எம்.எப். நவாஸ்'
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொருளாளராக கடந்த மூன்று வருடங்கள் கடமையாற்றிய போது, ஒரு சிலரின் கோபத்துக்கு நான் ஆளாகியுள்ளேன். திடீரென பணம் மற்றும் பெயர் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்குமாறு பொறுப்பு வாய்ந்த சிலர் என்னிடம் கேட்டனர். ஆனால், அவ்வாறு வழங்க முடியாது என்று நான் மறுத்து விட்டேன். அதனால், அவர்கள் என்மீது கோபம் கொண்டார்கள். ஒரு சில தடவை - நமது சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீனும் பணம் மற்றும் பெயர் குறிப்பிடாமல் காலோலைகளை வழங்குமாறு என்னிடம் கேட்டார். அவருக்கும் அவ்வாறு வழங்க முடியாது என்று நான் கூறியிருந்தேன்.
என்னிடம் வழங்கப்பட்ட பொருளாளர் பொறுப்பினை நம்பிக்கையுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே - நான் அவ்வாறு நடந்து கொண்டேன். நிதியை கையாளுதல் தொடர்பில் நான் மிகவும் அவதானமாக இருந்தேன். சங்கத்தின் சகல கொடுக்கல் வாங்கல்களும் - பெயர் குறிப்பிடப்பட்ட காசோலைகள் மூலமாகவே நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்பதில் கறாராக இருந்தேன்'.
இவ்வாறு ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொருளாளருமான யூ.எல். மப்றூக் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது, கணக்கறிக்கையினைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே - மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்ளூ
பொருளாளர் பதவி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததொன்றாகும். நிதியினைக் கையாள்கின்ற பணியினைச் செய்வதால் எப்போதும் நேர்மையுடன் செயற்படுதல் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
நமது சம்மேளனத்தின் பொருளாளராக – பொறுப்பேற்ற கையோடு, இந்த அமைப்புக்கென வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்தேன். அந்த வங்கிக் கணக்கினை ஆரம்பிப்பதற்காக 5000 ரூபாவினை நமது அமைப்புக்கு நான் அன்பளிப்பாக வழங்கினேன். இது குறித்து நான் சந்தோசமடைகின்றேன்.
சம்மேளனத்தின் அனைத்துச் செலவுகளும் - பெயர் குறிப்பிட்டு எழுதப்படும் காசோலைகளினூடாகவே நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்பதில் நான் கறாராக இருந்தேன். திடீர் செலவுகளுக்காக தலைவர் மீரா இஸ்ஸதீன் என்னிடம் பணம் மற்றும் பெயர் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்குமாறு ஒரு சில தடவைகள் வேண்டியிருந்தார். ஆனால், அவ்வாறு வழங்குவதற்கு நான் மறுத்து விட்டேன். பெயர் குறிப்பிட்ட காசோலைகளை மட்டுமே என்னால் வழங்க முடியும் என்று நான் கூறினேன். அவ்வாறு கூறியமை அவருக்கு என்மீது கோபத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனால், என்னிடம் வழங்கப்பட்ட பொருளாளர் என்கிற பொறுப்பினை நேர்மையாக நிறைவேற்றுவதற்காகவே, அப்படி நான் நடந்து கொண்டேன்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளத்தின் பொருளாளராக எனது கடமையினை நான் சிறப்பாக நிறைவேற்றியுள்ளமை குறித்து மனமகிழ்ச்சியடைகிறேன். என்னை நம்பி அங்கத்தவர்கள் ஒப்படைத்த பொறுப்பினை திருப்திகரமாக நிறைவேற்றியுள்ளேன். ஒவ்வொரு சதத்துக்குமான வரவு செலவினை எழுதி வைத்துள்னேன்.
எனது இந்த நடவடிக்கையினை – அடுத்து வருகின்ற பொருளாளரும் முன் கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகின்றேன். சகல கொடுக்கல் வாங்கல்களையும் பெயர் குறிப்பிடப்பட்ட காசோலைகளினூடாக நிறைவேற்றுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
இந்த சபையில் நான் சமர்ப்பிக்கும் கணக்கறிக்கையினை ஒவ்வொரு அங்கத்தவரும் கவனமாக பரிசீலிக்க வேண்டும். எனது கணக்கறிக்கையில் நம்பிக்கை உள்ளதாகவும், அதனால், அதனைப் பரிசீலிக்;க வேண்டிய அவசியமில்லை எனவும் நீங்கள் கூறுகின்றீர்கள். என்மீதான உங்கள் நம்பிக்கை மனமகிழ்சியை தருகிறது. ஆனாலும், உங்களுடைய அதிகபட்ச அல்லது கண்மூடித்தனமான இந்த நம்பிக்கையானது – ஒரு சிலரை தவறாக வழிநடத்தக் காரணமாகவும் அமைந்து விடக்கூடும். எனவே, சபையில் நான் சமர்ப்பிக்கும் கணக்கறிக்கையினை பரிசீலிக்குமாறு மீண்டும் ஒரு தடவை வேண்டிக் கொள்கிறேன்.
நமது – சம்மேளனத்துக்கென்று நிதியினைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் குறித்து நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். சந்தா செலுத்தும் நடைமுறை நமது சம்மேளனத்தில் இல்லை. ஆனால், அடுத்த மாதத்தில் இருந்து ஒவ்வொரு அங்கத்தவரிடமிருந்தும் மாதாந்த சந்தா தொகையாக 100 ரூபாவினை அறவிடுவதற்கான ஒரு யோசனையை இங்கு நான் முன்வைக்கின்றேன்.
எடுத்ததற்கெல்லாம், நிதியினைப் பெற்றுக் கொள்வதற்காக அடுத்தவரிடம் கையேந்திக் கொண்டு நிற்க முடியாது. அதை நான் வெறுக்கிறேன்.
கூடிக் கதைத்து - சாப்பிட்டு விட்டுக் கலைந்து போவதற்காக, இந்த சம்மேளத்தினை நாம் நடத்தவில்லை. நமது அங்கத்தவர்களின் நலன்புரி விடயங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். அண்மையில் நோயுற்ற நமது அங்கத்தவர் பிக்கீருக்கு - சம்மேளனத்தின் நிதியிலிருந்து 20 ஆயிரம் ரூபாவினை வழங்கியிருந்தோம். ஆனால், இன்றைய வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் யோசிக்கும் போது, நாம் - பிக்கீருக்கு வழங்கிய அந்தப் பணத்தொகை போதாது. எனவே, நமது சம்மேளனத்தின் நிதி வளத்தினை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளிலும், திட்டங்களிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

0 comments:
Post a Comment