யாழ். பொதுநூலக முன்பக்க வாசலில் காணாமற்போனோரின் உறவுகள் கதறிக்கொண்டு
இருக்க பின்பக்க வாசலினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர்
நவநீதம்பிள்ளை வெளியேறி சென்றார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஆணையாளர் இன்று
(27) காலை 9.30 மணியளவில் யாழ். பொதுநூலகத்தில் வடமாகாண ஆளுநர், வடமாகாண
அரச அதிபர்கள், மற்றும் வடமாகாண அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.அதேவேளை நூலகத்திற்கு முன்பக்கமாக காணாமற்போனோரின் உறவுகள், காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும் நீதியான விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி கதறி அழுதனர். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆணையாளருக்கு நூலகத்திற்குள் விளக்கம் அளிக்கப்பட்டு கொண்டிருந்தவேளை வெளியே காணாமற்போனோரின் உறவுகள் தம் உறவுகளை தேடித்தருமாறு கதறி அழுது கொண்டு இருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கலந்துரையாடலை முடித்து கொண்டு வெளியேறிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை காணாமற்போனோரின் உறவுகள் சந்திக்க முற்பட்டு முன்பக்க வாசலை நோக்கி சென்றவேளை, அவர்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதனை அடுத்து நவநீதம்பிள்ளை
அடங்கிய குழுவினர் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி சென்று விட்டனர்.
அதேவேளை காணாமற்போனோரின் உறவுகள் 15 பேர் அடங்கிய குழு ஒன்று யாழ். ஐ.நா
அலுவகத்தில் நவநீதம்பிள்ளையை சந்தித்து மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
0 comments:
Post a Comment