எம்.எஸ்.தீன் -
றிசாட் பதியூதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹிஷாலியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற சர்ச்சைகள் ஏற்பட்டுள்னன. அத்தோடு ஊடகங்களின் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. அத்தோடு, மரணித்த இஷாலிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்று பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இஷாலியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதனை பொலிஸாரினதும், நீதிமன்றத்தினதும் விசாரணைகளின் அடிப்படையில்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஷாலி கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்குரிய தண்டனையை சட்டம் வழங்கும் என்பதில் ஐயமில்லை.
ஆயினும், றிசாட் பதியூதீனின் குடும்பத்தினர் சட்டத்தை வலைத்து, அதிலிருந்து தப்பிவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், இவ்விவகாரத்தில் றிசாட் பதியூதின் தரப்பினரால் சட்டத்தை வலைக்க முடியாது. ஏனெனில், றிசாட் பதியூதீனே தனக்கு நீதி வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கும் போது, எவ்வாறு சட்டத்தை வலைக்க முடியும்.
மேலும், இன்றைய ஆட்சியாளர்களுக்கும், றிசாட் பதியூதீனுக்கும் இடையிலான உறவின் நிலை எத்தகையது என்பதனை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையல்ல. அதிகாரத்தில் இருப்பவரும் அல்ல. வெறும் மக்கள் பிரதி நிதி மட்டுமே.
ஹிஷாலிக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து தெரிவிக்க முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரைக்கும் ஹிஷாலி தற்கொலை செய்து கொண்டார் என்றோ அவர் கொலை செய்யப்பட்டார் என்றோ உறுதியாக எம்மால் கூற முடியாது.
இந்த விவகாரத்தில் பொது அமைப்புக்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதில் குற்றம் காண முடியாது. சந்தேகத்தின் பேரில் றிசாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தகப்பன், மனைவியின் சகோதரர், தரகர் ஆகியொர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுகின்றன.
ஹிஷாலி க்கு நீதி வேண்டி மலையக் கட்சிகளும் வீதிக்கு இறங்கியுள்ளன. ஆனால், ஹிஷாலி போன்ற மலையகப் பெண் பிள்ளைகளும், ஆண்பிள்ளைகள் பலரும் கல்வி கற்க வேண்டிய வயதில் வேலைக்கு பெற்றோர்களினால் அனுப்பப்படுகின்றார்கள். இதற்குரிய காரணத்தை அடையாளங் காண வேண்டும். போதிய வருமானம் இல்லாததால்தான் இவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களை நியாயப்படுத்த முடியாது.
ஹிஷாலிக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் கல்வி கற்கும் வயதுப் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று குரல் கொடுக்கவில்லை. மிகவும் வறுமை நிலையில் இருந்த எத்தனையோ பேர் படித்து பட்டங்களை பெற்று வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்துள்ளார்கள்.
ஆதலால், கல்வி கற்கும் வயதில் உள்ள பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவர்களின் பொறுப்பற்ற முடிவுகளினால் வைத்தியர்களாகவும், பொறியிலாளர்களாகவும், வேறு உயர் பதவிகளில் இருக்க வேண்டிய மலையக பிள்ளைகள் ஹோட்டல்களிலும், வீடுகளிலும், பிற இடங்களிலும் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். பெற்றோர்கள் வறுமையை காட்டி செய்த குற்றமே பிள்ளைகளின் அவலங்களுக்கும், கொலைக்கும், தற்கொலைக்கும் காரணமாக இருக்கின்றன.
ஹிஷாலியின் மரணத்தை அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் ஒரு சம்பவமாக கருதிக் கொண்டு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதனை நடுநிலையாக நின்று சிந்திக்கின்றவர்கள் ஒரு சம்பவமாக பார்க்காது, ஒரு சமூகத்தின் அவலமாகவே பார்க்கின்றார்கள். மலையக சமூகத்தின் இந்த அவலத்திற்கு ஒழிக்கப்பட வேண்டுமென்று சிந்திக்கின்றார்கள்.
இதற்கு முதலில் பெற்றோர்கள் தயாராக வேண்டும். தங்களின் வறுமையை தேர்தல் காலங்களில் மாத்திரம் தூக்கிப் பிடித்து அரசியல் செய்யும் இன்றைய அரசியல்வாதிகளை ஓதுக்கி வைக்க வேண்டும். மலையக சமூகத்தின் எதிர்காலத்திற்காக சிந்தித்து செயலாற்றக் கூடியவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். மலையக மக்கள் தங்களின் வழக்கமான அரசியல் போக்கிலிருந்து விடுபட்டு, புதிய பாதையில் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு மலையகத்தில் உள்ள படித்தவர்களும், இளைஞர்களும் முன் வருதல் வேண்டும். எமக்கான வழியை நாமே அமைக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளினால் மலையக மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாதென்பதற்கு இன்றுள்ள லயன்களும், பாதைகளும், பாடசாலைகளும், மக்களின் வாழ்வு முறையும் சான்றாகும்.
இன்று ஹிஷாலிக்காக வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் மலையக் கட்சிகள் மலையகத்தின் கல்விக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் என்னவென்று கேட்கின்றோம். இந்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் போது பாடசாலைகளையும், வீடுகளையும், வைத்தியசாலைகளையும் கட்டித் தருவோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள் ஆட்சியில் ஒட்டிக் கொண்டு அமைச்சர் பதவிகளையே மாறி மாறிப் பெற்றுக் கொண்டனர். ஆனால், அங்கு உடைந்த நிலையில் பாடசாலைகளும், இருக்க முடியாத வீடுகளும், பயணிக்க முடியாத பாதைகளுமே உள்ளன. இவற்றில் எதனையும் சீரமைத்துக் கொடுக்கவில்லை.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது மலையக மக்களின் உரிமைக் குரலாகவும், அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும் அரசாங்கத்தின் ஊதுகுழலாகவுமே மலையக் கட்சிகள் இருந்து வருகின்றன.
பொது அமைப்புக்கள் எத்தனையோ வேலைத் திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை மலையக பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் மத்தியில் எந்தவொரு விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ளவில்லை.
மலையக மக்கள் மண்சரிவுகளினால் வீடு இழந்து வீதிக்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு போதிய சம்பளம் இல்லை. ஆயிரம் ரூபா என்பது கூட ஏமாற்று வித்தையாகி உள்ளது. இவர்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் எதற்குமே போராட்டங்களை நடத்தாது இருந்த அரசியல் கட்சிகள், இப்போது வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
அதற்காக போராட்டங்களை நடத்தக் கூடாதென்று சொல்லவில்லை. ஆனால், ஹிஷாலி மட்டுமன்றி இன்னும் எத்தனையோ பேர் உள்ளார்கள். இவர்களின் இந்நிலைக்கு மலையக மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்றவர்களும் காரணமாகும்.
ஆகவே, மலையக் கட்சிகள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், கல்வி கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் நிலையை மாற்றியமைப்பதற்குமுரிய திட்டங்களை வகுக்க வேண்டும். தேயிலை தோட்டத்தில் வேலை செய்கின்றவர்களின் நாளாந்த ஊதியத்தை வைத்துக் கொண்டு, நாளாந்தம் ஊடகவியாளர்கள் மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் மலையக் கட்சிகள் கல்வி வளர்ச்சிக்கு எத்தனை ஊடகமாநாடுகளை நடத்தியுள்ளன என்று கேட்கின்றோம். ஹிஷாலிக்கு நீதி வேண்டும் என்ற போர்வையில் அரசியல் சூதாட்டத்தில் அரசியல் கட்சிகள் சில களம் இறங்கியுள்ளன.
இதே வேளை, ஹிஷாலியின் தாயின் கருத்துக்களில் முரண்பாடுகள் உள்ளன. தனது மகள் துன்புறுத்தப்படுவதாக தம்மிடம் தெரிவித்துள்ளாகவும், தும்புத்தடியால் அடித்ததாக மகள் தம்மிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் தும்புத் தடியால் அடித்தவர் யார் என்று அவருடைய மகள் இஷாலி தெரிவித்திருப்பார். அந்த நபர் யார் என்று அவர் தெரிவிக்கவில்லை. அதனால், அவரின் கருத்துக்களில் சந்தேகிக்க வேண்டியுள்ளது. மேலும், அதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடும் செய்யவில்லை. றிசாட் பதியூதினின் மனைவியின் தொலைபேசி இலக்கம் தம்மிடம் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், றிசாட் பதியூதீனின் மனைவியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமது மகள் ஒரு இருட்டறையில் தூங்கியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஹிஷாலிக்கு வழங்கப்பட்ட அறையின் போட்டோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அந்த அறையை பார்க்கின்ற போது நல்ல வசதியுள்ள ஒன்றாகவே அந்த அறை உள்ளது.
இதே வேளை, இஷாலியின் மரண பரிசோதனையை முஸ்லிம் டாக்டர் ஒருவர் மேற்கொண்டமையால், அதில் தனக்கு சந்தேகங்கள் உள்ளதாக இஷாலியின் தாய் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தேகம் இந்த சம்பவத்தை ஒரு இனவாத நிகழ்ச்சி அடிப்படையில் முன்னெடுப்பதற்குரிய முயற்சிகள் எடுக்கப்படுவதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் மீது விரல் நீட்டுவதாகவே உள்ளது. ஆதலால், இத்தகைய கருத்துக்களை தவிர்க்க வேண்டும்.
ஆதலால், இஷாலிக்கு நீதி வேண்டுமென்ற கோரிக்கைகளும், போராட்டங்களும் வேறு திசையை நோக்கி செல்வதற்கு அனுமதிக்க முடியாது. இதனை அரசியல் கட்சிகளும், வேறு நபர்களும் தங்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கக் முடியாது. இவர்களின் செயற்பாடுகள் இஷாலியின் மரணத்திலுள்ள உண்மையை மறைப்பதற்கும், உண்மையான குற்றவாளி தப்பித்துக் கொள்வதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
Virakesari 01.08.2021
0 comments:
Post a Comment