• Latest News

    June 23, 2024

    நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பில் தெரிவிப்பு


    நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

    விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ், 55 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு தமிழ் கலாசார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அதன் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

    அதனையடுத்து விவசாயிகளுக்கு ஜனாதிபதியால் மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

    இதேவேளை, மைலம்பாவெளி - செங்கலடி பிரதேசத்தில் அமைந்துள்ள மாதுளை தோட்டத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் பார்வையிட்டார்.  

    இந்த மாதுளை தோட்டம் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருப்பதோடு, 300 விவசாயிகள் இந்தப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கடந்த வருடம் அரை ஏக்கர் மாதுளை விளைச்சலில் 36 இலட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தை ஈட்டியிருந்தனர்.

    நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி,

    "இது விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஓர் அங்கமாகும். நாட்டில் விளைச்சல் செய்யாத காணிகளே அதிகளவில் உள்ளன.  

    இந்த நிலங்கள் அனைத்தும் விளைச்சலுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அதனூடாக ஏற்றுமதி விவசாயமாக கட்டமைக்க வேண்டும்.

    இந்த நாட்டின் உணவுத் தேவைக்காக மட்டுமன்றி, மற்றைய நாடுகளின் உணவுத் தேவைக்காகவும் விவசாயப் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

    அதன் மூலம் அதிகளவில் வௌிநாட்டு வருமானத்தை ஈட்ட முடியும். வெளிநாடுகளில் இருந்து கடன் பெற வேண்டிய தேவையும் இருக்காது.

    நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். புதிய பொருளாதாரம் உருவாகும்போது, நாட்டின் விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.

    இன்று இத்தொழிற்சாலை திறந்துவைக்கப்பட்டதுடன் விவசாய நிறுவனங்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் விவசாய பணிகளை முன்னெடுக்க மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

    இந்திய விவசாயிகள் இந்த செயற்பாடுகளை தங்கள் கைத்தொலைபேசியின் மூலம் முகாமைத்துவம் செய்கின்றனர்.  

    அரசாங்கத்தின் காணிகளில் விவசாயம் செய்து வந்தவர்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்கியிருக்கிறோம்.

    நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் காணி உறுதிகள் வழங்கப்பட்டன. அதனால் உங்களுக்கு காணி உறுதி கிடைத்துள்ளது. அதனால் நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.

    மேலும், நாடளாவிய ரீதியில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளோம். விவசாய அமைச்சும் மாகாண விவசாய அமைச்சுகளும் இணைந்து இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும்.

    அடுத்த வருடத்துக்குள் அனைத்து விவசாய சேவை நிலையங்களையும் விவசாய நவீனமயமாக்கல் நிலையங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நாட்டு விவசாயிகளின் வருமானத்தை படிப்படியாக அதிகரித்து, கிராமப் பகுதிகளும் வளர்ச்சியை எட்டும்.

    அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய செயற்றிட்டமொன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    மகாவலி ஏ - பி வலயங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் விவசாயத்தை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அதன் மூலம் அப்பகுதி விவசாயம் முழுமையாக வளர்ச்சி அடையும்'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

    கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ். வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  












    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பில் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top