• Latest News

    September 24, 2013

    கென்யா வணிகவளாக தாக்குதல் படையணியில் அமெரிக்கா, இங்கிலாந்து வாலிபர்கள் !

    கென்யாவின் நைரோபி நகரில் ஷாப்பிங் மாலில் ஆயுததாரிகள் பிடித்து வைத்திருந்த பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டனர். அங்கிருந்த ஆயுததாரிகள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலரை உயிருடன் ராணுவத்தினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். கென்யா தலைநகர் நைரோபியில், 'வெஸ்ட் கேட்' வணிக வளாகத்தில் 4 தினங்களுக்கு முன்பு உள்ளே புகுந்த 10க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் திடீரென சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த வணிக வளாகத்தில் வெளிநாட்டு வங்கிகள், இந்தியர்கள் நடத்தும் ஓட்டல்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் உள்ளே புகுந்த ஆயுததாரிகள், சுட்டதில் ஏராளமான வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை பிணை கைதிகளாக ஆயுததாரிகள் பிடித்தனர். உடனடி சிகிச்சை கிடைக்காமலும், அதிக ரத்த இழப்பாலும் சிலர் இறக்க நேர்ந்ததாக பலரை காப்பாற்றிய இந்திய டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
    இந்த சம்பவத்தில் சீனா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 68 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ராணுவத்தினர் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு பதில் தாக்குதல் நடத்தினர். கடந்த 4 நாட்களாக பிணை கைதிகளை பத்திரமாக மீட்க முயற்சித்தனர். ஹெலிகாப்டர்கள் மூலம் கமாண்டோ படையினர் மாடி பகுதியில் இறங்கியும், வளாகத்தை சுற்றி வளைத்தும் தாக்குதல் நடத்தினர்.
    இதில் பொதுமக்களையும் பத்திரமாக மீட்டதாக உள்துறை அமைச்சர் ஜோசப் ஓலே லென்கு தெரிவித்தார். இதன் மூலம் 4 நாள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை இஸ்ரேல் படையினர் வழிநடத்தி சென்றனர். ஆயுததாரிகளுடன் நடந்த சண்டையில் 11 கென்ய வீரர்கள் காயம் அடைந்தனர்.
    இதுகுறித்து கென்ய வெளியுறவு துறை அமைச்சர் அமீனா முகமது கூறுகையில், 'பிடிபட்ட தீவிரவாதிகளில் சிலர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 19 வயது இளைஞர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது' என்றார். அல்கய்தா பயிற்சி அளித்ததும் தெரியவந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எப்பிஐ விசாரிக்கும் என ஒபாமா அறிவித்துள்ளார்.
    இதற்கிடையில் வணிக வளாத்தில் அல் கய்தாவின் இளைஞர் படையான அல் ஷகாப் தாக்குதல் நடத்தியது உறுதியானது. சோமாலியாவில் தீவிரவாதிகளை ஒடுக்கும் படையில் கென்ய ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
    அங்கிருந்து கென்ய படைகளை வாபஸ் பெறும் வரை இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும்  என அல் ஷகாப் மிரட்டல் விடுத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கென்யா வணிகவளாக தாக்குதல் படையணியில் அமெரிக்கா, இங்கிலாந்து வாலிபர்கள் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top