கிழக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் திணைக்களத் தலைவர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மீழாய்வுக் கூட்டம் அக்கரைப்பற்று ரீ.எப்.சீ கூட்ட மண்டபத்தில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஜெய்க்கா நிருவனத்தினத்தினூடாக பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் அட்டாளைச்சேனை தெரிவு செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட விடயம் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்ட விடயமாக காணப்பட்டது.
ஜெய்க்கா திட்டம் தொடர்பாக அதன் திட்டப்பணிப்பாளர் விளக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஏற்கனவே இப்பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த அட்டாளைச்சேனை பிரதேசம் எவ்வாறு தற்போது அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தானாகவே முன்வந்து பதிலளித்த அமைச்சர் உதுமாலெப்பை இப்பட்டியலில் ஒரு போதும் அட்டாளைச்சேனை உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்றும் தான் அட்டாளைச்சேனை பிரதேசத்தை பட்டியலில் இருந்து நீக்கி அட்டாளைச்சேனையின் அபிவிருத்திக்கு தடையாக இருந்ததாகவும்இ தனது சொந்தத் தாயை காட்டிக் கொடுப்பதற்கு இது ஒப்பானது எனவும் ஊடகங்களில் எனக்கெதிராக திட்;டமிட்டு சிலர் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்பதோடு சில அதிகாரிகள் வேண்டுமென்றே தான்தோன்றித்தனமாக செயற்பட்டு சிக்கல்களை உருவாக்குவதாக அமைச்சர் விசனம் தெரிவித்தார்.
அமைச்சர் உதுமாலெப்பை அதிகாரிகள் என்று இங்கு குறிப்பிட்டது தன்னையே என்றும் அதனால் தான் இதற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்ட முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் இதன்போது ஒரு கடிதத்தை சபையின் பார்வைக்கு கொண்டுவந்தார். குறித்த கடிதத்தில் அட்டாளைச்சேனை ஓட்டமாவடி மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களை ஜெய்க்கா திட்டத்தில் இணைத்துக் கொள்ளும்படி முதலமைச்சரால் கையொப்பமிடப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையிலேயே தான் செயற்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையிடமிருந்து திட்ட முன்மொழிவுகளை பெற்று செயற்படுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார். தவிர தான் தான்தோன்றித்தனமாக செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் முதலாவது பட்டியலிலும்சரி இரண்டாவது பட்டியலிலும்சரி அட்டாளைச்சேனை உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்றும் இது வேண்டுமென்றே அதிகாரிகளால் செய்யப்பட்ட பிழையான வேலை என்றும் அமைச்சர் உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
இதன்போது இந்த வாக்குவாதத்தில் நுழைந்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் முதலமைச்சரின் உத்தரவு அமைச்சராலேயே கேள்விக்குட்படுத்துகின்ற அளவில் இருப்பது இந்த மாகாண அமைச்சரவையினையே கேள்விக்குட்படுத்துகின்றது என்றும்இ அட்டாளைச்சேனையில் பிறந்த அமைச்சர் உதுமாலெப்பை தனது பிரதேசம் பட்டியலில் உள்ளவாங்கப்பட்டிருக்கவில்லை என்பதை சாதிப்பதிலேயே அவரது முழு பலத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் தவிர இதுவரை அட்டாளைச்சேனை பிரதேசத்தை இத்திட்டத்தில் உள்வாங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வார்த்தையேனும் பேசாத அமைச்சர் முதலமைச்சரால் அட்டாளைச்சேனை உள்வாங்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட உத்தரவை அட்டாளைச்சேனையை உள்வாங்குவாதற்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக முதலமைச்ருடைய உத்தரவு தவறானது என்று இங்கு வாதிட்டுக்கொண்டிருக்கின்றார். இவ்வாறெல்லாம் தனது சொந்த பிரதேச அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றபோது தாயைக் காட்டிக் கொடுத்ததற்கு இது சமனானது என கூறுவதில் என்ன தவறிருக்கப்போகின்றது என்றும் சபையில் கேள்விக் கணை தொடுத்தார்.
முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு உள்வாங்கப்பட்ட ஏனைய பிரதேச சபைகள் திட்டத்திலிருந்து நீக்கப்படாதிருக்கின்ற அதேவேளை அட்டாளைச்சேனை பிரதேசம் மட்டும் நீக்கப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது எனவும் தன்னால் மாத்திரம் அல்லது தனக்கூடாக மாத்திம்தான் அபிவிருத்தி நடைபெற வேண்டும் என்ற மனப்பாங்கோடு ஏனைய எல்லா அபிவிருத்திகளையும் தடைசெய்வதானது தனது தாய் மண்ணை காட்டிக்கொடுப்பதற்கு ஒப்பானதன்றி வேறென்னவென்று கூறமுடியும் எனவும் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் கேள்வி எழுப்பினார்.
ஆனால் தொடர்ந்தும் அட்டாளைச்சேனை பிரதேசம் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கான நியாயங்களை எடுத்து வைப்பதிலேயே அமைச்சர் உதுமாலெப்பை கரிசனையாக இருந்ததோடு வறுமைச் சுட்டெண் அடிப்படையில் அட்டாளைச்சேனை 35 ஆவது இடத்தில் இருப்பதனால் அட்டாளைச்சேனை தெரிவு செய்யப்படுவதற்கு சாத்தியப்பாடுகள் இல்லையெனவும் வாதிட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேசம் உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அட்டாளைச்சேனை பிரதேசம் தெரிவு செய்யப்பட்டதாக உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்து அது தொடர்பில் மக்களிடம் சென்று முன்மொழிவுகளைப்பெற்ற தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்களிடம் மீண்டும் சென்று எதனைக் கூறுவது எனவும் கேள்வி எழுப்பினார்.
இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை உள்வாங்கப்பட வேண்டும் என்பதற்காக மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மிகுந்த ஆக்ரோசமாக இங்கு வாதிட்டார். இருந்தபோதும் அட்டாளைச்சேனை பிரதேசம் குறித்த திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கான தீர்மானமெதுவும் இறுதிவரைக்கும் எட்டப்படவில்லை.
0 comments:
Post a Comment