• Latest News

    December 04, 2014

    ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் நானே ஜனாதிபதி:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரை

    புதிய கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்யும் தேவை தமக்கு கிடையாது ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் அவசியம் தமக்குக் கிடையாது. நாம் அனைவரும் எமது சகோதர கட்சிகளுடன் இணைந்து சுபீட்சம் மிக்க நாட்டைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

    எம்பிலிப்பிட்டி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையில் மிகப்பெரும் பொதுச்சந்தைக்கட்டடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறூ தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஒப்பந்தம் செய்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐ .தே.க. ஒப்பந்தம் செய்கின்றது. ஹெல உறுமய - ஜே.வி.பி. என பலவித ஒருதலைப்பட்ச ஒப்பந்தம் செய்தாலும் எமக்கு அது அவசியமில்லை. நாம் எமது சகோதர கட்சிகளுடன் இணைந்து நாட்டை சுபீட்சத்தில் கட்டியெழுப்புவோம்.

    2005 இல் நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது நாட்டு மக்கள் என்னிடம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாக்கும்படி கேட்டனர். நாம் அதை நிறைவேற்றிக்கொடுத்துள்ளோம். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன, மத மக்களையும் சுதந்திரமாக வாழவைக்கும் எமது எதிர்பார்ப்பை அதன் மூலம் நாம் நிறைவேற்றியுள்ளோம்.

    நான்கு வருடங்களில் நாம் அதை செய்து முடிந்து மக்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் ஏனைய பகுதிகளுக்கும் சுதந்திரமாகப் பயணிக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்தினோம். இந்த நாட்டின் பிரஜைகளுக்கான சுதந்திரத்தை நாம் அதன் மூலம் பெற்றுக்கொடுத்துள்ளோம். அதனையடுத்து வேலைவாய்ப்பற்ற நிலை கோலோச்சிய நிலையில் அதனை இல்லாதொழித்து சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கி, அதனையும் வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.

    பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டில் அதற்கான சவால்களை நாம் பொறுப்பேற்று வெற்றிகரமாக அதனை எதிர்கொண்டோம். அதனோடிணைந்த அனைத்து சவால்களையும் எம்மால் வெற்றிகொள்ள முடிந்ததை நாம் குறிப்பிட வேண்டும். 2010 இல் எமக்கிருந்த சவால் மீட்கப்பட்டுள்ள நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதுதான். அதனையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம்.

    அந்த பயணத்தில் முழு நாட்டின் அனைத்துத் துறைகளையும் நாம் அபிவிருத்தியில் கட்டியெழுப்பியுள்ளோம். நிதி இல்லை என்பதற்காக அபிவிருத்தியைத் தள்ளிப்போட முடியாது. முன்னைய ஆட்சியாளர்கள் அவ்வாறே செயற்பட்டனர். 40 வருட அரசியல் அனுபவம் மக்கள் சேவைக்கான அனுபவமும் எனக்குள்ளது. எனவே ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி.

    நாட்டின் அரிசி வர்த்தகத்தை தம்வசம் வைத்து நிர்வகித்தவர்கள் அரிசி மாபியா செய்தவர்கள் பற்றியும் நாம் குறிப்பிடத்தேவையில்லை. நெல் கொள்வனவைத் தீர்மானித்தவர் தனி நபரே. நாம் அவ்வாறு செயற்பட்டவர்களல்ல. ச.தொ.ச. மூலம் நாம் 50 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

    பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சினால் 150 மில்லியன் ரூபா செலவில் மேற்படி சந்தைக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வாகனத் தரிப்பிடம் சந்தையின் உள்வீதிகள், கழிவறை உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த சந்தைக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 1000 வர்த்தகக் கூடங்களை உள்ளடக்கியதாக இது அமையப்பெற்றுள்ளது என தெரிவித்தார்.
    TW
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் நானே ஜனாதிபதி:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top