பவர் 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து The 100 என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே முதலிடம் கொடுத்துள்ளார். அதற்குரிய காரணத்தையும் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.
    சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) ஒருவர் மட்டுமேயாவார் என்றும் கூறியுள்ளார்.
     
    அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது என்று தனது The 100 என்ற நூலில் தெரிவித்துள்ளார்.
     
    இவ்வாறு மாற்று மதத்தினராலும் புகழப்படும் சிறப்பைப் பெற்றுள்ள முஹம்மது நபி (ஸல்) அவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தமையை பரப்புரை செய்வதற்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிக்கு எந்த அருகதையும், உரிமையும் கிடையாது. அவர் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதற்கு எண்ணுகின்றார். 
     
    அதே வேளை, Reginold Rgi என்ற பெயரில் முகநூலில் நபி (ஸல்) அவர்களின் மீது அபாண்டத்தை முன் வைத்த முகம் தெரியாத, முகவரியில்லாத அந்த நபரையும் கண்டிக்கிறேன். 
     
    காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறி அடிக்கடி முஸ்லிம்களின் மத உணர்வையும், இன உறவையும் சீண்டிக் கொண்டிருக்கிறார். அவர் இனவாதம் மற்றும் மதவாதக் கருத்துக்களை முன் வைத்து தமது அரசியலை நிலை நிறுத்திக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றாரா என்று பலமாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. இவரது இக்கருத்துகளை காரைதீவு மக்களும் வரவேற்கமாட்டார்கள்.
     
    காரைதீவில் இதற்கு முதலும் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் முஸ்லிம் எதிர் சிந்தனை கொண்டவர்களாக இருக்கவில்லை. காரைதீவு பிரதேச சபையின் எல்லைக்குள் வாழும் தமிழ், முஸ்லிம்களின் தவிசாளர்களாக செயற்பட்டுள்ளார்கள். இரண்டு இனங்களையும் அரவணைத்துச் செல்லும் பக்குவத்துடன் செயற்பட்டுள்ளார்கள்.
     
    ஆதலால், தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறி தாம் அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். இனவாத சிந்தனையும், செயற்பாடுகளும் இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்துவதற்கு உதவுமே அன்றி, இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஆக்கத்தை உருவாக்குவதற்கு உதவாது என்பதற்கு இலங்கையின் வரலாற்றையும், உலக நாடுகளின் வரலாற்றையும் படிக்கின்ற போது அறிந்து கொள்ளலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    எம்.ஏ.எம்.தாஹீர்
    தவிசாளர்
    நிந்தவூர் பிரதேச சபை
    30.07.2021
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார் தவிசாளர் ஜெயசிறி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top