• Latest News

    November 16, 2013

    யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது மனித உரிமை மீறல் இல்லையா.. அஸ்வர் சனல் 4 மீது ஆவேசம்.

    கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தீடீரென புகுந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் எழுப்பிய கேள்வியினால் பலரும் திக்கு முக்காடிப்போகும்  நிலை நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.

    வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு குறித்த கருத்துகளை தெரிவிக்கும் வகையிலும் ஜனாதிபதியில் ஊடக சந்திப்பு இடைநிறுத்தப்பட்டது குறித்து அறிவிக்கும் வகையிலும் பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் ரிச்சர்ட் உக்கு தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறுக்கிட்ட அஸ்வர் எம்.பி. சனல் 4 ஊடகவியலாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் கூலியாட்கள் என விமர்சித்தார்.
    இலங்கையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கொடூரங்கள், காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை தனது கடுமையான தொனியில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு எந்தவொரு அரசியல்வாதியும் அழைக்கப்படாத நிலையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சர்வதேச ஊடகவியலாளர்களை சாடியதால் அங்கு பெரும் சர்ச்சை நிலவியது.

    இவரை பேச்சை ரிச்சர்ட் உக்கு பல தடவைகள் குறுக்கிட்டு தடுத்தபோதும் எதையும் பொருட்படுத்தாத அஸ்வர் எம்.பி. தன்பாட்டுக்கு பேசிக்கொண்டே போனார். இதனால் அங்கு குழுமியிருந்த ஏராளமான சர்வதேச ஊடகவியலாளர்கள் தங்களது அசெளகரியத்தை வெளியிட்டனர்.

    பொதுவான ஒரு ஊடக சந்திப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குறுக்கிட்டு எவ்வாறு அதில் கலந்துகொண்டு தனது கருத்தை வெளியிடமுடிமென கேள்வியெழுப்பியபோது, அஸ்வர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதனை அறிந்திருக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்ப்பதாகவும் ரிச்சர்ட் உக்கு தெரிவித்தார்.

    இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்த ஜனாதிபதியின் ஊடகவியலாளர் சந்திப்பு தீடீரென இடைநிறுத்தப்பட்டது.

    இலங்கை வந்திருக்கும் சனல்-4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரேயும் குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனது பெயரை பதிவுசெய்திருந்தார். மாநாட்டில் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர்களின் பட்டியில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டது குறித்து கெலும் மெக்ரே ஏற்பாட்டாளர்களிடம் விவாதித்தார்.

    இதன் காரணமாவே ஜனாதிபதியின் ஊடகவியலாளர் மாநாடு இடைநிறுத்தப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் வைத்து கெலும் மெக்ரே, ஜனாதிபதியிடம் போர்க்குற்றங்கள் குறித்தும், தங்களை சந்திக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கைக்கு மீளிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் வடக்கிற்கும் பயணம் செய்து பல விடயங்களை நேரிலேயே கண்டறிந்தேன். இலங்கையில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது மனித உரிமை மீறல் இல்லையா.. அஸ்வர் சனல் 4 மீது ஆவேசம். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top