• Latest News

    August 09, 2021

    மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார் ஆலயத்திற்கு 14 நாட்கள் பூட்டு

    மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய வழக்கில் ஐந்து பேருக்கும் தலா 20ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

    மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெற்றபோது அதிகளவான பக்தர்கள் ஒன்று கூடித் தீர்த்தமாடியமை தொடர்பாகச் சுகாதாரப் பரிசோதகரால் குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ .சி ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியதற்காக தலா 20ஆயிரம் ரூபா வீதம் ஐந்து பேருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூர்த்தி தலம் தீர்த்தம் என ஒருங்கே அமையப் பெற்ற அ ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தில் கோவிட் தொற்று காரணமாக 50 பேர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் தொடர்ச்சியாகப் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

    தீர்த்தோற்சவ நேரத்தில் ஆலயத்திலிருந்து சுவாமி தீர்த்தக்குளத்திற்குச் சென்றபோது அங்கு வேலிகளை உடைத்துக் கொண்டு பக்தர்கள் அதிகளவில் வந்ததன் காரணமாக இந்த நிலைமையேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இதேநேரம் தாங்கள் சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே திருவிழாவினை எளிமையான முறையில் நடாத்தியதாகவும் தீர்த்தோற்சவ நேரத்தில் தீர்த்தக்குளத்திற்கு அருகில் அனைத்து அறிவுறுத்தல்களையும் மீறி பொதுமக்கள் கலந்துகொண்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார் ஆலயம் 14 நாட்கள் பூட்டுவதாகவும் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார் ஆலயத்திற்கு 14 நாட்கள் பூட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top