• Latest News

    March 09, 2025

    'முஸ்லிம்களிடையே தீவிரவாத சிந்தனை' மீண்டும் எழும் குற்றச்சாட்டு (வீரகேசரி - 09.03.2025)


    எம்.எஸ்.தீன் -                                                                                                                                   முஸ்லிம்களை எல்லா ஆட்சியாளர்களும் தீண்டிப் பார்ப்பதற்கும், பழிகளைப் போடுவதற்கும், பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாத் போன்ற சொற்பிரயோங்களைப் பயன்படுத்தியும் முஸ்லிம் சமூகத்தை காயப்படுத்திய வரலாறு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே ஆரம்பித்து வைக்கப்பட்ட பழைய கதையாகவே இருக்கின்றது. இந்தப் பழைய கதை அடிக்கடி ஓடிக் கொண்டிருப்பதுதான் இலங்கை முஸ்லிம்களின் மனங்களை புண்படச் செய்யும் ஒன்றாகும்.

    அதே வேளை, பௌத்த தீவிரவாதம், பௌத்த கடும் போக்குவாதம், பெரும்பான்மையினரின் மேலாதிக்க இனவாதம் போன்றன முஸ்லிம்களின் மீது தமது கோரப்பற்களை பதித்த போதெல்லாம் ஆட்சியாளர்கள் அந்த குழுக்கள் பெரும் பேரினவாத இனத்தவர்கள் என்பதற்காக கண்டு கொள்ளாத போக்கும், சட்டத்திற்கு முன்னர் சுதந்திரமாக நடமாடும் உத்தரவாதங்களும் அத்தகைய குழுக்களுக்கு ஆட்சியாளர்களினால் வழங்கப்பட்டன. 
     
    முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அனைத்து பௌத்த மேலாதிக்க இனவாதக் குழுக்களுக்கும் ஆட்சியாளர்கள் திரைமறைவில் அனுசரணை வழங்கி, ஆட்சியாளர்கள் தமது அரசியலை இத்தகைய குழுக்களின் ஊடாக தக்கவைத்துக் கொண்டார்கள் எனலாம்.
     
    மேலும், சஹ்ரான் குழுவினர் குறித்து முஸ்லிம்களிடையே இஸ்லாத்திற்கு முரணாக செயற்பட்டு தீவிரவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்று பாதுகாப்பு தரப்பினரிடம் முஸ்லிம்கள் முறையிட்ட போதிலும், அன்றைய ஆட்சியாளர்கள் திரைமறைவில் சஹ்ரான் குழுக்களுக்கு ஆதரவாகவும், பணக் கொடுப்பனவுகளை மேற்கொண்டார்கள் என்பதும் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களினாலும், புத்திஜீவிகனாலும் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கப்பட்டன. இந்திய புலனாய்வுத் துறையினர் அது குறித்து எச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்பு தரப்பினர் அதனை கவனத்திற் கொள்ளவில்லை. இறுதியில் இலங்கையிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. முஸ்லிம்களின் ஆடை, உணவு, வர்த்தகம், வாழ்விடம், பள்ளிவாசல்கள், குர்ஆன் பள்ளிகள் என அனைத்தும் துன்பப்பட்டன.
     
    அதுமட்டுமன்றி பேரினவாத தீவிரப் போக்குடையவர்களும், அத்தகைய குழுக்களும் முஸ்லிம்களின் மீது வேண்டுமென்று தீவிரவாதிகள் என்றும் பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்த போதும் இலங்கை புலனாய்வுத்துறை அவற்றை மறுத்த வரலாறும் உள்ளது.
     
    கடந்த 2024 ஆண்டு அக்டோபரில் பொத்துவில் - அறுகம்பே பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் 06 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்விடயம் குறித்தும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அத்தோடு யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களிலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்றும் தெரிவித்தார். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற துப்பாக்கி தாக்குதல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கைலேயே மேற்படி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.  
     
    இத்தகையதொரு நீண்ட கால பின்னணியில் இன்றைய ஆட்சியாளர்கள் தரப்பிலும் கல்முனை முஸ்லிம்களிடையே தீவிரவாத கொள்கைகள் பரப்பப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரச புலனாய்வு, இராணுவ புலனாய்வு ஆகியவற்றின் தகவல்களின் அடிப்படையிலேயே தாம் இக்கருத்தை முன் வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
     
    இந்த தீவிரவாத கொள்கைகள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானவை என்றும்   அவர் தெரிவிவித்துள்ளார்.
     
    கடந்த காலங்களில் முஸ்லிம்களிடையே தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன. பள்ளிவாசல்கள், குர்ஆன் பள்ளிகளை மையப்படுத்தி அவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பொதுபல சேனா, ராவண போன்ற பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் உண்மைக்கு புறம்பான பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருந்த நிலையில்தான் சஹ்ரான் குழுவினரின் தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதல் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்குளும் இன்றுவரை முன் வைக்கப்படுகின்றன என்பதையும் இவ்விடத்தில் இணைத்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.
     
    'இதுபோன்ற பெரும்பாலான நடவடிக்கைகள் கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன. மேலும் அரச புலனாய்வுத்துறை மற்றும் இராணுவப் புலனாய்வு இரண்டும் இந்த நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளன. நாட்டில் மீண்டும் தீவிரவாதமும் இனவெறியும் பரவ அனுமதிக்கமாட்டோம். இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நாங்கள் பணியாற்றி வருகிறோம்.' என்றும் பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
     
    முஸ்லிம்களின் மீது இத்தகையதொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட போதிலும், அது முஸ்லிம்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை விடவும், இனவாதத்தை ஒழிப்போம் என்று முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுக்களா என்பதே முஸ்லிம்களிடையே பேரதிர்ச்சியாக உள்ளது.
     
    ஆயினும், பொது பாதுகாப்பு அமைச்சரினால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்கள் தட்டிக் கழிக்கவும் முடியாது. முஸ்லிம்களிடையே அத்தகைய சிந்தனைகள் பரப்புரை செய்யப்படுமாயின் அது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதுதான்.
     
    அதேவேளை, இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம்களின் மீது வேறு ஏதாவது ஒரு திட்டமிட்ட திரைமறை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான முன் ஆயத்தமா என்ற கோணத்திலும் முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். முஸ்லிம்கள் அச்சப்படும் வகையில் இருக்குமாயின் அந்த தரப்பினர் யார் என்பதை கண்டு பிடிப்பதும், முஸ்லிம்களை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்.
     
    கடந்த காலங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த போதிலும், முஸ்லிம்களின் மீது தாக்குதல்களும் நடைபெற்றன. அப்போது அரசாங்கங்களும், முஸ்லிம் அமைச்சர்களும் அத்தாக்குதல்களுக்குரிய நீதியையும், தாக்குதல்தாரிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.
     
    இன்றைய ஆட்சியில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராகக் கூட நியமிக்கப்படவில்லை. இது முஸ்லிம்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமியுங்கள் என்ற கோரிக்கையைக் கூட இனவாத கோரிக்கையாக காண்பித்தார்களே அல்லாமல் அக்கோரிக்கையிலுள்ள நியாயத்தை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.
     
    இதேவேளை, கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் பிழைகளைக் கூட சரி என்று வாதிட்ட ஆதரவாளர்கள் இன்றைய ஆட்சியின் ஆதரவாளர்களிடமும் கணிசமாகக் காணப்படுகின்றனர். அதனால், ஆட்சி மாறிய போதிலும், ஆதரவாளர்களின் மனங்களில் மாற்றம் ஏற்படவில்லை என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்.
     
    முஸ்லிம்களை எல்லா ஆட்சியாளர்களும் அடக்கி ஆளும் நிலைப்பாட்டை பின்பற்றி வருகின்றார்கள். அத்தகையதொரு போக்கு இந்த ஆட்சியிலும் நீடிக்கின்றதா என்ற கேள்வியும் முஸ்லிம்களிடம் இருக்கின்றது. அன்று அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாகவே இருந்தார்கள். இன்றைய ஆட்சியில் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ளாமலேயே தேசிய மக்கள் சக்தியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌமாக இருக்கப் போகின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசப்படுகின்றன. அவை குறித்து தேசிய மக்கள் சக்தியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசாதிருப்பது குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது.
     
    கடந்த ஆட்சியாளர்களினால் முஸ்லிம்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பல்வேறு பெயர்களினால் இனவாத சிந்தனையில் பறிக்கப்பட்டுள்ளன. அவற்றை தேசிய மக்கள் சக்தியில் வழங்கப்பட வேண்டும். அதற்கு மாறாக கடந்த ஆட்சியாளர்கள் போன்று முஸ்லிம்களின் காணிகளை பறித்தமைக்கு நியாயம் கற்பிக்கப்படுமாயின் அல்லது மௌனநிலை கடைப்பிடிக்கப்படுமாயின் முஸ்லிம்களின் விடயத்தில் ஆட்சி மாறிய போதிலும் காட்சி மாறவில்லை என்பதே உண்மை என்றாகிவிடும்.
     
    ஒரு சமூகத்தின் பூர்வீகக் காணிகளை பறிப்பதும், அச்சமூகத்தை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டுவதுதான் மிகப் பெரிய பயங்கரவாத நடவடிக்கையாகும். இதனை இலங்கை முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கிலும், ஏனைய மாகாணங்களிலும் அனுபவித்துள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இன்னும் நிவாணரம் கிடைக்கவில்லை.
     
    இதே வேளை, முஸ்லிம்களிடையே தீவிரவாத சிந்தனைகள் பரப்புரை செய்யப்படுகின்றதென்ற விவகாரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதற்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்புக்களுடன் கலந்துரையாடி இருக்கலாம் என்ற கதையாடலும் முஸ்லிம்களிடையே காணப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பல முஸ்லிம் அமைப்புக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள் சக்தியினரும் பல முஸ்லிம் அமைப்புக்களோடு தேர்தல் காலங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
     
    புலனாய்வு தரப்பினர் சரியான தகவல்களை ஆட்சியாளர்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட:டுக்களையும் காலத்திற்கு காலம் ஆட்சியாளர்கள் முன் வைத்துள்ளார்கள். அதனால், இன்றைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களிடையே தீவிரவாத சிந்தனை பரப்புரை செய்யப்படுகின்றது என்பதை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்ததன் பின்னர் வெளிப்படுத்தி இருந்தால் இன்றைய ஆட்சியாளர்கள் குறித்து முஸ்லிம்களிடையே காணப்படும் நல்ல சிந்தனையில் இன்னும் முன்னேற்றம் கண்டிருக்கும்.
     
    இதே வேளை, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால முஸ்லிம்களிடையே தீவிர சிந்தனை பரப்புரை செய்யப்படுகின்ற என்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இலங்கையின் சிங்கள பத்திரிகைகளின் பிரதான தலைப்பு செய்திகளாக இடம்பிடித்துக் கொண்டன. சஹ்ரான் தாக்குதல்களினால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து முஸ்லிம்கள் மீண்டு கொண்டிருக்கின்ற நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கருத்துக்கள் சிங்கள மக்கள்  மத்தியில் முஸ்லிம்களின் மீதான நம்பிக்கையில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு  வாய்ப்புக்கள் உருவாகலாம்.
     
    தற்போது நாட்டில் நீதிமன்றத்தின் விசாரணைக் கூண்டில் நிற்பவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகின்றன. அத்தாக்குதலுடன் தொடர்புடைய சிங்கபுர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற பெண் எங்கே இருக்கின்றார் என்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு பிடியாணை பிறக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகியுள்ளார். இக்கட்டுரை எழுதும் வரைக்கும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
     
    இவை நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதில் கூட அரசியல் நகர்வுகள் இருக்கலாமென்று அரசாங்கத் தரப்பினரால் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றனர்.
     
    ஆட்சி மாற்றத்திற்காகவும், பௌத்த மேலாதிக்க கடும்போக்குவாதிகளானலும் இலங்கை முஸ்லிம்கள் அதிக தடவைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
     
    ஆதலால், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அத்தகைய குற்றச்சாட்டுக்கள் உண்மையாயின் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனை தொடர்ந்தும் பேசுபொருளாக வைத்துக் கொள்ளக் கூடாது. எந்தத் தரப்பினரும் இதனை வைத்து அரசியல் செய்வதற்கும் முற்படக் கூடாது.
     
    கடந்த காலங்களில் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  போன்ற பலர் குற்றவாளிகளாக காண்பிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் தெரியவந்தது. ஆதலால், குற்றச்சாட்டுக்களின் பேரில் அநீதியான கைதுகள் இடம்பெறாததொரு சட்டச் சூழலையும் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.
    (வீரகேசரி - 09.03.2025)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'முஸ்லிம்களிடையே தீவிரவாத சிந்தனை' மீண்டும் எழும் குற்றச்சாட்டு (வீரகேசரி - 09.03.2025) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top