• Latest News

    September 08, 2013

    உயிர் ஆபத்திற்களுக்கு மத்தியில் நான் காப்பாற்றிய தலைமையை கண்டி முஸ்லிம்களும் பாதுகாக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

    நான் உயிராபத்துக்களுக்கு மத்தியில் தலைமையைக் காப்பாற்றியுள்ளேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் கெளரவத்தையும் அந்தஸ்தையும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை முஸ்லிம்கள் பாதுகாத்தது போல் கண்டி முஸ்லிம்களும் பாதுகாத்து உறுதிப்படுத்த வேண்டும். நமது வரலாற்றில் பிழைகள் வரக்கூடாது. தேர்தலின் பின்பு சமூகத்திற்காக பேசுவதற்கு தலைமை அவசியம்.
    மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு அக்குறணை கசாவத்தையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் உற்பத்தித்திறன், ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
     ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் அனர்த்தம் நிகழப்போவதில்லை .  கண்டி முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
    . அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு சமயோசிதமானதும் புத்திசாலித்தனமானதுமாகும். கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியமான கட்சியாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அனர்த்தம் நிகழ வேண்டும் என்பது பல அரசியல்வாதிகளின் விருப்பமாகும். இத்தகைய விருப்பமுடைய அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எப்படியாயினும் காய்த்த மரத்திற்குத்தான் கல்லடி விழும் என்பதை நாம் மறந்து விடலாகாது.

    அரசியல் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். எனவே தீர்மானங்கள் வரும் போது அத்தீர்மானங்கள் உறுதியாக இருக்கும். இலங்கையில் முஸ்லிம் காங்கிரஸ் சமகாலத்தில் வரலாற்றுக் கடமையை ஆற்றும் கட்சியாக பரிணமித்துள்ளது. இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அறிஞர் சித்திலெப்பை முதல் அரசியல் துறையில் போற்றத்தக்கவராக இருந்த ஏ.சி.எஸ்.ஹமீத் வரை கண்டியில் இருந்து உருவாகிய தலைவர்களின் வரிசையில் முத்திரை பதித்தவர் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆவார். 
    இத்தகைய பல தலைவர்களை கண்டி மண் தந்திருக்கின்றது. கண்டி முஸ்லிம்கள் மத்தியில் கட்டிடம் தரவில்லை. பாதை தரவில்லை என்பதால் வாக்குகள் தரவில்லை என்ற நிலைப்பாடு ஏற்படக்கூடாது. இந்நாட்டு முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் தலைமையைப் பாதுகாக்கும் பொறுப்பு கண்டி வாழ் முஸ்லிம்களுக்கு உள்ளது.

    கண்டியில் பிறந்து கண்டியில் வெற்றி பெற்று திருகோணமலையில் வெற்றி பெற்றவரை கிழக்கு மாகாணம் தலைவராக்கியுள்ளது. எனவே தலைவர் ரவூப் ஹக்கீமைப் போல் ஆளுமையுள்ள தலைமை முஸ்லிம் காங்கிரஸுக்குள் யாரும் இல்லை. கடந்த காலங்களில் இத்தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக பெரும் பங்காற்றினேன். நான் உயிராபத்துக்களுக்கு மத்தியில் தலைமையைக் காப்பாற்றியுள்ளேன்.

    தேர்தலின் பின்பு சமூகத்திற்காக பேசுவதற்கு தலைமை அவசியம். எனவே நெஞ்சை நிமிர்த்திப் பேச தலைமைத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனை இத்தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் செய்ய வேண்டும்.

    ஒரு குடைக்கு கீழ் வாழும் சமூகமாக எம்மை அடையாளப்படுத்த வேண்டும்.  நாம் கலாசார ரீதியாக ஒரு சமூகத்திற்குள் வாழ்ந்து உயர்ந்தவர் தாழ்ந்தவர் மதபோதகர் மதபோதகரல்லாதவர் என்ற சமூகமாக இருக்கின்றோம். இவற்றைப் பார்த்து சிலர் கோபம் பொறாமை உணர்வுகளுக்கப்பால் இவற்றை இழக்கச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்கள். முஸ்லிம் சமுதாயத்தை பொருளாதார ரீதியாக குறைந்த மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். கல்வி வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விரும்புகின்றார்கள், 

     இவ்வாறான இந்த அமைப்புக்கள் வெடிகுண்டுகள் போல உள்ளன. வெடிகுண்டுகள் நமக்கு முன்னால் வந்தால் நமது கடமை அவ்வெடிகுண்டுகளை நாமே சேர்ந்து வெடிக்க வைப்பதல்ல. நமது வேலை செயலிழக்கச் செய்வதாகும்.
    முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக வரும் இனவாத, மதவாத கருத்துக்கள் மற்றும் எதிர் நடவடிக்கைகளுக்கெதிராக நெஞ்சைக் காட்டிக் கொண்டு செல்வது தைரியம் என்ற முட்டாள் தனமான காரியத்தை செய்யக்கூடாது. நாம் குண்டை செயலிழக்கச் செய்யும் வியூக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
    முஸ்லிம் விரோத செயற்பாடுகளை முன்னிறுத்தி வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பேசுபவர் வீரன் அல்லன். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூக்குரல் இடுவது பயனற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கூக்குரல் இடவும்மாட்டாது ஒப்பாரி வைக்கவும் மாட்டாது. அதற்கு மாற்றமாக ஒட்டுமொத்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் கட்சியாகும் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உயிர் ஆபத்திற்களுக்கு மத்தியில் நான் காப்பாற்றிய தலைமையை கண்டி முஸ்லிம்களும் பாதுகாக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top