• Latest News

    September 15, 2013

    பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை முழந்தாளிடச் செய்தாரா? காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன?

    பிரதிப்பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர
    வீட்டுப் பாடம் எழுதாமல் வந்ததற்கு வகுப்பறையில் கத்திக் கூச்சல் போட்டமைக்காக இன்னும் பல குறும்புகளுக்காக பாடசாலையின் கனிஷ்ட வகுப்புகளில் இருக்கும் போது முழந்தாளிட்டு கையை உயர்த்தி தண்டனை அனுபவித்தது எங்களில் எத்தனை பேருக்கு ஞாபகத்தில் உள்ளது.
    இலங்கையைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக ஒருவரை முழந்தாளிடச் செய்து தண்டனை வழங்குவதென்பது புதுவகையான தண்டனைக் கோவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோ என்னவோ அடிக்கடி இவ்வாறான தகவல்கள் கேள்விப்பட்ட வண்ணமே உள்ளன.
    பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தனது மகளின் உடை தொடர்பில் எச்சரித்த ஆசிரியை பாடசாலை மைதானத்தில் முழந்தாளிட வைத்த சம்பவம் முழு நாட்டையும் எவ்வாறு அதிர்ச்சியடையச் செய்ததோ அதே உணர்வை மீண்டுமொருமுறை காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவம் கொண்டுவந்துள்ளது.
    ஆனால் இச்சம்பவத்தில் கதாபாத்திரங்களை பார்க்கும் போது அதிர்ச்சியானது பல மடங்காகிறது. தண்டனை வழங்கியதாக கூறப்படுபவர் அதிபரோ ஆசிரியரோ பிரதேச சபை தலைவரோ அல்ல. பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், தண்டனை பெற்றவர்கள் என கூறப்படுவோர் ஒரு மாணவனோ தனது மகளை எச்சரித்த ஆசிரியையோ அல்ல.
    இரவு பகலாக 365 நாட்களும் சேவையில் உள்ள திணைக்களமான பொலிஸ் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் 120 பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படும் இடம் பாடசாலை விறாந்தையோ, மைதானமோ அல்ல. அது பொலிஸ் நிலையத்தின் மண்டபம்.
    இது தொடர்பான செய்திகள் இந்த வாரம் முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அத்துடன் அது தொடர்பான பல தகவல்கள் ஊடகங்களிலும் தொடர்ந்தும் வெளியாகின.
    அதனடிப்படையில் இச்சம்பவம் இடம்பெற்றமையானது கடந்த சனி விடுமுறை தினத்திலாகும். எனினும் பொலிஸாருக்கு அன்று என்ன விடுமுறை. வழமை போன்றே காத்தான்குடி பொலிஸ் நிலையமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்துள்ளது.
    பொதுமக்கள் முறைப்பாடளிக்கவும் இன்னும் சிலர் பொலிஸாரின் கட்டளைக்கமையவும் பலர் பல தேவைகளுக்காகவும் பொலிஸ் நிலையத்தில் இருந்த நேரம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தனக்கு கீழ் கடமையாற்றும் மற்றொரு பொலிஸ் அதிகாரியுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு விஜயம் செய்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சந்திக்கவென ஒன்று திரட்டியுள்ளார்.
    அவ்வாறு ஒன்று திரட்டிய இடம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஒன்று கூடல் மண்டபம் எனவும் கதிரை மேசையென தளபாடங்கள் அதனுள்ளே போடப்பட்டிருந்த நிலையில் அவை அகற்றப்பட்டே இந்த ஒன்று கூடலின் போது பொலிஸாருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
    காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதாக கூறப்படும் சுமார் 120 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அந்த மண்டபத்தினுள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் அதனை தொடர்ந்து நடைபெற்ற தாக கூறப்படும் சம்பவங்களே அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    ஆண்கள் பெண்கள் என அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு மணித்தியாலங்கள் வரையில் முழந்தாளிடச் செய்து தமது கைகளை உயர்த்திய வண்ணம் இருக்குமாறு கட்டளை இட்டுள்ளதுடன் இது ஒரு தண்டனை எனவும் குறிப்பிட்டுள்ளாராம்.
    இதனிடையே சொல்லப்பட வேண்டிய மற்றொரு பின்னணிக் கதையும் உள்ளது. அதாவது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 2000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் போது இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
    இச்சம்பவம் தொடர்பிலேயே கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு விஜயம் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
    இனி நாம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றதாக ஊடகங்கள் கூறும் சம்பவத்திற்கு வருவோம். ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சம் பெறினும் அவருடன் சேவையாற்றும் ஏனையோரும் பொறுப்புக்கூற வேண்டும் எனக்கூறப்பட்டே காத்தான்குடி பொலிஸாருக்கு முழங்கால் தண்டனை குறித்த பிரதிப்பொலிஸ்மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.
    சுமார் அரை மணி நேரம் இந்த தண்டனை நீடித்துள்ளது. நீண்ட நேரம் முழந்தாளிட்டு கைகளை உயர்த்தியிருந்த இரு ஆண் கான்ஸ்டபிள்களும் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரும் மயக்க முற்று விழ அந்த பொலிஸ் குழுவுக்கான தண்டனை நிறைவுக்கு வந்துள்ளது.
    இடையே பொலிஸாருக்கான தண்டனை வழங்கப்பட்ட வேளை பல்வேறு கடமைகளின் நிமித்தம் அங்கு வந்திருந்த பொதுமக்களும் அதனை அவதானித்ததாகவும் அது காத்தான்குடி பொலிஸாருக்கு உளவியல் ரீதியாக பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களை முழந்தாளிடச் செய்து தண்டனை அமுல் செய்யப்பட்ட போது குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரை முறைத்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறை விழுந்ததாகவும் ஊடகச் செய்தியொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.
    இதனை விட வழங்கப்பட்ட தண்டனை குறித்து பொலிஸ் மா அதிபருக்கோ வேறு உயர் அதிகாரிகளுக்கோ தெரியப்படுத்தக் கூடாது எனவும் அவ்வாறு தெரியப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறின் நடைபெறுவதே வேறு என தண்டனை பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜிதவின் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
    இதனிடையே காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் சம்பள அதிகரிப்பு, விடுமுறைகள் மற்றும் ஏனைய சலுகைகளை தற்காலிகமாக குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தடை செய்துள்ளதாகவும் 12 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
    எது எவ்வாறாயினும் பொலிஸாரை முழந்தாளிடச் செய்து தண்டனை வழங்கியதாகவும் அவர்களது கொடுப்பனவுகள் மற்றும் விடுமுறைகளில் கை வைத்ததாகவும் கூறப்படும் குற்றச் சாட்டுக்களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர முற்றாக மறுத்துள்ளார்.
    இலஞ்சம் வாங்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்கு தெளிவு படுத்தல்களையும் உபதேசங்களையுமே வழங்கியதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களை முழந்தாளிடச் செய்யவில்லையெனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
    அத்துடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸாரை ஒன்று திரட்டிய குறித்த மண்டபத்தில் இடவசதியின்மை காரணமாகவே அதனுள் இருந்த தளபாடங்களை வெளியேற்ற வேண்டி நேர்ந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
    இந்நிலையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் .தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திய திறமை மிகு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் தலைமையகத்துக்கு மீள் அழைக்கப்பட்டார்.
    அத்துடன் பொலிஸாரை முழந்தாளிடச் செய்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
    பொலிஸ் திணைக்களத்தின் நிருவாக விடயங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ணவின் ஆலோசனைகளுக்கு அமைவாக நிருவாகப் பிரிவை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் அறுவரை கொண்ட விசாரணைக் குழு கடந்த செவ்வாயன்று கிழக்கு நோக்கி பயணித்ததுடன் அன்றைய தினமே விசாரணை நடவடிக்கைகளையும் ஆரம்பித்தது.
    காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டுள்ள இந்த விசாரணைக்குழு பொலிஸார் முழந்தாளிடச் செய்யப்பட்ட போது பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்களையும் இனங் கண்டு அவர்களின் வாக்கு மூலங்களையும் பதிவு செய்ததாக அறிய முடிகிறது.
    இந்நிலையில் தற்சமயம் தனது விசாரணைகளை நிறைவு செய்துள்ள இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் கையளிக்கவுள்ளது. அந்த அறிக்கையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 47 பொலிஸ் கான்ஸ்டபிள்களின் வாக்கு மூலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையானது பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்ட பின்னரேயே காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையினை அறியக்கூடியதாய் இருக்கும்.
    பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தனக்கு கீழ் கடமையில் உள்ள காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முழந்தாளிடச் செய்து தண்டனை வழங்கினாரா? இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.
    சட்டம், ஒழுங்கினை காக்க வேண்டிய பொலிஸார் தொடர்பில் இடையிடையே வெளியாகும் இவ்வாறான அதிர்ச்சி மிகு செய்திகள் பொலிஸ் திணைக்களம் மீதான மதிப்பினை குறைந்து விடும் என்பது மட்டும் உறுதி.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை முழந்தாளிடச் செய்தாரா? காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top