• Latest News

    October 09, 2013

    விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி

    கலையரசன்,
    வட மாகாண  சபைத் தேர்தல்  பிரச்சாரம்   நடைபெற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த வாக்காளப் பெருமக்களிடம்  கருத்துக் கேட்டிருந்தேன். அவர்களில் பலர் தெரிவித்த பொதுவான கருத்துகளை, அப்படியே இங்கே தருகிறேன்:
    ‘இந்தத் தேர்தல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும், தேர்தல் காலங்களில் மட்டும் தான் மக்களை சந்திக்க வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் யாருமே இந்தப் பக்கம் எட்டியும்
    பார்ப்பதில்லை. நாமாக தேடிச் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியாது. ஆனாலும், வாக்களிக்க வேண்டிய கடமை எமக்குண்டு. நாங்கள் ஓட்டுப் போடா விட்டால், எமது வாக்குகளை வேறு யாராவது போட்டு விடுவார்கள். அதற்காகத் தான் நாம் வாக்களிக்கச் செல்கிறோம்.’
    வீட்டுக்கு வீடு வாசல் படி. எல்லா நாடுகளிலும், தேர்தல் காலங்களில் மக்களின் மனநிலை  ஒன்றாகத் தான் இருக்கின்றது.
    இந்த தடவை நடந்த வட மாகாண சபைத் தேர்தலிலும், தமிழ் மக்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். வழமை போல சிங்கள முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ராஜபக்சவும், தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளனர்.
    ஒரே முதலாளித்துவ வர்க்கத்தின், இரண்டு வேறு மொழிகளைப் பேசும் இரு பிரிவினர், தமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு தேர்தல் எனும் நாடகம் உதவுகின்றது. அதிலே சிங்கள வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு  சிங்கள தேசியமும்,  தமிழ் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு  தமிழ் தேசியமும் பயன்படும்.
    தேர்தல் பிரச்சார மேடைகளில் இரண்டு தரப்பினரும் எதிரிகளாக காட்டிக் கொள்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இலங்கை பிரிட்டிஷ் காலனியாகவிருந்து, சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இந்த நாடகம் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப் படுகின்றது.
    இதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் ஜனங்கள், ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இனப்பகை கொண்டு   ஒருவரை ஒருவர் கொன்று   குவிப்பார்கள். இறுதியில்   அதனால்  இலாபமடையும்   முதலாளித்துவத்திற்கு, தேசியவாத முகமூடி தேவைப் படுகின்றது.
     
    ஈழப்போரில்   தோற்கடிக்கப் பட்ட தமிழ் மக்கள், மீண்டும் வட மாகாண சபைத் தேர்தலிலும்   தோற்கடிக்கப் பட்டுள்ளனர். எப்போதும் இறுதி வெற்றி சிங்கள-தமிழ் தரகு முதலாளிகளுக்கானது, என்ற விதியை மட்டும் யாராலும் மாற்ற முடியவில்லை.
    இந்தத் தேர்தலில்  தோல்வியடைந்த வேட்பாளர்கள்  உண்மையில்   தோற்றவர்கள் அல்ல, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உண்மையில் வென்றவர்களும் அல்ல. அவரவருக்கு ஏற்ற இடங்களில் இருக்கின்றனர். தேர்தல் தோல்வியால் டக்ளஸ், அங்கஜனின் வர்த்தகத் துறைக்கு, அரசியல் அதிகாரத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
    எல்லாமே வழமை போல நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற கூட்டமைப்பு  உறுப்பினர்கள் ஏற்கனவே நிறைய வருமானம் தரும் வேலை பார்த்தவர்கள். அதற்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இப்போது மேலதிகமாக அரசாங்க ஊதியம், சலுகைகள் வேறு கிடைத்து வருகின்றது. தமிழ் மக்கள் தான் பாவம், அவர்களுக்குத் தான் ஒன்றுமேயில்லை.
    விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச முன்னியிலையில் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் எடுத்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல. கடைசியில் விக்னேஸ்வரனும் தனது  ‘வர்க்கப் புத்தியை’ காட்டி விட்டார், என்று வேண்டுமானால் திட்டலாம். விக்னேஸ்வரன்  யாழ்ப்பாணத்தை  பூர்வீகமாக கொண்டிருந்தாலும், கொழும்பு மேட்டுக்குடி சமூகத்தின் அங்கத்தவர்.
    கூட்டமைப்பு, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யும் பொழுதே, அவரது வர்க்கப் பின்னணியும் பகிரங்கமாகியது. அதற்குப் பிறகு, « அவரை நோவானேன், கவலைப் படுவானேன்? » இனம் இனத்தோடு தானே சேரும்?
    கொழும்பில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்கள், எல்லாக் காலங்களிலும் தமிழ் இன உணர்வு அற்று வாழ்ந்தவர்கள். (தனிப்பட முறையில் எனக்கு சிலரைத் தெரியும். அவர்கள் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள்.) அவர்களுக்கு, தமது வர்க்க அடையாளம் மட்டுமே முக்கியமாகப் படுவதுண்டு.
    அதனால் தான், தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் வெறுக்கப்படும்,  ‘சிங்களவரும், இடதுசாரியும், அமைச்சருமான’  வாசுதேவ நாணயக்கார குடும்பத்துடன் விக்னேஸ்வரன் சொந்தம் கொண்டாட முடிந்தது. ஏனெனில், இருவரும்  ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அது தான் முக்கியம்.
    இதெல்லாம்   சாதாரண தமிழ் மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயங்கள். அதற்குக் காரணம் இன முரண்பாடல்ல, வர்க்க முரண்பாடு.  ‘சிங்களவர்களோடு  சொந்தம் கொண்டாடுவதில், விக்னேஸ்வரன் குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல.
    சந்திரிகா குமாரதுங்கவின்  மகளும்  ஒரு தமிழரை மணந்து கொண்டார்.  பண்டாரநாயக்க குடும்பத்தில்   பல தமிழர்கள் சம்பந்தம் செய்துள்ளனர். இவர்கள்  எல்லாம் சாதாரண தமிழர்கள் அல்ல. வசதி படைத்த, உயர்சாதியில் பிறந்த, மேட்டுக்குடித் தமிழர்கள். அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
    தென்னிலங்கையில் உள்ள  சிங்கள சுதந்திரக் கட்சியின் மறு வார்ப்புத் தான், வட இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அது சிங்கள இனவாதம் பேசி வாக்கு சேகரித்தால், இது தமிழ் இனவாதம் பேசி வாக்குச் சேகரிக்கின்றது.
    அதனை சிங்கள முதலாளிகள் ஆதரித்தால், இதனை தமிழ் முதலாளிகள் ஆதரிக்கின்றனர். இரண்டுமே அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் தான். அதனால் தான் எப்போதும் மக்கள் ஏமாற்றப் படுகின்றனர். அதனால் தான் எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் தோற்றுப் போகின்றனர்.
     
      இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறப் போவதில்லை.  ‘எத்தனை தவறுகள் விட்டாலும், கூட்டமைப்புக்கு மாற்று கிடையாது என்ற கருத்து, அடுத்த தேர்தலிலும் முன் வைக்கப் படும். உண்மையில் அது மக்களின் கருத்தல்ல. தமிழ் முதலாளிய வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப் படும் பிரச்சாரம். ஏனென்றால், பாமர மக்களால் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது. அவர்களிடம் அந்தளவு பணபலம் கிடையாது.
    கடந்த முப்பதாண்டு காலம் நடந்த ஈழப்போரில் மட்டுமே, அந்த நிலைமை தலைகீழாக மாறியது. அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில், அதுவோர் புரட்சிகர மாற்றம். அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட, அரசியலில் தலைமைப் பதவிகளுக்கு வந்தார்கள்.
    உதாரணத்திற்கு, தமிழ்ச் செல்வனை குறிப்பிடலாம். ஆனால், புலிகளின் அழிவுடன், தமிழ் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் பறிக்கப் பட்டு விட்டன. இன்று மாகாண சபையில் மெத்தப் படித்தவர்களையே அமைச்சர்களாக்குவேன் என்று விக்னேஸ்வரன் அடம்பிடிக்கிறார். இது பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வி.
      (தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டமைப்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம். தென்மராட்சிப் பகுதியில் இதனை விநியோகித்துக் கொண்டிருந்த நான்கு கட்சித் தொண்டர்களை இராணுவம் கைது செய்து அடைத்து வைத்துள்ளது.)
    ‘பிரபாகரன் ஒரு மாவீரன். மகிந்தவுக்கும் அது தெரியும்.’  என்று வல்வெட்டித்துறையில் நடந்த கூட்டம் ஒன்றில் விக்னேஸ்வரன் பேசினார். அந்த உரையை துண்டுப்பிரசுரமாக அடித்து விநியோகித்த கூட்டமைப்பு தொண்டர்களை கைது செய்த இராணுவம், விக்னேஸ்வரனுக்கு கிட்டவும் நெருங்கவில்லை. அந்த உரையை, முதன் முதலாக   வெளியிட்ட உதயன் பத்திரிகை   நிறுவன முதலாளி கைது செய்யப் படவில்லை. இதனை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி எழுதி இருந்தேன். அந்தளவுக்கு, இலங்கையில் இன்றைக்கும், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினருக்கு இடையிலான வர்க்க ஒற்றுமை, இறுக்கமாக உள்ளது.
    விக்னேஸ்வரனின் ‘புலி ஆதரவு உரை’ , அடித்தட்டு மக்களையும், குறிப்பாக வல்வெட்டித்துறை வாசிகளையும் கவர்வதற்காக நிகழ்த்தப் பட்டது. உண்மையில், உயிரோடு இருக்கும் புலிகளை விட, இறந்த புலிகள் தனக்குப் பயனுள்ளதாக இருப்பார்கள் என்பது விக்னேஸ்வரனுக்கும் தெரியும். ஆனால், இனி வருங்காலத்தில் புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கம் தோன்றுவதை, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மேட்டுக்குடிக் கும்பல் அனுமதிக்கப் போவதில்லை.
    தமது வர்க்க நலன்களுக்கு ஆபத்து வருமென்றால், ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, « தீவிரவாதிகளை » ஒடுக்கவும் தயங்க மாட்டார்கள். இதெல்லாம் ஈழ வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளன. ஈழத் தமிழர்களின் அரசியல் மீண்டும் எழுபதுகளை நோக்கிப் பயணிக்கின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top