எஸ்.ஹமீத்
ஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண சபையின்
முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் நீதியரசர்
விக்னேஸ்வரன், பதவிப் பிரமாணத்தின் பின்னர் வெளியிட்ட உத்தியோகபூர்வ
அறிக்கையில் இலங்கையில்
வாழும் முஸ்லிம் மக்களைப் பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாதது, இலங்கை
முஸ்லிம்கள் மத்தியில் பலத்த விசனங்களையும் விமர்சனங்களையும்
தோற்றுவிக்கலாம் என்ற அச்சத்துடனேயே எனது இந்த ஆக்கத்தினைப் பதிவு
செய்கிறேன்.
‘பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’
என்றொரு பழமொழி இருக்கிறது. உண்மையாகவே முஸ்லிம்களைப் பற்றிய அக்கறையும்
கரிசனையும் அவரது உள்ளத்தில் இருந்திருந்தால், நிச்சயம் அவரது பதவிப்
பிரமாணத்தின் பின்னரான அறிக்கையில் அது வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,
விக்னேஸ்வரன் முஸ்லிம் மக்களை ஏமாற்றி விட்டார்.
குறைந்த பட்சம் தனக்கு ஓரளவாவது வாக்களித்த
வட மாகாண முஸ்லிம் மக்களைப் பற்றியாவது தனது அறிக்கையில் ஒரு வார்த்தை
பிரஸ்தாபித்திருக்கலாம். அது கூட இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது வட
மாகாண முஸ்லிம்களைப் பற்றிய அவரது மாற்றாந் தாய் மனப்பான்மைக்குச் சான்று
பகர்வதாக உள்ளது.
அவரது அறிக்கையைப் படிக்கும் எவருக்கும்
இலங்கையில் முஸ்லிம்கள் என்றொரு தனியான இனம் இல்லையோ என்ற சந்தேகம் எழுவது
தவிர்க்க முடியாமற் போய்விடும்.
”…எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக!”
இந்த வரிகள் இலங்கையில் இரு இனங்கள்தான்
இருக்கின்றன என்ற தோற்றப்பாட்டையும் அந்த இரு இனங்களும் ஒற்றுமைப்பட
வேண்டுமென்ற செய்தியையும் தெளிவாகக் கூறி நிற்கிறது. அப்படியானால்,
முஸ்லிம்கள் என்றொரு தனியான ஓர் இனம் இருப்பதாகவே விக்னேஸ்வரன்
கருதவில்லையா…? அதுவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த மூன்று தசாப்த
காலத்தில் எண்ணற்ற துன்பங்களையும் இழப்புகளையும் சந்தித்து, நலிந்து
போயிருக்கும் முஸ்லிம்கள் என்றொரு இனம் இருப்பதை விக்னேஸ்வரன் மறந்து
விட்டாரா…? அல்லது மறுதலிக்கிறாரா…? அல்லது, ‘சிங்களவர்களும் தமிழர்களும்
ஒற்றுமையாக இருப்போம்; முஸ்லிம்களைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை’
என்று சொல்லாமற் சொல்லுகிறாரா…?
அறிவாற்றலும் அனுபவ முதிர்வும் நிறையப்
பெற்ற- உயர் நீதிமன்றத்தை ஆட்சி செய்த-தெளிவான சிந்தனைகளுக்குரியவர் எனப்
பெயர் பெற்ற ஒருவரின் அறிக்கை எந்தளவுக்குக் கவனமாகத்
தயார்படுத்தப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ‘மறதியாக
விடுபட்டிருக்கும்’ என்ற சால்ஜாப்புகள் முன்வைக்கப்படுமானால், அது
விக்னேஸ்வரனின் ஆளுமைக்கு இழுக்காகிவிடும்.
சிங்களத் தலைவர்களோ, முஸ்லிம் தலைவர்களோ,
ஏன். பெரும்பாலான தமிழ்த் தலைமைகளோ நாட்டின் ஒற்றுமை பற்றிப் பேசும்போது
அல்லது அறிக்கையிடும்போது, ‘ இந்த நாட்டில் வாழும் சிங்கள-தமிழ்-முஸ்லிம்
ஆகிய மூன்று இனங்களும்…’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ அவர்களின் எந்த ஒரு உரையிலாவது அல்லது ஊடக அறிக்கையிலாவது ‘இரு
இனங்களின் ஒற்றுமை’ என்று குறிப்பிட்டதே கிடையாது.
வட மாகாண முதலமைச்சரின் அறிக்கை பூடகமாக
எதனைச் சொல்ல வருகின்றது என்பதைப் புத்தியுள்ள எவராலும் புரிந்து கொள்ள
முடியும். அதைவிடுத்து, இதனைப் பூசி மெழுகப் பார்ப்பவர்கள் தங்களைத்
தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க,
‘இல்லை..அவர் கூறியது சரிதான்; இலங்கையில் சிங்களம்-தமிழ் என்ற இரண்டு
இனங்கள் மட்டும்தான் உள்ளன’ என்று எவராவது சொன்னால், அவர்கள் பொதுபல சேனா,
சிகல உறுமய போன்ற சிங்கள இனவாதத்தினதோ அல்லது புலிப் பாசிசத்தினதோ
பாசறைகளில் பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

0 comments:
Post a Comment