எம்.எஸ்.தீன் -
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு குறைந்ததொரு அதிகாரப் பரவலாக்கலே மாகாண சபை முறைமையாகும்;. மாகாண சபை முறைமைக்குரிய அதிகாரங்கள் அரசியல் அமைப்பில் 13வது திருத்தச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் எதிரானதொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் தொடர்பில் தமிழர்களின் அபிலாசைக்கு எதிராக நிற்பதற்கு அவர் விரும்பவில்லை. அத்துடன், முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு எதிராக தமிழர் தரப்பினர் இருக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருந்தார்.
இலங்கை - இந்திய உடன்படிக்கை எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியினரிடமும் ஆலோசனை செய்யப்பட்டாது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். முஸ்லிம்களின் அபிப்ராயங்களை கேட்காது இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக இணைக்க வேண்டுமாயின் இம்மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் தெரிவிக்கப்ப்பட்டது. முஸ்லிம்களிடம் எதனையும் கேட்காது மேற்கொள்ளப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் சர்வஜனவாக்கெடுப்பு நடத்துவது என்பது எற்றுக் கொள்ள முடியாததாகும். வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைவதாக இருந்தாலும் சரி, பிரிவதாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகு தரப்பட வேண்டுமென்று அஸ்ரப் நிபந்தனையை முன் வைத்தார்.
கிழக்கு மாகாணத்தின் எல்லைகள் திட்டமிட்டு விரிவாக்கப்பட்டுள்ளதுடன், சிங்கள குடியேற்றங்களும் நடைபெற்றுள்ளன. இதனால், இனவிகிதாசாரத்தில் முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் சனத்தொகையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் தனியாக பிரிந்தாலும் முஸ்லிம்களிம் ஆட்சி அதிகாரம் கிடைக்காது. இதனால்தான், இரண்டு மாகாணங்களும் பிரிவதாக இருந்தாலும், இணைவதாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு அதிகார அலகு வேண்டுமென்றார் அஷ்ரப்.
ஆகவே, முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு என்ற கோரிக்கையின் மூலமாக அவர் 13வது திருத்தச் சட்;டத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அதிகாரத்தின் கீழ் முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு வேண்டுமென்றுள்ளார். ஆதலால், அஸ்ரப் 13வது திருத்தச் சட்டத்தையோ, மாகாண சபை முறைமையையோ எதிர்க்கவில்லை. அவர் முஸ்லிம்களின் அபிலாசைகளில் கருத்தூன்றி இருந்தார் என்பதே உண்மை.
வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து சிங்களவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வதற்கோ, முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வதற்கோ விரும்பவில்லை. இதில் எந்தப் பக்கம் நின்றாலும் முஸ்லிம்களுக்கு தீங்காகவே அமையும். அதனால் இனப் பிரச்சினைக்கான தீர்வில் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதில் முஸ்லிம்கள் ஏமாந்து வி;டக் கூடாதென்பதில் அஸ்ரப் உறுதியாக இருந்தார்.
இதே வேளை, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக் கொண்ட கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார். கரையோர மாவட்டம் உருவாக்கப்பட்டால்தான் முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் காணிகள் பாதுகாக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும் என்றதொரு நிலைப்பாட்டையும் அஸ்ரப் கொண்டிருந்தார்.
இவ்வாறு இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கு அதிகார அலகும், நிர்வாக மாவட்டமும் கேட்டுக் கொண்டிருந்த அஸ்ரப்பின் கொள்கைகளை மறந்துள்ள அவரது கட்சியின் அனைத்து உயர்பீட உறுப்பினர்களும் தாங்கள் அஸ்ரப்பின் கொள்கையை பின்பற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாகும்.
அஸ்ரப்பின் மரணத்தோடு அவரது அபிலாசைகளும் மரணித்து விட்டன என்பதே உண்மையாகும். இது வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸின் எந்தவொரு உயர்பீட உறுப்பினரும் அஸ்ரப்பின் கொள்கை பிழையானதென்று தெரிவிக்கவில்லை. இன்றுவரைக்கும் அஸ்ரப்பின் கொள்கைகளே எமது கொள்கை என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அஸ்ரப்பின் எந்தவொரு கொள்கையையும் அடைவதற்குரிய சிறு முயற்சிகள் கூட எடுக்கப்படவில்லை. அஸ்ரப் மரணித்து 22 வருடங்கள் கடந்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கிம் இருந்து கொண்டிருக்கின்றார். இக்காலப் பகுதியில் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி அறிவிக்கவில்லை.
அத்துடன் 20 வருடங்களாக கரையோர மாவட்டத்தை பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்த கட்சியும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கோரிக்கையை மறந்Nது விட்டார்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் கல்முனையை பாதுகாப்போம் என்ற புதிய கோசத்தையும் முன் வைத்தார்கள். ரவுப் ஹக்கீம் 20 வருடங்களுக்கு மேலாக கரையோர மாவட்டத்தைப் பற்றி பேசவில்லை என்றதொரு குற்றச்சாட்டும் அஸ்ரப்பின் விசுவாசிகளிடத்தில் உள்ளது.
காலத்திற்கு காலம் அரசாங்கங்களுடன் கைகோர்த்துக் கொண்ட முஸ்லிம் கட்சிகளும், அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று புகழாரம் சூட்டிக் கொள்கின்றவர்களும் முஸ்லிம்களுக்கு அதிகார அலகு தரப்பட வேண்டுமென்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் நிபந்தனைகளில் ஒன்றாக முன் வைப்பதில்லை.
| அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபம் |
இலங்கையில் அதிகாரப் பரலாக்கம் செய்யப்படும் போதும், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போதும், வெளிநாடுகளுக்கும், சர்வதேச அமைப்புக்களுக்கும் அதிகார பரவலாக்கம் குறித்தான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆவணச் சமர்ப்பிப்பும் போதும் முஸ்லிம்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று கோருதல் வேண்டும்.
அந்த ஆவணங்களில் முஸ்லிம்களின் அபிப்ராயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் புத்திஜீவிகளும், சிவில் அமைப்புக்களும் எடுக்க வேண்டும்.
அதனைவிடுத்து பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளாது இருப்பபோ, அது நடக்காது என்று ஒதுங்கிவிடுவதோ, ஆவணங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளை உள்ளடக்காது வெறும் எதிர்ப்புக்களை காட்டுவதோ சமூக அரசியலுக்கு பொருத்தமில்லாததாகும்.
அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படும் போது முஸ்லிம்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் தமிழ்த் தலைவர்களினாலும் முன் வைக்கப்படுகின்றன. தமிழர்கள் எதனைக் கோருகின்றார்கள். சிங்களவர்கள் எதனைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனைக் கவனத்திற் கொண்டு முஸ்லிம்களுக்கு எது வேண்டுமென்று ஆட்சியாளர்களிடம், சர்வதேசத்திடமும் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். அதற்கு ஒரு திட்டமும் இருக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகளிடமும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அதிகாரப் பரவலாக்கம் குறித்தான எந்தவொரு திட்டமும் கிடையாது. ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்டு சலுகைகளைப் பெறும் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.
Virakesari - 16.01.2022
0 comments:
Post a Comment