எகிப்து சினாய் பகுதியில் நடைபெறும் யுத்தம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு நிலைமை மோசம் என்பதில் இருந்து, படுமோசம் என்ற நிலைக்கு
போயிருக்கிறது. எந்த நிமிடத்திலும் மிகப்பெரிய யுத்தம் வெடிக்கலாம் என்ற
நிலை காணப்படுகிறது.
தீவிரவாத இயக்கத்தினருக்கு எதிராக எகிப்திய ராணுவம் சினாய் பகுதியில் தொடங்கிய தாக்குதலுக்கு ‘ ‘
பாலைவன
புயல்
’’ (‘Desert Storm’) என்று பெயரிடப்பட்டுள்ளது.
எகிப்திய ராணுவத்தின் 2-ம், 3-ம் படையணிகள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன.
2-ம் படையணி தளபதி ஜெனரல் அஹ்மெட் வாஸ்ஃபி தலைமையில் சினாய் வடபகுதியில்
உள்ள எல்-அரிஷ் என்ற இடத்தில் முகாமிட்டுள்ளது. 3-ம் படையணி, மத்திய
சினாய் பகுதியில் நக்ஹால் என்ற கிராமத்தில் பிரதான ஆபரேஷன் சென்டரை
அமைத்துள்ளது. இந்தப் படையணிக்கு ஜெனரல் ஒசாமா அஸ்கார் தலைமை தாங்குகிறார்.
இந்த இரு லொகேஷன்களும் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
எப்படியென்றால், இவற்றுக்கு இடையே உள்ள பகுதிகளில்தான் அல்-காய்தா ஆதரவு
இயக்கத்தின் பலமான பகுதிகள் உள்ளன. காசா எல்லை வழியாக ஹமாஸ் இயக்கத்தினர்
ஊடுருவுவதையும் இங்கிருந்து கண்காணிக்கவோ, தடுக்கவோ முடியும்.
சினாயில் தரையிறங்கிய படைப்பிரிவுகள், நேற்றுமுதல் எகிப்து – காசா எல்லையை மூடி சீல் வைத்து விட்டனர்.
எகிப்து – காசா எல்லையில் யாராவது தென்பட்டால் சுடப்படுவார்கள் என்றும்,
எல்லைப் பகுதியை நோக்கி காசாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது ராக்கெட்
தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், எகிப்து ராணுவ தலைமையகம், காசாவில்
உள்ள ஹமாஸ் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது.
இதனால், எல்லைப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உள்ளது.
இந்த எல்லை வழியாக ஏற்கனவே காசாவில் இருந்து சினாய் பகுதிக்குள்
வந்துவிட்ட சுமார் 1000 ஹமாஸ் போராளிகள், தற்போது மீண்டும் காசா
பகுதிக்குள் திரும்பிச் செல்ல முடியாதபடி, ரஹ்ஃபாவில் எல்லை மூடப்பட்டு
விட்டது.
இவர்கள் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்திவிட்டு, காசாவுக்குள் செல்ல
முயற்சிக்கலாம். அல்லது, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் எல்லையை
தாக்கி தமது ஆட்களை மீட்டுச் செல்ல முயற்சி செய்யலாம்.
இந்த இரண்டில் எந்த முயற்சி நடந்தாலும், இங்கு பெரிய ரத்தக் களறி ஏற்படுவதை தடுக்க முடியாது.
‘ஆபரேஷன் ஃபாட்டா-2’ முடியும்வரை எல்லை திறக்கப்பட மாட்டாது என்று
எகிப்திய ராணுவம் அறிவித்துள்ளது. அவர்களது இரு பெரிய படைப்பிரிவுகள் இங்கு
உள்ளதால், இந்த எல்லையை தமது முழுமையான கட்டுப்பாட்டில் அவர்களால்
ஆபரேஷன் முடியும்வரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இங்குள்ள சூழ்நிலை கடும் பதட்டத்தில் உள்ளதால், எகிப்து, மற்றும் காசா
எல்லையில் உள்ள இஸ்ரேலிய பகுதிகளில், ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. இங்கு
மேலதிக துருப்புக்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளனர். பீரங்கிகள்
மற்றும் குறும் தூர ஏவுகணைகள் எல்லைப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சினாய் பகுதியில் உள்ள அல்-காய்தா ஆட்கள் இஸ்ரேலிய பகுதிகளை நோக்கி தாக்கலாம்
ஆனால், சினாய் பகுதியில் உள்ள அல்-காய்தா ஆட்கள் இஸ்ரேலிய பகுதிகளை நோக்கி தாக்கலாம். கடந்த காலத்தில் தாக்கியும் உள்ளார்கள்.
இதனால், இஸ்ரேலிய ராணுவமும் உஷார் நிலையில் உள்ளது.
விவகாரம் இவ்வளவுதான் என்றில்லை. சினாய் தென் பகுதியில் செங்கடல்
கரையோரமாகவும், சூயஸ் கால்வாயிலும் இரு அமெரிக்க கப்பல்கள் நங்கூரமிட்டு
நிற்கின்றன. இந்த இரண்டு கப்பல்களுமே, ஹெலிகாப்டர் தாங்கி ரக கப்பல்கள்.
இரண்டிலுமாக சேர்த்து மொத்தம் 2,600 மரைன் படை வீரர்கள் உள்ளனர்.
சினாய் பகுதிக்கு உள்ளே எகிப்திய ராணுவமும், தீவிரவாத அமைப்புகளும்
சண்டையிட்டால், அமெரிக்க படையினர் தலையிடாமல் வேடிக்கை பார்ப்பார்கள்.
ஆனால், சினாய் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்,
இவர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
தீவிரவாத அமைப்பினர், எகிப்து ராணுவத்தின் மீது தாக்குதலை
தொடங்கியுள்ளனர். இதுவரை பெரிய அளவிலான தாக்குதல்கள் ஏதும் நடக்கவில்லை.
அதே நேரத்தில் பெரிய அளவிலான தாக்குதல் ஒன்றை நடத்த தீவிரவாத இயக்கங்கள்
தயார் செய்ய தொடங்கியுள்ளதாக உளவு வட்டார தகவல் உண்டு.
அவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை சினாய் பகுதிக்குள் ஏற்கனவே கடத்தி வந்து விட்டார்கள்.
அல்-காய்தா ஆதரவு சலாஃபி பெதோயின் ஆட்கள், முஸ்லீம் சகோதர சமூக ஆட்கள்
(Muslim Brotherhood), மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் இங்கு ஆக்டிவ்வாக
உள்ளார்கள். இவர்கள் சில பகுதிகளில் ஒன்றிணைந்து எகிப்திய ராணுவத்துக்கு
எதிராக சிறுசிறு தாக்குதல்களை நடத்துகிறார்கள்.
இவர்கள், எகிப்திய ராணுவத்தின் இரு படைப்பிரிவுகளும் முகாமிட்டுள்ள
இடங்களுக்கு (எல்-அரிஷ், நக்ஹால்) இடைப்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளை
கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில்
ஈடுபடுகிறார்கள்.
இந்தப் பாதைகளை இவர்கள் ப்ளாக் செய்தால் என்னாகும்?
எகிப்திய ராணுவத்தின் இரு படைப் பிரிவுகளுக்கும் இடையிலான தரைத் தொடர்புகள் அறுந்து போகும் என்பது ஒன்று.
அது மட்டுமல்ல, எகிப்து – இஸ்ரேல் எல்லையில் உள்ள எல்லை கடக்கும் இடமான
நிட்ஸானா டர்மினலுக்கு யாரும் போக முடியாது. அத்துடன், அமெரிக்கா
தலைமையிலான பன்னாட்டு கண்காணிப்பாளர் மையம் ஒன்று அல்-கோரா என்ற இடத்தில்
உள்ளது. அதற்கான போக்குவரத்தும் அடைபட்டுவிடும்.
அப்படி நடந்தால், இந்த பாதைகளில் நிலைகொண்டுள்ள தீவிரவாத இயக்கத்தினர் மீது எகிப்திய ராணுவம் தாக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலே தரப்பட்டுள்ளவைதான், எகிப்து, சினாய் பகுதியில் உள்ள போர்
வியூகங்கள். இவற்றை புரிந்து கொண்டால், யார் எங்கே தாக்கினாலும், என்ன
நடக்கிறது என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எல்லோரும்
ரெடி. முதலில் தாக்கப்போவது யார் என்பதுதான், தற்போதுள்ள கேள்வி.
0 comments:
Post a Comment