பாராளுமன்ற தேர்தலை கருத்திற் கொண்டே உதிரிகளாகவுள்ள குழுக்களை ஒன்றிணைப்பதற்காக பொது வேட்பாளர் விடயத்தை பயன்படுத்த விக்னேஸ்வரன் போன்றவர்கள் முற்படுவதாக ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றோம். அதனடிப்படையில் ஒற்றுமையை கொண்டுவர என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்தபோது இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை சிந்தித்தோம் என விக்னேஸ்வரன் தெரிவித்ததன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை அவர்களின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக இவர்கள் சிறிதளவும் சிந்திக்கவில்லை.
மாறாக தமது சுயநலன்களிலிருந்தே இன்னும் பயணிக்க முற்படுகின்றனர். இதன்மூலமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்கின்ற செய்தி எவ்வாறானது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
நாட்டின் நலன், மக்களின் நலன் மற்றும் பொருளாதார நலன் என்பவற்றிலிருந்து விலகி தமது கொள்கையற்ற கோட்பாடற்ற அரசியல் இலக்கற்ற உதிரிகளை தமிழ் பொது வேட்பாளர் என்ற போர்வையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்குவைத்தே இவர்களுடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு கட்சிகளும் மக்கள் நலன்களை புறந்தள்ளி தமது சுயநலன்களை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அவர்களிடம் நிலையான கொள்கை இல்லை. ஒரு நிலையான அரசியல் இலக்கு இல்லை.
மக்களுக்கான வழிகாட்டல் இல்லை என்பது விக்னேஸ்வரன் கூற்றிலிருந்து தெளிவாகப் புலப்படுகின்றது.
ஆகவேதான் இந்த நாட்டின் விகிதாசார நிலையை கருத்தில் எடுப்போமாயின் பெரும்பான்மை இனமாகவுள்ள தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாக வர வாய்ப்புள்ளது.
ஆகவே பொது வேட்பாளர் என்ற கருத்தானது பிரிந்திருக்கும் உதிரிகளை ஒன்றிணைத்து அரசியல் இலாபம் தேடும் ஒரு செயற்பாடாகவே ஈ.பி.டி.பி கருதுவதாக அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment