• Latest News

    September 15, 2013

    சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க உடன்பாடு

    சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க உடன்பாடு செய்து கொண்டதால் இஸ்ரேலுக்கு நெருக்கடி முற்றுகிறது.
    உடன்பாடு
    ரசாயன ஆயுதம் பயன்படுத்திய விவகாரத்தால் சிரியா மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதை தவிர்க்க ரஷியா அளித்த யோசனையின் பேரில் ஜெனிவாவில் அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி, ரஷிய மந்திரி செர்கே லவ்ரோவ் மற்றும் நிபுணர்கள் சந்தித்து பேசினார்கள்.
    3 நாட்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.இதன்படி சிரியா தன்னிடம் இருக்கும் ரசாயன ஆயுதங்கள் குறித்த பட்டியலை ஒரு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும். பிறகு சர்வதேச நிபுணர்கள் அவற்றை 2014–ம் ஆண்டு மத்திக்குள் செயல் இழக்க செய்வார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது.
    வரவேற்பு–எதிர்ப்பு
    இந்த உடன்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரவேற்றார். சீனா, பிரான்சு, ஈரான் நாடுகள் வரவேற்றன. பிரான்சு வெளியுறவு மந்திரி லூரென்ட் கூறுகையில், ‘இது முக்கியமான முதல் நடவடிக்கை. இதன் மூலம் சிரியாவில் மேலும் மரணம் நிகழ்வது தடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
    அதே நேரத்தில் சிரியா எதிர்க்கட்சி கூட்டணி (கிளர்ச்சியாளர்கள்) இந்த உடன்பாட்டினால் சிரியாவின் உள்நாட்டு போரை நிறுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதுபோல பென்டகன் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், ‘அமெரிக்க ராணுவம் இப்போது தயாராகவே இருக்கிறது. கட்டளைக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிறார்கள்.ஆனால் சிரியா பிரச்சினையில் செய்து கொண்டுள்ள உடன்பாட்டை இஸ்ரேல் எச்சரிக்கையுடன் வரவேற்கிறது. இதுபற்றி பிரதமர் பெஞ்சமீனுக்கு நெருக்கமான மந்திரி யூவால் ஸ்டினித்ஸ் கூறும்போது, ‘எந்த ஒரு உடன்பாடும் அது வெற்றி பெறுவதை பொறுத்தே இருக்கிறது. அதில் சாதகமும், பாதகமும் அடங்கி உள்ளன. ஆயுத அழிப்பை வேகமாக நிறைவேற்ற முடியுமா? சிரியா மீண்டும் தயாரிக்காமல் இருக்குமா? என்ற கேள்வி இருக்கிறது’ என்கிறார்.
    இஸ்ரேலுக்கு நெருக்கடி
    இதற்கிடையில் சிரியாவை ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பில் சேர்க்க ஐ.நா.சபை நேற்று முறைப்படி ஒப்புதல் அளித்தது. இந்த உடன்படிக்கையில் சிரியா தவிர இஸ்ரேல், எகிப்து, வடகொரியா உள்பட 6 நாடுகள் இணையாமல் இருக்கின்றன. இப்போது உலக நாடுகளின் நெருக்குதலால் சிரியா இணைந்து விட்டது.எனவே இஸ்ரேல் நாடு இப்போது நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் இஸ்ரேல் 1993–ல் சேர்ந்துகொள்வதாக கையெழுத்திட்டது. ஆனால் பிறகு அதிகாரபூர்வமாக இணையாமல் கழன்று கொண்டது. சர்வதேச நிபுணர்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை. இவர்களிடமும் ஏராளமான ரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன.
    ஏற்கனவே இஸ்ரேல் இணைந்தால் நாங்களும் சேரத்தயார் என சிரியா, எகிப்து நாடுகள் வலியுறுத்தி வந்தன. இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதால் ரஷிய அதிபர் புதின் இஸ்ரேல் மீது ஒருகண் வைத்து வருகிறார். சிரியாவை போல இஸ்ரேலுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தால் தான் அது சமநிலையாக இருக்கும் என ரஷியா கூறுகிறது.இப்போது சிரியா உடன்பாட்டுக்கு பணிந்து விட்டது. எனவே அடுத்த குறி இஸ்ரேலுக்கு அமையும் என தெரிகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க உடன்பாடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top