மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது. மஹர சிறைச்சாலை வளவில் காணப்பட்ட பள்ளிவாசல் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உரிய அனுமதி பெறப்படாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமான பாதைகள் ஊடாக வெளியாட்கள் பலரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தனர். இதன்போது சிறையில் இருப்பவர்களுக்கு செல்போன்கள், போதைப் பொருட்கள் போன்றவை வீசப்பட்டன. அதேநேரம் இஸ்லாமிய ஒருவர் இறக்கும் போதும் விவாக நிகழ்வுகளின் போதும் பலர் இந்த பள்ளிவாசலுக்கு வந்தனர்.
இதனால் அதிகாரிகள், கைதிகளினதும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனால் தான் அப்போதைய சிறைச்சாலை அத்தியட்சகரினால் பள்ளிவாசல் மூடப்பட்டது. இந்த பள்ளிவாசலை மீண்டும் திறந்தால் அதே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மீண்டும் ஏற்படும். எனவே பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்பதை சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த 2013ஆம் ஆண்டிலேயே கடிதம் ஒன்றின் மூலமாக அறிவித்துள்ளார். அத்துடன் குறித்த பள்ளிவாசலில் பயன்படுத்தப்படும் மின்சாரம், குடிநீர் போன்றவற்றுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடாகவே கட்டணம் செலுத்தப்பட்டது. அதன் காரணமாக எந்தவொரு காரணத்திற்காகவும் குறித்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. அதேவேளை சிறைச்சாலைக்கு சொந்தமான 5 பேர்ச்சஸ் காணி அங்குள்ளது. தேவையானால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு அந்தக் காணியை வழங்க நடவடிக்கை எடுப்போம். ஆனால் மஹர சிறைச்சாலை வளவினுள் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த ஐந்து பேர்ச்சஸ் காணி பள்ளியொன்றை நிர்மாணிக்க இடவசதி பற்றாக்குறையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய எஸ்.எம். மரிக்கார் எம்.பி., கூடுதலான இடப்பரப்பொன்றை வழங்குமாறும், அதற்கான கட்டணத்தை செலுத்தி பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ள முஸ்லிம் தனவந்தர்கள் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார். எனினும் குறித்த வேண்டுகோள் தொடர்பில் தற்போதைக்கு தன்னால் பதிலளிக்க முடியாமல் இருப்பதாக அமைச்சர் ஹர்சண நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment