• Latest News

    October 06, 2024

    தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பாரையில் தனித்துப் போட்டி

    தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களின் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. 
     
    வவுனியாவில்  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு இன்று (06.10.2024) ஞாயிற்றுக்கிழமை கூடிய போதே இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதன்போது, யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் புது முகங்களுடன் தமிழரசுக் கட்சி களமிறங்குகிறது.

    அத்துடன், அம்பாறையில் தனித்து போட்டியிடுவோம் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

    யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரனும் நானும் போட்டியிடுவதுடன், ஏனைய 7 பேரும் புதியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    பெண் வேட்பாளர்கள்

    எஸ்.சி.சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் இருவர் பெண் வேட்பாளர்கள். மிகவும் துடிப்பான இரு பெண்களையும் இம்முறை நிறுத்தியுள்ளோம். பெண் வேட்பாளர்கள் தேவை என நாம் ஊடகங்களில் தெரிவித்ததை பார்த்து இருவர் காலை விண்ணப்பித்தனர்.

    அவர்கள் இருவருக்குமே வாய்ப்பை கொடுத்துள்ளோம். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஞா.சிறிநேசன் எமது கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், மட்டு மாநகர முன்னாள் மேயர் தி.சரவணபவன், வைத்தியர் சிறிநாத் உள்ளிட்ட ஐவர் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

    ஏனைய மூவரையும் மாவட்ட கிளையுடன் கலந்துரையாடி இறுதி செய்வோம். வன்னி, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட பட்டியல் இறுதி செய்யப்படவில்லை.

    வன்னித் தேர்தல் தொகுதியில் மூன்று மாவட்டங்கள் இருப்பதுடன் பல்வேறு பிரிவினரும் உள்ளனர். அது தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் எதிர்வரும் புதன்கிழைமை இது இறுதி செய்யப்படும்.

    திருகோணமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எமது வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அவர்களுக்கான 3 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் புதன்கிழமை இறுதி செய்யப்படும்.

    அம்பாறை மாவட்டத்தில் எமது மாவட்ட கிளை கலந்துரையாடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக எமது சின்னத்தில் நாம் தனித்து போட்டியிடுகின்றோம். எமது மாவட்ட கிளை, தற்போது வேட்பாளர்களை தெரிவு செய்து வருகிறது.

    இம்முறை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப புது முகங்களுடன், இளையவர்களுடன் எமது கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது எனத் தெரிவித்தார். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பாரையில் தனித்துப் போட்டி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top