• Latest News

    November 04, 2023

    அரச நிறுவன பிரதானிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

     நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


    மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும், நாட்டை பின்நோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (04.11.2023) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

    மாவட்ட அரசியல் குழுவினர் மற்றும் அரச அதிகாரிகள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அதேபோல் 2022 டிசம்பர் 22 மற்றும் 2023 ஏப்ரல் 10 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

    மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டைக் குறைத்தல், பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், வீதி புனரமைப்பு, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடனடி தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.அதனையடுத்து வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள், ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன. நுவரெலியாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கண்கவர் பகுதியாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துவதன் மூலம், இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

    சுற்றுலாத்துறை முதலீடுகளை ஈர்க்க, அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய அவர்களின் பொறுப்புக்களை துரிதமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.அரச நிறுவன பிரதானிகள் தமது நிறுவனங்கள் தொடர்பில் சரியான தெரிவைக் கொண்டிருக்க வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரச நிறுவனங்களிடத்திலிருந்து மக்களுக்கான சேவை கிடைக்காதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

    இதேவேளை நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலக கட்டடத்தின் கீழ் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆடை விற்பனை நிலையமொன்றையும் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரச நிறுவன பிரதானிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top