• Latest News

    November 01, 2023

    சவூதியின் தலைமையில் அரபு நாடுகளின் உச்சிமாநாடு. பலஸ்தீன் பிரச்சினைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

    பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கெண்டு வருகின்ற தாக்குதல்கள் குறித்தும்,பலஸ்தீன் மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் அரபு நாடுகளின்உச்சிமாநாடு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.


    அரபு நாட்டுத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் அவசர அமர்வொன்று நவம்பர் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அரபு லீக்கின் இந்த 32வது அமர்வு சவூதி அரேபியாவின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது.

    காசா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி கலந்துரையாடும் நோக்கோடு உச்சி மாநாட்டை நடாத்துமாறு பாலஸ்தீன் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து திங்கட்கிழமை (30) தலைமைச் செயலகம் அதிகாரபூர்வ கோரிக்கையை பெற்றதாக அரபு லீக்கின் உதவிச் செயலாளர் தூதர் ஹொசாம் சகி தெரிவித்தார்.

    கெய்ரோ நகரில் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி அரபு லீக் உச்சி மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து 20 நாட்களுக்குப் பிறகு அரபு லீக் நாடுகள் மீண்டும் ஒன்றிணைவது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

    கெய்ரோவில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டின் போது இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நிலவரம் பரபரப்பான விவாதமாக இருந்தது. ஈராக், சைப்ரஸ், ஜோர்டான், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்றன.

    ஜேர்மனி மற்றும் ஜப்பானின் பிரதிநிதிகளுடன் ஐ.நா பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பாலஸ்தீனியர்களின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

    அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெறவிருப்பதன் காரணமாக ரியாத் நகரைச் சூழ பாதுகாப்பை பலப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் மற்றும் காசா பகுதியில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து கலந்துரையாட மாநில வெளியுறவு அமைச்சர்களும் கூடவுள்ளனர்.

    மேலும், பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் மற்றும் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் வகையிலும் இராஜதந்திர முயற்சிகள் பல பகுதிகளிலும் சவூதி மேற்கொண்டுள்ளதாகவும், முன்னரே மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகள் தொடர்பிலேயே தொடர்ந்தும் கரிசனையோடு இருப்பதாகவும் சவூதி அமைச்சரவை அறிவித்தது.

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான தனது உரையாடல் பற்றி பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அமைச்சரவைக்கு விளக்குகையில்,

    இந்த உரையாடலின் போது காஸாவின் நிலைமை தொடர்பான சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை அவர் வலியுறுத்திக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சவூதியின் தலைமையில் அரபு நாடுகளின் உச்சிமாநாடு. பலஸ்தீன் பிரச்சினைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top