• Latest News

    June 20, 2023

    வர்த்தகர்கள், செல்வந்தர்கள் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீள பெறுஙகள் - பாட்டலி சம்பிக்க ரணவக்க பா.உ

    தேசிய கடன் மறுசீரமைப்பால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், ஆடைத்தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    ஆகவே நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காக கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் பிரதான நிலை வர்த்தகர்கள், செல்வந்தர்கள் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீள பெற்றுக்கொள்ள நிதி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


    பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    அவர் மேலும் உரையாற்றியதாவது,

    நாடு வங்குரோத்து நிலை  அடைந்துள்ள பின்னணியில் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட காரியாலய சட்டமூலம்,ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் என்பன  முக்கியமானவை.

    வரவு செலவுத் திட்ட காரியாலயம் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் விடயதானங்களுக்குள் உள்வாங்கப்படும்.

    ஆகவே இந்த காரியாலயம் சிறந்த முறையில் செயற்படுவதற்கான பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

    பொருளாதார முன்னேற்றத்துக்கு கடுமையான மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

    நம்பிக்கை என்பதை முன்னிலைப்படுத்தி  சகல விடயங்களையும் செயற்படுத்த முடியும்.கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை புறக்கணித்து அரசாங்கங்கள் செயற்பட்டதை ஆராய்ச்சி நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

    கசினோ வரி அறவிடல் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

    கசினோ ஒழுங்குப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு தொடர்பில் புதிய சட்டம் இயற்றுவதாக அரசாங்கம் வாக்குறுதி  வழங்கியது.இருப்பினும் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை கூட இதுவரை எடுக்கப்படவில்லை.

    டிஜிட்டல் சேவைகளுக்கு எவ்வித வரிகளும் அறவிடப்படுவதில்லை.நல்லாட்சி  அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் சேவை தொடர்பான வரி தொடர்பான சட்டமூலம் வெகுவிரைவில் சட்டமாக்கப்பட வேண்டும்.

    பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற சீனி வரி குறைப்பு மோசடி தொடர்பான அறிக்கையை கோப் குழுவின் முன்னாள் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சீனி வரி குறைப்பால் 16 மில்லியன் ரூபா  அரச வருவாய் இழக்கப்பட்டுள்ளது என கணக்காளர் நாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பிணைமுறி மோசடியை காட்டிலும் இந்த மோசடி பாரதூரமானது.

    அறிக்கையை அடிப்படையாக  கொண்டு நிதியமைச்சு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.வரி குறைப்பு

    சீனி வரி குறைப்பின் பயனின் 45 சதவீத இலாபத்தை ஒரு தனி நிறுவனம் பெற்றுள்ளது. வலுவான 6 நிறுவனங்கள் சம இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளன.

    இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சாதாரண மக்கள் மீது வரி சுமத்துவது முறையற்றது.மறுபுறம் இந்த மோசடி தொடர்பில் பாராளுமன்ற கோப் குழு வழங்கிய அறிக்கைக்கு  நேர்ந்தது என்னவென்பதை நிதியமைச்சு பகிரங்கப்படுத்த வேண்டும்.

    தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால்  வங்கி கட்டமைப்பு நிச்சயம்  பாதிக்கப்படும்.ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சாதாரண வைப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

    பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மதுசார உற்பத்தி நிறுவனம் இலங்கை வங்கி,மக்கள் வங்கி ஆகிய அரச வங்கிகளிடம் இருந்து  பெற்றுக்கொண்ட 7 பில்லியன் ரூபாவை மீள செலுத்தவில்லை.இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வங்கி கட்டமைப்பு பலவப்படுத்த வேண்டுமாயின் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் பலம் வாய்ந்த முன்னணி தரப்பினர் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள பெற்றுக்கொள்ள நிதியமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நிதி அமைச்சின் செயற்பாடுகள் கேள்விக்குள்ளான நிலையில் உள்ளது.வரி அதிகரிப்பால் தொழிற்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

     தேசிய கடன் மறுசீரமைப்பால் பெருந்தோட்ட தொழிலாளர்கள்,ஆடைத்தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    ஆகவே நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காக கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் பிரதான நிலை வர்த்தகர்கள்,செல்வந்தர்கள் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீள பெற்றுக்கொள்ள நிதி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வர்த்தகர்கள், செல்வந்தர்கள் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீள பெறுஙகள் - பாட்டலி சம்பிக்க ரணவக்க பா.உ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top