• Latest News

    March 17, 2025

    உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கு (Virakesari 16.03.2025)

     


    எம்.எஸ்.தீன் -

    எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு எல்லா கட்சிகளைப் போலவும் முஸ்லிம் கட்சிகளும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி;ரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ்  ஆகிய கட்சிகளின் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இக்கட்சிகளின் முக்கியஸ்தர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இதனால் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமது செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயம் மேற்படி மூன்று கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளன.
     
    2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் தனித்தும், மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் போட்டியிட்டன. ஆயினும், ஏற்கனவே தம்வசம் இருந்த சில உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் இழந்தது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளின் அதிகாரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வசமானது. ஆயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸால் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே மேற்படி சபைகளில் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
     
    இந்நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பின்னடைவைக் கண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமது செல்வாக்கை மீளவும் நிலைநிறுத்துமா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. அதிலும், முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என கருதப்படும் அம்பாரை மாவட்டத்தில் சகல முஸ்லிம் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களையும் கைப்பற்றுமா என்பதுதான் பலத்த சந்தேகமாக இருக்கின்றது. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர்தான் உள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இப்போதைக்கு கட்சியோடு இல்லையென்று சொல்லும் வகையில்தான் அவருக்கான இடம் முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்றது.
     
    அது மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் செயற்பாட்டாளர்கள் பலரும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அக்கட்சியின் முன்னாள் பாரளூளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட், அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான முபீன், ஆரிப் சம்சுதீன் ஆகியோர்களும் தற்போது வேறு கட்சிகளில் இணைந்துள்ளார்கள்.
     
    இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது செல்வாக்கை மீளவும் நிலைநிறுத்துவதற்கு அதிக பிரயத்தனங்களை எடுக்க வேண்டியேற்படும் என்பது கவனத்திற்குரியது.
     
    இதே வேளை, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தமது அதிகாரத்தில் இருந்த சபைகளின் அதிகாரங்களை இழப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சி ஒரு காரணம் எனலாம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சிக்கு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்கள் அக்கட்சியில் இணைந்து கொண்டமை முக்கிய காரணமாகும்.
     
    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட செல்வாக்கோடு இருந்த நிலையில் அக்கட்சியில் முஸ்லிம் காங்கிரஸோடு அதிருப்தியடைந்து கட்சியை விட்டு விலகிய மற்றும் விலக்கப்பட்ட பலரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாட், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத், மாஹிர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர் (தற்போது பாராளுமன்ற உறுப்பினர்), அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஹனிபா மௌலவி, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் தாஜுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் என பலரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர்.
     
    இவர்கள் எல்லோருக்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலியும் 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சியும் இணைந்து செயற்படுவதற்கு ஆதரவு வழங்கினார்.
     
    இவர்களின் இந்த ஆதரவுதான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், அம்பாரை மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கும் காரணமாகும்.
     
    இதே வேளை, மேற்படி அரசியல்வாதிகளில் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவதற்கு காரணமாக இருந்தவர்களை அக்கட்சியின் தலைவர் றிசாட் பதியூதின் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்களும் முற்றாக மறந்துவிட்டுச் தங்களின் காரியம் நிறைவேறிவிட்டதென்ற தோரணையில், அவர்களை புறக்கணித்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. அரசியலில் நன்றியை எதிர்பாhக்க முடியாதல்லவா. அதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் விதிவிலக்கல்லவே.
     
    இந்தப் பின்னணியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொண்ட நிலையில், குறைந்த பட்சம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மீண்டும் நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலில் பெற்றுக் கொள்ளுமா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகின்றது.
     
    உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பெற்றுக் கொள்வது என்பது தனியே கட்சியின் செல்வாக்கில் மட்டும் தங்கியுள்ள விடயமன்று. கட்சியினால் நியமிக்கப்படும் வேட்பாளர்களின் தகுதிகள், தேர்தல் பிரச்சாரங்கள், மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எனப் பல விடயங்கள் செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயமில்லை.
     
    அரசியலை ஒரு வியாபாரமாகக் கருதி, அதில் முதலீடு செய்தால் தேர்தலின் பின்னர் இலாபம் அடைந்து கொள்ளலாமென்ற எண்ணத்தில் உள்ள கொந்தராத்துக்காரர்களும், அரசியல் பதவிகளின் ஊடாக உழைத்துக் கொள்ளலாமென்று கணக்கு போட்டுக் கொள்கின்றவர்களுக்குமே வேட்பாளராக போட்டியிடுவதற்கு முஸ்லிம் கட்சிகளினால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது வேட்பாளர்களை அவதானிக்கின்ற போது தெளிவாகின்றது.
     
    இதே வேளை, கிழக்கு மாகாணத்தில் தமது கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டுமென்தற்காக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு நேரடி விஜயம் செய்து அங்குள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து வேட்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.
     
    இதே வேளை, திறமையற்ற வேட்பாளர்களும் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும், தேசிய காங்கிரஸினதும் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
     
    இக்கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறு இருக்கின்ற நிலையில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பாhராளுன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரங்களை தேசிய காங்கிரஸ் தொடர்ச்சியாக பெற்று வருகின்றமையை இத்தேர்தலில் பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
     
    இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் அரசியல் நகர்வுகளும், பிரச்சினைகளும் இருக்கின்ற நிலையில் தேசிய கட்சிகளும், இன்றைய ஆளும் தேசிய மக்கள் சக்தியும் முஸ்லிம் பிரதேசங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
    ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம்கள் பெருந்தொகையான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு அளித்திருந்தார்கள். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம்கள் அவ்வாறு பெருந்தொகையான வாக்குகளை தேசிய மக்கள் சக்தியினால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு வழங்குவார்களா என்ற கேள்வியும் உள்ளது.
     
    இன்றைய ஆட்சியாளர்கள் ஊழலை ஒழிப்போம், எரிபொருட்களின் விலைகளை குறைப்போம், பொருட்களின் விலைகளை குறைப்போம் என்று பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக உள்ளன.
     
    இதனால், ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் முஸ்லிம் பிரதேசங்களில் அளிக்கப்பட்ட பெருந்தொகை வாக்குகளைப் போன்று உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளுக்கு அநுரகுமார திஸாநாயக்க என்ற தனிநபரின் கவர்ச்சியான பேச்சும், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், முன்னாள் ஆட்சியாளர்கள் குறித்து முன்வைக்கப்பட்ட ஊழல்களும்தான் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணமாகும்.
     
    இவற்றில் இப்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் குறித்து அதிருப்தியும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதுமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் பல உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் குறித்து பொது மக்களிடையே நல்லபிப்ராயங்கள் காணப்படுவதாகத் தெரியவில்லை. வேட்பாளர்கள் தெரிவுகள் பரந்துபட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டாமல் மூடிய அறைக்குள் ஒரு சிலரைக் கொண்டு தெரிவு செய்யப்பட்டமையே இதற்குரிய காரணமாகும்.
     
    எவ்வாறு இருந்தாலும் தேர்தல் வெற்றி என்பது இறுதிவரை மாற்றமடைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அதனால், முஸ்லிம் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை முஸ்லிம் கட்சிகள் பெற்றுக் கொள்ளப் போகின்றதா அல்லது தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளப் போகின்றதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
     
    என்றாலும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதில் முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் இடையே பலத்த போட்டி காணப்படும் என்பதே பலமான எதிர்பார்ப்பாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கு (Virakesari 16.03.2025) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top