எம்.எஸ்.தீன் -
அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை. நிரந்தர எதிரியுமில்லை என்று சொல்வார்கள். ஆனால், இப்போது அரசியலில் சூடுமில்லை, சொரணையுமில்லை என்று சொல்லும் படியாகவே முஸ்லிம் அரசியல் சென்று கொண்டிருக்கின்றது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் ஆளுக்காள் வசை பாடுவதில் கெட்டிக்காரர்கள். அதே போன்று தம்மை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதிலும் வல்லவர்கள். தமது உயர்வுக்கு பக்கதுணையாக இருந்தவர்களை நன்றியுணர்வு இல்லாது கழுத்தறுப்பதிலும் கில்லாடிகள். இவர்களின் வசைபாடுதல், மன்னிப்பு வழங்கல், கழுத்தறுத்தல் போன்றவற்றின் பின்னால் சுயநல அரசியலைத் தவிர வேறு எதனையும் காண முடியாது. சமூக சிந்தனையில்லாவர்களே முஸ்லிம் அரசியலில் நிறைந்துள்ளார்கள்.
ஆயினும், இவர்களின் இத்தகைய செயற்பாடுகளின் பின்னால் உள்ள நயவஞ்சகத்தை அறிந்து கொள்ளாத ஆதரவாளர்கள் தங்களிடையே முட்டி மோதி கோடு கச்சேரி என்று அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய ஆதரவாளர்கள் பாவம் என்று சொல்வதை விடவும், முட்டாள்கள் என்றே சொல்லுதல் வேண்டும்.
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற அரசியல் தலைவர்களும், வெறித்தனமான ஆதரவாளர்களும் இணைந்து முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சிதைத்துள்ளார்கள். பேரம் பேசும் சக்தியை அழித்து, இழிநிலை அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
கட்சியின் வளர்ச்சிக்கு தன்னலம் பாராது உழைத்தவர்களை கிஞ்சித்தும் கவனத்திற் கொள்ளாது புறக்கணிப்பதையும், பணம் படைத்தவர்களையும், கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களையும், மிகவும் கீழ்தரமாக விமர்சித்தவர்களையும் இணைத்துக் கொண்டு வெட்கம் கெட்ட அரசியல் செய்கின்றவர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முதல் முக்கிய அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள்.
இதனை கடந்த உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலில் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
இவ்வாறு ஒரு அரசியல் கட்சி செயற்படுகின்ற போது நாளடையில் அக்கட்சி பலவீனமடைந்துவிடும். முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை எடுத்துக் கொண்டால், இக்கட்சிகள் படிப்படியாக பலமிழந்து கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் பலவீனமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு தேர்தல் முடிவுகள் நல்லதொரு எடுத்துக் காட்டாகும்.
இப்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், உயர்பீடமும் கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு கட்சிக்கு எதிராக செயற்பட்ட வாக்குகளை வைத்துள்ளவர்களுக்கு வலை வீசிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸின் இச்செயலில் கட்சியின் ஆதரவளர்கள் பெரும் அதிருப்தியுடன் இருக்கின்றார்கள்.
ஒரு அரசியல் கட்சியில் ஒருவர் இணைந்து கொள்கின்றார்கள் என்றால், அவரை விடவும் அக்கட்சி பலமாக இருப்பதே முதற் காரணமாக இருக்கும். அவர் அக்;கட்சியை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளவே நினைக்கின்றார். அதே வேளை, அந்த நபரின் தனிப்பட்ட செல்வாக்கை கட்சிக்குள் பாய்ச்சி வீரியமடைந்து கொள்வதற்கு கட்சி நினைப்பதுமுண்டு.
இந்த அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸையும், ரவூப் ஹக்கீமையும் கடும் சொல்லால் படு மோசமாக விமர்ச்சனம் செய்தவர்தான் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆவார். முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி தேவையில்லை. ஆயினும், தேசிய கட்சிகளின் ஊடாக இனி பாராளுமன்றம் செல்ல முடியாதென்று உணர்ந்த நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பசீர் சேகுதாவூத், நசீர் அஹமட், முபீன் உட்பட இன்னும் சிலரும் முஸ்லிம் காங்கிரஸை விட்டு வேறு கட்சிகளில் இணைந்து கொண்டமையையும், அவாகளினால் ஏற்பட்டுள்ள வாக்குச் சரிவை ஏறு முகமாக்குவதற்கும் ஹிஸ்புல்லாஹ்வை இணைத்துக் கொள்வதே சாத்தியம் என்று ரவூப் ஹக்கீம் கருதினார்.
ஆகவே, இவர்களின் எண்ணத்தில் சமூகம் பற்றிய சிந்தனையை விடவும், பதவியும், செல்வாக்கும் முக்கியம் என்ற எண்ணமே செல்வாக்கு பெற்றிருந்தது. முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெற்றார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் காத்தான்குடி பிரதேச சபையின் அதிகாரத்தை ஹிஸ்புல்லாஹ்வின் உதவியில் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இதனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகக் பேசப்படும் அம்பாரை மாவட்டத்தில் பின்னடைவைக் கண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே பெற்றுக் கொண்டது. அதற்கு முதல் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அக்கட்சி அம்பாரை மாவட்டத்தில் பெற்றிருந்தது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸை தேர்தலில் போட்டியிடத் தடுத்தமை, இடைநிறுத்தி வைத்துள்ளமையும் முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய வீழ்ச்சிக்கொரு காரணமென்றும் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் முதுநபீனை கட்சியில் இணைத்து, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை தூக்கி நிறுத்தலாம் என்று ரவூப் ஹக்கீம் நம்புகின்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூலமாக பாராளுமன்ற உறுப்பினரான முஸரப் முதுநபீன், இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் முஸரப் முதுநபீன் தலைமையிலான சுயேட்சைக் குழு அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பொத்துவில் பிரதேசத்தின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
அதனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலாவது முஸரப் வெற்றி பெற வேண்டுமாயின் ஏதாவதொரு முஸ்லிம் கட்சியில் இணைந்து செயற்பட வேண்டும். இவரின் இந்த விருப்பத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றப் போவதில்லை. அதனால் முஸ்லிம் காங்கிரஸ்தான் இருக்கின்ற அடுத்த தெரிவாகும். இங்கு பலவீனமாக உள்ள இரு தரப்பும் இணைந்து கொள்ளும் போது இரண்டு தரப்பினரும் பலமடைந்திடலாமென்று கூட்டல் கணக்கில் ஈடுபட்டுள்ளனர்.
முஸரப் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டார். இத்தேர்தல் பிரச்சாரத்தில் ரவூப் ஹக்கிமை மிகவும் மோசமாக அவரது வயதையும் கடந்து விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி சகல மூத்த அரசியல்வாதிகளையும் கிண்டல் அடித்தார்.
இப்போது முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்குரிய அனைத்து கருமங்களையும் பூர்த்தி செய்து விட்டார்.
முஸரப் உங்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தவர். அவரை கட்சியில் இணைத்துக் கொள்வதில் பிரச்சினைகள் இல்லையா என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரவூப் ஹக்கிம் அளித்த பதில் பல தரப்பினராலும் விமர்சிக்கப்படுகின்றன.
அரசியலுக்காக எதனையும் செய்வார்கள். அவர்களுக்கு வாக்குகள்தான் முக்கியம். கொள்கை கோட்பாடு எதுவும் கிடையாதென்று தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தல் வெற்றிக்காக விமர்சனம் செய்வது வழமையானது என்றும், முஸரப் மேடைகளில் என்னை விமர்சனம் செய்தாலும், தனிப்பட்ட சந்திப்புக்களில் என்னோடு மரியாதையாக நடந்து கொள்வார் என்றும் ரவூப் ஹக்கீம் அளித்துள்ள பதிலானது, தேர்தல் வெற்றிக்காக மக்களிடம் பல பொய்களை சொல்லியுள்ளோம் என்று சான்று பகர்வதைப் போன்றுள்ளது.
யார் எப்படி படுமோசமாக மேடைகளை பயன்படுத்திக் கொண்டாலும், நாங்கள் திரைமறையில் பேசி கதைத்துக் கொண்டுதான் இருக்கின்றோம் என்று சொல்வதாகவும் இருக்கின்றது.
முஸரப்புக்கு அரசியலில் ஒரு கொள்கை கிடையாதென்பதே பலரது அபிப்ராயமாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவுடன், அக்கட்சியின் தீர்மானங்களுக்கு மாற்றமாக செயற்பட்டார். பின்னர் கோத்தாவுடன் இணைந்து கொண்டார். அதன் பின்னர் ரணிலுடன் இணைந்து செயற்பட்டார். இப்போது ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செல்வதற்கு தயாராகிவிட்டார். இதன்பின்னர் யாரோடு இருப்பார் என்று சொல்லவும் முடியாது.
இதே வேளை, முஸரப் முதுநபீனை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்வதற்கு பலத்த எதிர்ப்புக்களும் உள்ளன. முஸரப்பை கட்சியில் இணைத்துக் கொண்டால், கட்சியிலிருந்து விலகிக் செல்வதற்கு சிலர் தயாராகியுள்ளார்கள். இவ்வாறு நிகழும் போது அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களிலும் முஸ்லிம் காங்கிரஸிற்கு மேலும் பின்னடைவுகள் ஏற்படலாம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்குரிய நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கு றிசாட் பதியூதீனும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஹரீஸை இணைத்துக் கொள்ளும் விடயத்தில் றிசாட் பதியூதின் சகோதாரர் ஒருவர் பின்புலத்தில் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
ஆயினும், எந்தளவுக்கு ஊர்ஜிதமானதென்று அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எல்லா வட்டாரங்களிலும் இதுவே கதையாகியுள்ளது.
ஹரீஸின் நகர்வை றிசாட் பதியூதின் புரிந்து கொள்வது என்பது கடினமாக காரியமாகும். தம்மை முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்குரிய ஒரு நகர்வாகக் கூட இதைப் பார்க்க வேண்டும். மேலும், ஹரீஸை இணைத்துக் கொள்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடத்தில் உள்ள அம்பாரை மாவட்ட உறுப்பினர்கள் பலரும் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக இருக்கட்டும், முஸ்லிம் காங்கிரஸாக இருக்கட்டும் கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை இணைத்துக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்றாலும், அதனால் கட்சி வளர்ச்சியடைந்துவிடும் என்று சொல்ல முடியாது. இப்போது இருக்கின்ற வீழ்ச்சியை வேகமாக்கவும் செய்யலாம். ஆதலால், கட்சியின் வீழ்ச்சிக்கு என்ன காரணமென்று அடையாளங் காண வேண்டும். அதைச் செய்யாது, புதியவர்களை இணைத்துக் கொள்வதனால், கட்சியில் தற்போது இருக்கின்றவர்கள் பிரிந்து செல்வார்கள் என்ற எதிர்விளைவை ரவூப் ஹக்கிம் மற்றும் றிசாட் பதியூதீன் ஆகியோர்கள் புறக்கணிக்க முடியாது.
இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கம்பெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்ற நிலையாகியுள்ளது. கட்சியின் வரலாற்றை தெரியாதவர்கள், தலைமைத்துவத்திற்கு பலம் சேர்த்தவர்கள் யாரென்று அறிந்திராத சிற்றினத்தவர்களின் ஆதிக்கம் அக்கட்சிக்குள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. புதியவர்களை தலையில் ஏற்றிக் கொண்டு சாதனை படைக்கலாமென்று கணிக்கின்றார்கள். சிறுபிள்ளை செய்யும் வேளாண்மை வீடு வந்து சேராது என்று சொல்வார்கள். இதன் உண்மையை 2025 மே மாதம் 06ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பலரும் புறக்கணிப்பட்டுள்ளார்கள். மாற்றுக் கட்சிகளில் அரசியல் செய்து, புதிதாக இணைந்து கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று சிறுபிள்ளைத்தனமாக கதை கூறுகின்றவர்கள். அது மட்டுமன்றி வேட்பாளர் தெரிவை உள்ளுர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்தமை றிசாட் பதியூதீன் செய்த மிகப் பெரிய தவறாகும். இத்தகைய தவறுகள்தான் கட்சியின் வளர்ச்சிக்கு தடைகளை ஏற்படுத்தும்.
முஸ்லிகளிடையே செல்வாக்கை அதிகரித்து ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்த இடத்தை தமது கட்சி அடைந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு கனவு காணுகின்ற றிசாட் பதியூதின், தமது கட்சிக்குள் நடந்தேறிக் கொண்டிருக்கின்ற ஏற்றுக் கொள்ள இயலாத செயல்களில் கவனம் செலுத்தாது இருப்பாராயின், அவரது ஆசை நிராசையாகிவிடும்.
Virakesari 25.05.2025
0 comments:
Post a Comment