• Latest News

    August 25, 2013

    முஸ்லிம்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு புதிய சக்தி ஒன்றே அவசியமாகும்!


    சஹாப்தீன் -
    வடக்கு, வடமத்தி, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கு இன்னமும் 26 நாட்கள் இருக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்துக் கட்சிகளும் தந்திரங்களை கையாண்டு வருகின்றன. இதே வேளை, நாட்டில் பௌத்த கடும்போக்கு இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் எவ்வாறு இந்தத் தேர்தலைப் பயன்படுத்தி தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டப் போகின்றார்கள் என்பதனை மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாத மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம்களும், ஏனைய சமூகத்தவர்களும், சர்வதேச சமூகமும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
    முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், காணிகள், வியாபாரங்கள், இஸ்லாமிய உடை அமைப்பு, உணவுப் பழக்கம் போன்ற பல விடயங்களில் பௌத்த கடும் போக்கு இனவாதிகள் தலையீடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டு வருகின்ற இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், அத்தகைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசாங்கம் தமது அரசியல் இலாபத்தைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்காது. அவர்களுக்கு அடைக்களம் அளித்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சியினரால் மிகவும் தந்திரமாக கையாளப்பட்டு வருகின்றன.
    எதிர்க் கட்சிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களும், முஸ்லிம்களின் எண்ணங்களும் இருக்கின்ற நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள்; செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றன. மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில் முஸ்லிம் வாக்காளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநியாயங்களை தடுத்து நிறுத்துவதற்கு ஆவணை செய்யாத இன்றைய அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாதென்று எதிர்க் கட்சிகள் குறிப்பாக ஐ.தே.க முஸ்லிம்களிடம் வேண்டுகோள்களை விடுத்துக் கொண்டிருக்கின்றன.
    முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளைப் பற்றி அரசாங்கம் ஒரு விதத்தில் பாராமுகமாக இருந்து கொண்டிருக்கின்றது என்பதனை மறுதலிக்க முடியாது. ஆயினும், ஐ.தே.க முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டு வருகின்ற எதிர் வினைகளையிட்டு முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் சூடான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டுக் கொண்டாலும், எதிர்க் கட்சிகளும், அக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரதானிகளும் முஸ்லிம்களுக்கு எதிரானவைகளை தடுத்து நிறுத்துவதற்கு எடுத்துக் கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் கண்டு கொள்ள முடியாதுள்ளன. முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சியான ஐ.தே.க எடுத்துக் கொண்ட சட்ட நடவடிக்கைகள் என்னவென்று கேட்க விரும்புகின்றோம்.

    பௌத்த கடும்போக்கு இனவாதிகளுக்கு எதிராக முறையாகச் செயற்பட்டு, அவர்களின் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொள்ளக் கூடாதென்ற தோரணையில் இருந்து கொண்டு, வெறும் அறிக்கைகளை ஊடகங்களுக்கு அனுப்பி, அவற்றின் மூலமாக முஸ்லிம்களை தங்களது பக்கத்திற்கு இழுத்துக் கொள்வதற்கே ஐ.தே.க குறியாக இருந்து கொண்டிருக்கின்றது.
    ஹலால் விடயத்திலும், இறைச்சிக்காக மாடு அறுப்பது விடயத்திலும் வேறு விடயங்களிலும் ஐ.தே.க ஒரு தெளிவான நிலைப்பாட்டை கட்சி ரீதியாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சில பௌத்த தேரர்களின் தலைமையிலான பௌத்த கடும்போக்கு இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற  நடவடிக்கைகளுக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் அக்கட்சியில் இருக்கின்றார்கள். ஆதலால், ஐ.தே.க முஸ்லிம்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று உறுதிபட நம்ப முடியாது. அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு விளைகின்றது.
    இதே வேளை, ஏனைய எதிர்க்கட்சிகள் இன்றைய அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டுமென்பதில் அக்கரை கொண்டு இருக்கின்றதே அன்றி முஸ்லிம்களின் மீது அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காடைத்தனத்தை தடுக்க வேண்டும் என்ற சிந்தனையை காண முடியவில்லை.
    ஆதலால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும், ஐ.தே.கவுக்கும் இடையே அதிக வேறுபாடுகளை காண முடியாதுள்ளன.
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மையினரை நேரடியாக திருப்திப்படுத்தி அவர்களின் அதிகபட்சமான ஆதரவு மூலமாக அதிகாரத்தைப் பெற்று பௌத்த பெரும்பான்மையினரின் ஆட்சி என்று நிறுவுவதற்கு களத்தில் குதித்துள்ளது. அதற்கான அத்திவாரங்களை இட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் சேனாக்களையும், அவற்றின் சேனாதிபதிகளையும் கட்டுப்படுத்துவதற்கு நாட்டம் காட்டாதிருக்கின்றது. இத்தகையதொரு கொள்கையை கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்புக்கு முஸ்லிம்களினால் வாக்களிக்க முடியுமா?
    ஐ.தே.க முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று நேரடியாக காட்டிக் கொண்டு மறைமுகமாக பௌத்த இனவாதிகளை பகைத்துக் கொள்வதற்கு விரும்பாததொரு கட்சியாக இருந்து கொண்டிருக்கின்றது. ஆதலால், இத்தகைய இரட்டை வேடத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கின்ற ஐ.தே.கவுக்கு முஸ்லிம்களினால் வாக்களிக்க முடியுமா?
    இதே வேளை, அரசாங்கத்தில் எல்லா முஸ்லிம் கட்சிகளும் பங்காளிகளாக இருந்து கொண்டிருக்கின்றன. இக்கட்சிகளின் தலைவர்களும், ஏனையவர்களும் அரசாங்கத்தின் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டு இன்பமாக இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு இனவாதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு நெஞ்சுரம் கொண்டவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை.
    சமூகத்திற்கு குரல் கொடுத்து சுகபோகங்களை இழப்பதற்கு தயாரில்லாதவர்களாகவே இருக்கின்றார்கள். சமூகம் சீர்கெட்டாலும் தாம் பெற்றுள்ள சீர்கள் கைகளை விட்டுப் போகக் கூடாதென்பதற்காக பல காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
    அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளுள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர ஏனைய கட்சிகள் அரசாங்கத்தோடு இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தங்களது வேட்பாளர்கள் மூலமாக முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அளித்து அரசாங்கத்தினால் பெற்றுக் கொண்டிருக்கும் இன்பங்களை நீடித்துக் கொள்வதற்கு எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இக்கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து கொண்டுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடைபெற்ற போது அதற்கு எதிராக விடுத்த அறிக்கைகள் பதவிகளை துச்சமாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்ற தோற்றப்பாட்டை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியது. ஆயினும், முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் நாங்கள் உங்களோடுதான் என்பதே இக்கட்சிகளின் உறுதிமிக்க நிலைப்பாடாகும். பதவியே இவர்களின் மூச்சாகும்.
    ஆதலால், இவர்களின் இந்த குறுகிய சிந்தனைக்கு முஸ்லிம்கள் இடம் கொடுக்க முடியாது. இவர்களின் எண்ணங்களினால் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மைகள் கிடைக்குமா என்றால், கடந்த காலம்தான் இதற்கு சரியான பதிலாகும். ஆதலால், இக்கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் வாக்களிக்க முடியுமா?
    அரசாங்கத்தில் உள்ள மற்றுமொரு கட்சியாக உள்ள ஸ்ரீலங்டகா முஸ்லிம் கர்ஙகிரஸை எடுத்துக் கொண்டால் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. கட்சியின் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தனித்துப் பொட்டியிடுவதாக இக்கட்சியினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒரு தரப்பாக இருந்து கொண்டிருந்தாலும், இக்கட்சிக்கு அரசாங்கத்தில் உரிய இடம் வழங்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரியங்களை தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது அத்தகைய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்கோ அக்கட்சியினால் முடியவில்லை.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க் கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றிக் காட்டுவதற்கு சக்தியற்றதொரு கட்சியாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.
    முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வையும், உரிமைகளுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ள முடியாது தடுமாறிக் கொண்டிருப்பதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இக்கட்சியால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும், உரிமைகளுக்கு பாதுகாப்பும் ஏற்படுமென்று எதிர் பார்க்க முடியாது. கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியாதுள்ள கட்சியால் முஸ்லிம்களுக்கு விமோசனம் கிடைத்துவிடுமென்று கண் மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது.
    முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களையிட்டு அரசாங்கத்தை கடுமையாக சாடிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கம் தங்களை எதிர்க் கட்சியைப் போல் நடத்துவதாகவும் குறை கூறிக் கொண்டிருக்கின்றது. அப்படியாக இருந்தால் எதற்காக அரசாங்கத்தோடு இணைந்துள்ளீர்கள் என்று கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கேட்டால் அபிவிருத்திப் பணிகளைச் செய்வதற்காகவே அரசாங்கத்தோடு இருக்கி;ன்றோம் என்று முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை அக்கட்சி தெரிவித்துக் கொண்டிருக்கின்றது.
    ஆக, மொத்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே அரசாங்கத்தோடு இருந்து கொண்டிருக்கின்றது. தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக மாறுபட்;ட கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இருந்து கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முஸ்லிம்களினால் வாக்களிக்க முடியுமா?
    இதே வேளை, வட மாகாண சபைக்குரிய 36 ஆசனங்களில் 30 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம்களின் வாக்குகளை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதற்காக நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்துடன் ஒரு உடன்படிக்கையை செய்து மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது. ஆனால், இந்த இரு தரப்பினரும் செய்து கொண்ட உடன்படிக்கையில் முஸ்லிம்கள் தொடர்பில் எத்தகைய நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என்பது முறையாக தெளிவுபடுத்தப்படவில்லை.
    முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொணடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வடமாகாண முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் கருத்துக்களை முன் வைக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு இனவாதிகள் மேற்கொண்டு வருகின்ற காரியங்களுக்கு எதிராக முஸ்லிம் அரசியல் தலைவர்களை விடவும் காத்திரமான அறிக்கைகளை விடுத்துக் கொணடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தங்களின் சார்பில் உள்ள முஸ்லிம்களின் குறைபாட்டை நிபர்த்தி செய்வதற்கு தயாராக இல்லாதவர்களாகவே கூட்டமைப்பினர் உள்ளனர். அரசியல் தேவைக்காகவே முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
    ஆதலால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம்களுக்காக பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை வைத்துக் கொண்டோ அல்லது நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கம் உடன்படிக்கை செய்துள்ளதென்பதனை வைத்தோ தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க முன்வருவார்கள் என்று நம்ப முடியுமா?
    இவ்வாறு அரசியல் கட்சிகள் யாவும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று தங்களின் தலையை இன்னும் உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று தந்திரங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. இத்தந்திரங்களில் ஏதாவதொன்றுக்கு முஸ்லிம்கள் பலியாகிவிடுவார்கள் என்பதும் உறுதியானது. முஸ்லிம்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் முஸ்லிம்களின் உரிமைகளையும், அதற்கான பாதுகாப்புக்களையும் உறுதி செய்து கொள்வதற்கு நாவிழக்காத புதிய சக்தி ஒன்றே தேவையாகும். இந்தப் புதிய சக்தி இன்னமும் முஸ்லிம்ளிடையே தோற்றம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,

    நன்றி: வீரகேசரி வார வெளியீடு- 25.08.2013

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு புதிய சக்தி ஒன்றே அவசியமாகும்! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top