• Latest News

    September 03, 2025

    கடும் விமர்சனமாகியுள்ள ஜனாதிபதியின் கச்சதீவு விஜயம்!


    ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்கவின் இம்மாதம் முதலாம் திகதி கச்சத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த விஜயம் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
     
    ஜனாதிபதி கச்சத்தீவிற்கு படகில் பயணம் செய்தபோது உயிர்க்காப்பு அங்கி அணியாது பயணம் செய்திருந்தார்.
     
    ஜனாதிபதி மட்டுமன்றி அவரோடு பயணித்த அமைச்சர்களும் உயிர்காப்பு அங்கிகளை அணியாது படகில் பயணம் செய்திருந்தனர்.
     
    ஒரு நாட்டின் தலைவர் மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் எனவும், உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்வது ஆபத்தானது எனவும், சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
     
    ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டிருந்த ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய இது தொடர்பில் தனது முகநூலில் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
     
    ஜனாதிபதி படகில் பயணித்தபோது உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்தது சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
     
    குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணியாதது, வாகனத்தில் பயணம் செய்யும்போது இருக்கை பட்டி அணியாதது போன்றே படகில் பயணிக்கும் போது உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்வதும் சட்டவிரோதமானது எனவும், அது கட்டாயமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
     
    கடந்த 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா பிரதமர் இவ்வாறு உயிர் காப்பு அங்கி அணியாது பயணித்தமைக்காக 250 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
     
    2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் சிட்னி துறைமுகப் பகுதிக் கடலில் உயிர்க்காப்பு அங்கி அணியாமல் பயணித்ததனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
     
    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சர்களான ராமலிங்கம் சந்திரசேகரன், ஆனந்த விஜயபால மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரால் புத்திக லியனகே ஆகியோர் ஜனாதிபதியுடன் இந்த பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.
     
    ஜனாதிபதி இவ்வாறு உயிர்க்காப்பு அங்கி அணியாமல் பயணம் செய்தது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடக, சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் அனுருத்த லொகுஹபுவாராச்சி தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.
     
    ஜனாதிபதி உயிர்க்காப்பு அங்கி அணியாமல் பயணம் செய்தது நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.
     
    கச்சத்தீவு விஜயம் வரலாற்று ரீதியாகவும், குறியீட்டு ரீதியாகவும் முக்கியத்துவமானது எனவும், நாட்டின் இறைமையை பறைசாற்றும் வகையில் இந்த விஜயம் அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டிய அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
     
    உயிர் காப்பு அங்கி அணிய வேண்டியது அவசியமானது என்ற போதிலும் ஜனாதிபதிக்கு போதிய அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
     
    கச்சத்தீவு விஜயம் நாட்டின் கௌரவம் தொடர்பான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டது எனவும், இதனால் தலைவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில குறியீட்டு ரீதியான தெரிவுகளை மேற்கொள்வதாகவும், கடற் படையினர் மீது ஜனாதிபதிக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அவர் உயிர்க்காப்பு அங்கி அணியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
     
    நாட்டின் இறையாண்மையை பறைசாற்றுவதை முதன்மை நோக்காக கொண்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
     
    இவ்வாறான செயற்பாடுகளில் உலகில் அனேக தலைவர்கள் ஈடுபட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியில் இருந்த காலத்தில் உயிர்க்காப்பு அங்கி இல்லாமல் விடுமுறை காலத்தில் படகு செலுத்தி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
     
    ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் உயிர்க்காப்பு அங்கி அணியாது படகுகளில் பயணம் செய்துள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அனுருத்த லொகுஹபுவாராச்சி தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
     
    மேற்படி நாடுகளின் தலைவர்கள் உயிர்க்காப்பு அங்கி அணியாது படகுகளில் பயணம் செய்துள்ளனர் என்பதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் உயிர்க்காப்பு அங்கி அணியாது சென்றமையை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஜனாதிபதியின் பாதுகாப்பு முக்கியம். மற்றையது நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கொள்கையை அரசாங்கம் பின்பற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்ற அரசியல் சூழலில் கச்சதீவுக்கு படகில் பயணித்த ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் முதலியவர்கள் உயிர்க்காப்பு அங்கியை அணிந்திருக்க வேண்டுமென்ற விமர்சனங்கள் நியாயமானதாகும்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடும் விமர்சனமாகியுள்ள ஜனாதிபதியின் கச்சதீவு விஜயம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top