• Latest News

    November 24, 2013

    'கள்ளன்-பொலிஸ் விளையாட்டு....?

    ஷேக்ராஜா;
    ஒரு­கா­லத்தில்  கிரா­மத்து சிறார்­க­ளினால்  பெரிதும் விரும்­பப்­பட்ட 'கள்ளன் – பொலிஸ் விளை­யாட்டு' பற்றி உங்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்கும். அது கள்­வர்­க­ளாக பாத்­தி­ர­மேற்கும் சிறு­வர்­களை பொலி­ஸாக பாத்­தி­ர­மேற்கும் சிறுவன் தேடிப் பிடிப்­பது பற்­றி­யது. கள்­வர்கள்  ஒவ்­வொ­ரு­வ­ரையும்  தேடிப் பிடித்­த­வுடன்  'டுமீல்' அல்­லது 'சூட்டிங்' என்ற வார்த்­தையை பொலிஸ்­கார சிறுவன் சத்­த­மிட்டுச் சொல்­வதன் மூலம் கள்­வர்கள் தோற்­க­டிக்­கப்­ப­டுவர். இதில் முதன்­மு­த­லாக அகப்­படும் கள்வன் அடுத்த ஆட்­டத்தில் பொலி­ஸாக பாத்­தி­ர­மேற்பான்.
    அம்­பாறை  மாவட்­டத்தின்  நிந்­தவூர் பிர­தே­சத்தில்  இருந்து கடந்த சில தினங்­க­ளாக கிடைத்த செய்­திகள் இந்த விளை­யாட்டை ஞாப­க­மூட்­டி­னாலும், அங்கு நடப்­பது விளை­யாட்­டல்ல என்­பதை உள்­ம­னது சொல்­லி­யது. அதேபோல் இவ் விளை­யாட்டில் அங்கம் வகிக்கும்  கதா­பாத்­தி­ரங்­களின்  வகி­பா­கங்­களில்  இருந்து நிந்­தவூர் அசம்­பா­வி­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களின் நட­வ­டிக்­கைகள் வெகு­வாக மாறு­பட்­ட­வை­யா­கவும் தெரி­கின்­றன.

    நிந்­தவூர் பிர­தேசம் பொத்­துவில் மட்­டக்­க­ளப்பு ஏ3 நெடுஞ்­சா­லையில் காரை­தீவு தமிழ் பிர­தேசம் மற்றும் ஒலுவில் முஸ்லிம் பிர­தேசம் ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் அமைந்­தி­ருக்­கின்ற ஒரு நிலப்­ப­ரப்­பாகும். முஸ்லிம் காங்­கி­ரஸின் கோட்­டை­யாக  இருந்த  ஊரில் கோட்டை சற்றே  சரிந்­தி­ருந்­தாலும்  பிர­தேச சபை மு.கா.வசமே இருக்­கின்­றது.

    2 எம்.பி.க்களும் ஒரு மாகாண சபை உறுப்­பி­னரும்  இங்­குள்­ளனர். இவ்­வூ­ருக்­கென  தனி­யான பொலிஸ் பிரிவு இல்லை. இவ்­வூரின் சிவில் நிர்­வா­கத்தை கவ­னிக்கும் சம்­மாந்­துறை பொலிஸ் நிலையம் சில கிலோ­மீற்றர் தொலைவில் இருக்­கின்­றது. அதேபோல் 631 படை­யணி முகாம் இரு கிலோ­மீற்றர் தொலைவில் காரை­தீவில் இருக்­கின்­றது.

    திகில் நிறைந்த சம்­ப­வங்கள்

    இப் பிர­தே­சத்தில் அண்­மைக்­கா­ல­மாக கள­வுகள், கொள்­ளைகள்  மற்றும்  மர்­ம­மான நிகழ்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. கள்­வர்கள் எக்­கா­லத்­தி­லுமே உல­வித்­தி­ரி­கின்­றனர் என்ற யதார்த்­தத்தின் அடிப்­ப­டையில் வீடு­களில் பொருட்கள் களவு போவது   கள்­வர்­களின் வேலை­யாக இருக்­கு­மென வைத்துக் கொள்­ளலாம்.

    என்­றாலும்    ராஜேஸ்­கு­மாரின்  கதை­களில் வரு­வது போன்று – கூரை­களில்  கல்­லெ­றி­வது, கதவில் பல­மாக தட்­டு­வது, மதிலால் பாய்ந்து காலடிச் சத்தம் கேட்க ஓடு­வது போன்ற திகி­லூட்டும் அசம்­பா­வி­தங்கள் வெறு­மனே திருடுவதற்­காக  மட்டும்  வரு­ப­வர்­களால்  செய்­யப்­ப­டு­வ­தாக  கணிப்­பிட முடி­யா­தவை.

    ஏனென்றால்,  சத்­தம்­ப­டாமல் வந்து கிடைப்­பதை சுருட்டிக் கொண்டு போகவே திரு­டர்கள் விரும்­பு­வார்கள். அதற்­கு­மப்பால் சமிக்ஞை கொடுத்­து­விட்டு வரு­வ­தாயின், மக்­களை கிலி கொள்ளச் செய்து அதி­லி­ருந்து எதை­யா­வது சாதித்துக்  கொள்ள  நினைக்கும்  சமூக விரோத சக்­தி­களே அதனைச் செய்ய வேண்டும்.

    இதற்கு நல்ல அனு­பவம் கிறீஸ் மனிதன் பற்­றிய சம்­பவங்­களும் அது தொடர்­பான கதை­க­ளு­மாகும். இப்­போது அது­பற்றி கேட்டால் அப்­படி ஒன்று நடந்­தது என்­பதே ஜோக்­கா­கத்தான் தெரி­கின்­றது. ஆயினும்  2011 இல் இவ்­வா­றான மர்ம நபர்கள் அலைந்து  திரிந்­ததால்  எப்­பேர்ப்­பட்ட   பீதியும்  பயமும்   தமிழ் பேசும் மக்­க­ளி­டையே நிலை­கொண்­டி­ருந்­தது என்­பதை யாவரும் அறிவோம். இவ்­வா­றான ஆட்­களின் நட­மாட்­டத்தை நேர­டி­யாக கண்­ட­வர்கள் நிறையப் பேர் இருந்­தனர். ஆனால் எல்லாம் தானாக ஓயும் வரைக்கும் ஏவி விடப்­பட்ட அந்­ந­பர்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போனது.

    கிறீஸ் மனித அனு­ப­வத்தை வைத்துப் பார்க்­கின்­ற­போது ஒரு கோர்­வை­யாக நிந்­த­வூரில் நடந்­தேறும் இத்­த­கைய சம்­ப­வங்­களின் சீரியஸ் தன்­மையை உணர்ந்து கொண்ட மக்கள் பிர­தி­நி­தி­களும் பாது­காப்பு தரப்­பி­னரும் பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் சேர்ந்து ஒரு கூட்­ட­மொன்றை கடந்த வாரம் நடத்­தி­யி­ருந்­தனர்.

    'பாது­காப்புத் தரப்­பினர் எமக்கு அறி­விக்­காமல் சிவில் உடையில் வர­மாட்­டார்கள்' என்ற கருத்­துப்­பட படை உய­ர­தி­காரி ஒருவர் இக் கூட்­டத்தில் கூறி­யி­ருந்தார். இதன்­போது பல விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்டு சில தீர்­மானங்கள் எடுக்­கப்­பட்­டன. இவற்றுள் முக்­கி­ய­மா­னது – இரவு வேளை­களில் தேவை­யின்றி வீதி­களில் உலவித் திரியக் கூடாது. இரவு 9 மணிக்கு பிறகு வெளியில் செல்­கையில் ஆள் அடை­யாள ஆவ­ணத்தை கொண்டு செல்ல வேண்டும் என்­ப­து­மாகும். இந்­நி­லை­யி­லேயே அச்­சம்­பவம் நடந்­தது.
    சிக்­கிய சீரு­டை­தா­ரிகள்

    அன்­றி­ரவு நிந்­தவூர் கடற்­கரைப் பூங்­கா­வுக்கு அருகில் இருந்த பொது­மக்கள், அங்கு சீரு­டையில் வந்த நான்­கைந்து பேர் சாதா­ரண (சிவில்) உடைக்கு மாறிக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்­துள்­ளனர். உடை மாற்றிக் கொண்­டி­ருந்­த­வர்­களை நோக்கி பொது­மக்கள் நெருங்கிச் சென்­ற­போது அவர்கள் அங்­கி­ருந்து நழு­வி­விட எத்­த­னித்­துள்­ளனர். இருந்தும் அவர்­களை சூழ்ந்து கொண்ட கிரா­ம­வா­சிகள், அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­மாறு கூறி­யுள்­ளனர். அதனை சரி­யாகச் செய்­யாத குறித்த நபர்கள் அங்­கி­ருந்து தப்பிச் செல்­லவும் முயன்­றுள்­ளனர்.

    இவ்­வி­ஷயம் ஊருக்குள் பர­வி­யதும் அர­சி­யல்­வா­திகள் உட்­பட ஒட்­டு­மொத்த ஊரே கடற்­க­ரையில் திரண்­டது. அப்­போது அங்கு வந்த பைசல் ­காசிம் எம்.பி. பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­த­தா­கவும் அவர்கள் வரு­வ­தற்­கி­டையில் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் விரைந்து வந்­து­விட்­ட­தா­கவும் அவரே கூறி­யி­ருக்­கின்றார்.

    அதி­ர­டிப்­ப­டை­யினர் அங்கு வந்­ததும் நிலைமை இன்னும் தீவி­ர­ம­டைந்­தது. 'நாங்கள் அதி­ர­டிப்­ப­டை­யினர்' என்று பைசல் காசிம் எம்.பி.யிடம் சொன்ன மர்ம நபர்­களை பாது­காப்­பாக அழைத்துச் செல்லும் முயற்­சியில் படையினரும் அவர்­களை   மடக்­கிப்­பி­டித்து பொலிஸில்   ஒப்­ப­டைக்கும் முயற்­சியில் பிர­தே­ச­வா­சி­களும் ஆளுக்காள் போரா­டி­யுள்­ளனர்.

    கடை­சியில், வானத்தை நோக்­கியும் நிலம் நோக்­கியும் உரக்கப் பேசிய துப்­பாக்­கி­களின் நடுவே நிரா­யு­த­பா­ணி­க­ளான பொது­மக்கள் தோற்­றுப்­போ­னார்கள். அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் சூட்­சு­ம­மாக அங்­கி­ருந்து அழைத்துச் செல்­லப்­பட்ட மர்ம நபர்கள் சம்­மாந்­துறை பொலி­ஸாரின் தலை­யீட்­டை­ய­டுத்து பொலி­ஸிற்கு கொண்டு செல்­லப்­பட்­டனர். இதனால், ஒரு­வித ஆத்­தி­ரமும் வஞ்­சமும் அடைந்த நிந்­தவூர் மக்கள் அடுத்த நாளான திங்கட் கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்­டித்­தனர்.

    இதற்­கி­டையில் அன்று மாலை நல்­லி­ணக்க கூட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. மர்ம நபர்­களை பிடிக்கும் இழு­ப­றியில் தாக்­கு­த­லுக்கு இலக்­கான பிர­தேச சபை தவி­சாளர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்­த­மையால் பைசால் காசீம் எம்.பி.யே இதில் முக்­கிய மக்கள் பிர­தி­நி­தி­யாக கலந்து கொண்டார். இக்­கூட்­டத்தில் நிந்­தவூர் மக்கள் சார்­பாக முன்­வைக்­கப்­பட்ட முக்­கிய கோரிக்­கைக்கு பாது­காப்பு தரப்­பினர் சம்­மதம் தெரி­வித்­தனர்.

    பொது மக்­களால் பிடிக்­கப்­பட்ட நபர்கள் தவ­றி­ழைத்­தமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது என்­பதே அந்த இணக்­கப்­பா­டாகும். பொலிஸ் ஊடாக சட்­டத்தின் முன் நிறுத்­து­வது. இவைதான் நிந்­த­வூரில் இடம்­பெற்ற முதலாம் கட்ட சம்­ப­வங்கள். இவற்றில் துலக்­கப்­பட வேண்­டிய நிறைய மர்­மங்கள் இருப்­பதை காண்­கின்றோம்.

    துலக்­கப்­ப­டாத மர்­மங்கள்
    தம்மை விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்­திய மர்ம நபர்கள் களவு    எடுக்கும் வேளை­யிலோ  அல்­லது   பொது மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டும்­போதோ கையும் மெய்­யு­மாக பிடி­ப­ட­வில்லை என்­பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சிவில் உடைக்கு மாறும் ஒரு படை வீரர் மோச­மான நோக்­கத்­தோ­டுதான் அதைச் செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்­டா­யமும் இல்லை. ஆயினும், அன்று ஊரில் இருந்த நிலைமை அவர்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்கும்.

    ஆதலால், கிரா­ம­வா­சிகள் தம்மை நெருங்கி வரும்­போது தமது கட­மை­யையே அவர்கள் செய்து கொண்­டி­ருந்தால் ஏன் அங்­கி­ருந்து தப்­பி­யோட முயற்­சிக்க வேண்டும்? தமது அடை­யாள அட்­டையைக் காட்டி உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். சிவில் விட­யங்­க­ளுக்கு பொறுப்­பான பொலி­ஸாரை அழைத்து அவர்­களின் முன்­னி­லையில் தம்மை நிரூ­பித்­தி­ருக்­கலாம். மழுப்­ப­லான பதில்­களைக் கூறி சந்­தே­கத்­திற்கு வலுவூட்டியி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

    சரி, அதற்குப் பிறகு அதா­வது மேல­திக படை­யினர் வந்த பிற­கா­வது ஊர் மக்­களின் கோரிக்­கைக்கு இணங்­கி­யி­ருக்­கலாம். தமது கௌர­வத்தை பாராது, மக்கள் கேட்டுக் கொண்­ட­துபோல் பள்­ளி­வாசல் ஊடாக பொலி­ஸா­ருக்கு ஒப்­ப­டைத்­தி­ருந்தால் பிரச்­சினை அங்­கேயே முடிந்­தி­ருக்­கவும் அதிக வாய்ப்­பி­ருந்­தது என்­கின்றார் அங்­குள்ள வய­தான பெரி­யவர் ஒருவர்.

    வெறுங் கைக­ளோடு நின்ற மகா ஜனங்­க­ளி­ட­மி­ருந்து படைவீரர்கள் சிலரை பாது­காப்­பாக அழைத்துச் செல்­வ­தற்­காக வீணாக பாவிக்­கப்­பட்ட தோட்­டாக்கள் ஒரு சில­ருக்கு சிராய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யது மட்­டு­மன்றி, ஒட்­டு­மொத்த நிந்­தவூர் மக்­களும் அதற்குப் பின்னர் மேற்­கொண்ட நகர்­வு­க­ளுக்கும் தூண்­டு­த­லாக அமைந்­தது என்­பது அவ­ரது கருத்து.

    இவ்­வாறு பிடிக்­கப்­பட்­ட­வர்கள் விஷேட அதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்­த­வர்கள் அல்ல என்று பாது­காப்புத் தரப்பில் யாரும் கூற­வில்லை. மாறாக, 'சிவில் உடையில் காணப்­பட்­ட­தாக கூறப்­படும் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் தவறு செய்­தமை கண்­ட­றி­யப்­பட்டால் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்' என்றே பொலிஸ் பேச்­சாளர் குறிப்­பிட்­டுள்ளார். அப்­படிப் பார்த்தால் ஏன் சிவில் உடையில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் வந்­தார்கள் என்­ப­தில்தான் பிரச்­சினை இருக்­கின்­றது.

    எமது கேள்வி ஞானத்தின் பிர­காரம், சிவில் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தென்றால் குறைந்­த­பட்சம் தமது முகாம் மேல­தி­கா­ரிக்கு தமது பணி­யி­லக்கு குறித்து தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருத்தல் அவ­சியம். ஆனால், நிந்­த­வூ­ருக்கு வந்­த­வர்கள் ஏன் வந்­தார்கள் என்ற காரணம் மேற்­சொன்ன மேல­தி­கா­ரி­க­ளுக்கு தெரிந்­தி­ருந்­த­தா­கவோ அதனை அவர்கள் உறுதி செய்­த­தா­கவோ இக் கணம் வரைக்கும் தகவல் இல்லை.

    அதேபோல் சிவில் நட­வ­டிக்கை அவ­சி­ய­மென்றால் முகா­மி­லி­ருந்து புறப்­ப­டும்­போதே சிவில் உடையில் வரு­வ­துதான் வழக்கம். அவ்­வா­றில்­லாமல் எல்லா ஆடை­க­ளையும் கொண்டு வந்து வேறெங்­கா­வது ஆடை மாற்­றினால். கழற்­றிய உடுப்­பையும் ஆயுதம் இருந்தால் அத­னையும் சுமந்து திரிய வேண்­டிய நிலையே ஏற்­படும். அது 'சிவி­லா­கவும்' இருக்­காது. ஆன­போதும், சீரு­டை­யு­டனும் இன்னும் சில துணை உடு­து­ணி­க­ளு­டனும் கடற்­கரை வரைச் சென்று சாதா­ரண உடைக்கு மாறி­யுள்­ளதை ஊர் பார்த்­துள்­ளது.

    அப்­படி என்றால், மேலி­டத்­திற்கு தெரி­யா­மலும் வழக்­கத்­திற்கு மாறா­கவும் இவர்கள் ஈடு­பட்­டி­ருந்­தது எவ்­வி­த­மான பணியில்? என்ற கேள்வி எழு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கின்­றது. இக் கேள்­விக்கு விடை­காணும் முயற்­சியின் ஒரு அங்­க­மா­கவே பூரண ஹர்த்­தாலை நிந்­தவூர் மக்கள் மேற்­கொண்­டனர். இதனால் வேறு பிர­தேச மக்­களும் பய­ணி­களும் சிறிய அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருந்­தாலும் இந்தக் கடை­ய­டைப்பில் ஒரு நியாயம் இருந்­தது. ஆனால், நிந்­தவூரில் மறுநாள் செவ்­வாய்க்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டத்தில் இந்த நியா­யத்தை குறை­வா­கவே காணக் கிடைத்­தது.

    தேவை­யற்ற அசம்­பா­விதம்

    திங்கட் கிழமை நடை­பெற்ற நல்­லி­ணக்க கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட மேற்­கு­றிப்­பிட்ட தீர்­மா­னத்தை உற்று நோக்­குங்கள். இரண்டு முக்­கிய விட­யங்­க­ளுக்கு பாது­காப்புத் தரப்­பினர் இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தனர். இன்று நாடு இருக்­கின்ற நிலை­மையில் அவர்கள் இப்­படி ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­ததே பெரிய விஷயம் என்ற யதார்த்­தத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை­யெல்லாம் கடந்து இன்­னு­மொரு நாள் ஹர்த்தால் அனுஷ்­டித்­ததும் பாது­காப்புத் தரப்பி­ன­ருக்கு எதி­ராக மல்­லுக்கு நின்­றதும் தேவை­யற்ற விளை­வுகள் பல­வற்றை வலிந்து நிகழ்த்தி விட்­டி­ருக்­கின்­றது.

    பைசல் காசிம் எம்.பி. உள்­ளிட்ட பல்­த­ரப்பு கூட்­டத்தில் திங்­க­ளன்று எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தில் நிந்­த­வூரைச் சேர்ந்த குறிப்­பிட்­ட­தொரு மக்கள் பிரி­வினர் அதி­ருப்­தி­யுற்­றனர். இதனை விடவும் காத்­தி­ர­மான முடிவு எட்­டப்­பட்­டி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­களின் நிலைப்­பா­டாக இருந்­தது. அதனால், ஹர்த்­தாலை முடி­வுக்கு கொண்டு வராமல் அடுத்த நாளும் தொடர்­வ­தற்கு முடி­வெ­டுத்­தனர். நள்­ளி­ரவு முதற்­கொண்டு இவர்கள் இதற்­கென இயங்கிக் கொண்­டி­ருந்­ததால் வீதியை மறித்து போடப்­பட்ட அனைத்து தடை­களும் போட்­டது போட்­ட­ப­டியே கிடந்­தன.

    இத­னை­ய­றிந்த பொலிஸார்  'கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடி­வுக்கு அமைய நடந்து கொள்­ளு­மாறும்  வீதி தடை­களை நீக்கி போக்­குவ­ரத்­துக்கு  வழி­வி­டு­வ­துடன்  ஹர்த்­தாலை  வாபஸ் பெற்று அமை­தியை பேணு­மாறும்' காலை 9 மணி முதற்­கொண்டு  காரை­தீவு சந்­தியில் இருந்­த­வாறு  ஒலி­பெ­ருக்­கியில் அறி­வித்துக் கொண்டே இருந்­தனர். ஆனால், நிந்­தவூர் பிர­தான வீதியில் குழுமி நின்­ற­வர்கள் சற்றும் அவ்­வி­டத்தை விட்டு அசை­ய­வில்லை.

    ஒரு மணித்­தி­யா­லத்தின் பிறகு நிந்­தவூர் நகர்ப்­ப­கு­தியை நோக்கி பொலிஸார் முன்­னே­றினர். சுமார் 300 பொலிஸார் கல­கத்­த­டுப்பு உப­க­ர­ணங்­க­ளோடும் கண்­ணீர்­புகைக் குண்டு, துப்­பாக்­கிகள் மற்றும் வீதித் தடை­களை அகற்றுவதற்கான கன­ரக (கவுண்டி) வாக­னத்­தோடும் வந்­தனர். அவ்­வே­ளை­யிலும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் வீதி­களின் குறுக்கே நின்று கொண்­டி­ருந்­த­தாக நேரில் கண்ட ஒருவர் தெரி­வித்தார். அதற்குப் பிறகு வேறு வழி­யில்லை – பொலி­ஸாரும் பொது மக்­களும் நேருக்கு நேர் சந்­திக்க வேண்­டி­ய­தா­யிற்று.

    ஆர்ப்­பாட்டக் காரர்கள் கல்­லு­களை பொலி­ஸாரை நோக்கி வீசி­ய­போது பதி­லுக்கு பொலிஸார் கண்ணீர் புகைக்­குண்­டு­களை பிர­யோ­கித்­தனர். கடை­சியில் 21 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டனர். வீதியில் கிடந்த 8 மோட்டார் சைக்­கிள்­களும் 20 துவிச்­சக்­கர வண்­டி­களும் பொலி­ஸாரால் ஏற்றிச் செல்­லப்­பட்­டன. மூன்று மணித்­தி­யால களே­ப­ரத்தின் பின்னர் நிந்­த­வூரில் ஒரு­வித அச்சம் கலந்த நிசப்தம் நில­வி­யது. இதுதான் இரண்டாம் கட்ட காட்­சிகள்.

    ஒரு ஊரில் உள்ள பிர­மு­கர்கள் யாரா­வது ஒரு கூட்­டத்தில் கலந்து கொண்டால் அக் கூட்­டத்தில் பங்­கேற்கும் பிற தரப்­பினர் என்ன நினைப்­பார்கள்? அவ்வூர் முற்­று­மு­ழு­தாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்றே எண்­ணுவர். அதில் எட்­டப்­படும் தீர்­வு­களை ஊர் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்­டு­மெ­னவும் எதிர்­பார்ப்பர். உள்­ளுக்குள் கருத்து வேற்­று­மைகள் இருப்­பது பற்றி வெளித் தரப்­பி­ன­ருக்கு கவ­லை­யில்லை.

    அந்த வகையில் கூட்­டத்தில் எட்­டப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமைய ஹர்த்­தாலை கைவிட வேண்டும் என பொலிஸ் தரப்பு எதிர்­பார்த்­தது நியா­ய­மா­னது என்றே சொல்ல வேண்டும். பைசல் காசிம் செயற்­றிறன் அற்ற ஒரு அர­சி­யல்­வா­தி­யாக இருக்­கலாம். ஆனால் இது விட­யத்தில் ஏதோ­வொன்று செய்­தி­ருக்­கின்றார். சரியோ பிழையோ தமது ஊர் பிர­தி­நி­தியின் பங்­கு­பற்­று­த­லுடன் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு தலை­சாய்த்­தி­ருந்தால் தேவை­யற்ற விளை­வு­களை தடுத்­திருக்­கலாம்.

    உள்­வீட்டு பூசலின் விளைவு

    உண்­மையில் இரண்டாம் நாள் ஹர்த்­தா­லுக்கு உள்­வீட்டு பூசலே பிர­தான காரணம் என்­கிறார் நாலு­ம­றிந்த போராளி ஒருவர். முதல்நாள் சம்­ப­வத்தில் தாக்­கு­த­லுக்­குள்­ளான நிந்­தவூர் பிர­தேச சபை தவி­சா­ள­ருக்கும் பைசல் காசிம் எம்.பி.க்கும் இடையில் சிறி­ய­தொரு பனிப்போர் உள்­ளதாம். இந்­நி­லை­யி­லேய, எம்.பி.யால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த தவி­சா­ளரின் ஆத­ர­வா­ளர்கள். ஹர்த்­தாலை நீடிக்க நட­வ­டிக்கை எடுத்­தனர்.

    தவி­சாளர் ஆஸ்­பத்­தி­ரியில் இருந்து வீடு திரும்­பாத நிலையில் என்ன சமா­தானம் வேண்டிக் கிடக்கு என்று எண்­ணி­ய­வர்­களும், பொலிஸார் மற்றும் படை­யி­னரின் செயற்­பா­டு­களில் அதி­ருப்­தி­யுற்ற மக்கள் பிரி­வி­னரும் இதற்கு ஆத­ரவு நல்­கினர்.

    அந்த மக்­களின் உணர்­வு­க­ளையும் நெஞ்­சு­ரத்­தையும் மதிக்க வேண்டும். ஆனாலும், இந்த வீதி­ம­றியல், அதன் பின்­ன­ரான கண்­ணீர்ப்­புகைக் குண்டு பிர­யோகம் மற்றும் கைதுகள் என்­ப­வற்றை வைத்துப் பார்க்­கின்ற போது, இரண்டாம் நாள் போராட்டம் தூர­சிந்தை கொண்­ட­தல்ல என்­பதை கோபப்­ப­டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    சிந்­தித்துப் பாருங்கள்! ஆனானப்­பட்ட புலிகள் இயக்­கத்­தையே வேர­றுத்த பாது­காப்பு தரப்­பினர் முன்னே எவ்­வி­த­மான அர­சியல் பக்­க­ப­லமும் இன்றி. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்­பது எவ்­வ­ளவு தூரம் பாது­காப்­பற்­றது? கல­கத்தை அடக்­கு­வ­தற்­கான எல்லாத் தள­வா­டங்­க­ளோடும் வரு­கின்ற பொலி­ஸா­ருக்கு முன்னால் – கடைசி வரை போராடும் திறனோ வளமோ இல்­லாத ஒரு சமூகம் வெறும் கூழாங்­கற்­களில் தமது உயிரைப் பணயம் வைக்க முடி­யுமா என்பதை காலங்­க­டந்­தா­வது சீர்­தூக்கிப் பார்க்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

    சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் வயதில் குறைந்த 6 பேரும் சித்த சுவா­தீ­ன­மற்ற ஒரு­வரும் நீதி­மன்­றத்தால் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். மீத­மான 14 பேரும் நேற்று பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்கள் மீது பல பிரி­வு­களில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இவர்­களை யார் மீட்டு வரப்­போ­கின்­றார்கள்? எந்த அர­சியல் மீட்­பரும் அதனைச் செய்­யப்­போ­வ­தில்லை. அவர்­க­ளது பெற்­றோர்தான் இருப்­பதை அட­கு­வைத்து வழக்கு நடத்த வேண்டும்.

    அவர்கள் விரைவில் விடு­த­லை­யா­னாலும் வழக்குத் தவ­ணைகள் முடி­வ­டை­வ­தற்கு எத்­தனை வரு­டங்கள், மாதங்கள் எடுக்­குமோ தெரி­யாது. என­வேதான் சொல்­கிறேன் – இப்­போ­தில்­லா­விட்­டாலும் தவ­ணை­க­ளுக்கு சென்று மனம் வெறுக்­கின்ற ஒரு நாளி­லேனும் 'இந்த நட­வ­டிக்கை தவிர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­யது' என்ற எனது கருத்­துடன் உடன்­ப­டு­வீர்கள் என்று.
     
    பொறுப்­புள்­ள­வர்­களின் பொறுப்பு

    சரி, நிந்­தவூரில் கடை­ய­டைப்பு ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது. சிலர் கைதா­கினர். இது வழக்­க­மா­ன­து­தானே. இந்த இக்­கட்­டான சூழலில் எங்கே போனார்கள் முஸ்லிம் சமூ­கத்தின் மேய்ப்­பர்­களும் மீட்­பர்­களும் தேர்­தல்­காலம் என்றால் உடுத்­தி­ருந்த சாரத்­தோடு இர­வோ­டி­ர­வாக பறந்து வந்­தி­ருப்­பார்கள். ஆனால், இது மக்­களின் பிரச்­சினை என்­பதால் மறந்தும் நிந்­தவூர் பக்கம் போய்­விடக் கூடாது என இருக்­கின்­றார்கள் போலும்.

    மு.கா.வின் வாக்கு வங்கி என நிந்­த­வூரை வர்­ணிக்­கின்ற நீதி அமைச்­சரும் கட்சித் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் தகவல் கிடைத்த உட­னேயே பத­றி­ய­டித்து ஓடி வருவார் என்று மக்கள் நம்­பினர். ஆனால்,  இந்த நிமிஷம் வரைக்கும் அது நடக்­க­வில்லை. திரு­கோ­ண­ம­லைக்கு வந்­தி­ருந்த தலைவர் தமது பிர­தே­சத்­திற்கு வந்து எட்­டிப்­பார்க்­காமல் போனது நிந்­தவூர் மக்­க­ளி­டையே கடு­மை­யான விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதே­போன்று, சின்ன ஒரு விட­யத்­திலும் அக்­கறை கொண்டு அறிக்கை விடு­கின்ற எம்.ரி. ஹச­னலி எம்.பி. அதைக் கூட செய்­யாமல் விட்­டதும் அவ­ரது சொந்த ஊரில் பேசு­பொ­ரு­ளாக ஆகி இருக்­கின்­றது.

    இவர்கள் இரு­வ­ருக்­குமே இப்­பி­ரச்­சி­னையை தீர்த்து வைக்கும் கடப்­பாடு அதி­க­மி­ருக்­கின்­றது. என்­றாலும், அங்­குள்ள மாகாண சபை உறுப்­பி­ன­ருக்கும் ஏனைய முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் கூட இதில் தார்­மீக கட­மை­யி­ருக்­கின்­றது. ஏனென்றால் இதனை முளையில் கிள்ளி எறி­யா­விட்டால் ஏனைய பிர­தே­சங்­க­ளுக்கும் பரவும் அபா­ய­மி­ருக்­கின்­றது.

    அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் பிரே­ரணை கொண்டு வந்த உறுப்­பினர் ஜெமீல், பொலிஸ் மா அதி­ப­ரிடம் இவ்­வி­ட­ய­மாக பேசிய அமைச்சர் றிசாட் பதி­யுதீன் மற்றும் கருத்து வெளி­யிட்­டுள்ள அசாத்­சாலி போன்றோர் நன்­றிக்­கு­ரி­ய­வர்­களின் பட்­டியலில் சேர்ந்து கொண்­டுள்­ளனர்.

    இதே­வேளை, இன்­னு­மொரு விட­யத்தை குறிப்பிட வேண்டும். அதாவது – யுத்தம் குடிகொண்டிருந்த நேரத்தில் பொலிஸாரும் படையினரும் மக்களை காப்பாற்றுவதற்காக செய்த தியாகங்களை முஸ்லிம்கள் மறந்து விடவில்லை.
    இறைவனுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பு தரப்பினரை நம்பி வாழ்க்கை நடத்திய காலம் மறந்து விடக்கூடியதுமல்ல. ஆனால், 'போர் நாயகன்கள்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்ற படையினர் மற்றும் 'மக்களின் காவலன்' என அழைக்கப்படும் பொலிஸார் ஆகியோருடன் மக்கள் கொண்டிருந்த நல்லுறவில் கண்பட்டது போலவே அண்மைக்கால சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

    இதில் இம்மியளவும் அரசுக்கோ படையினருக்கோ தொடர்பில்லை என்பதை மக்கள் நம்ப வேண்டுமென்றால், உண்மையானவர்களை கண்டு பிடிக்க வேண்டும். கிறீஸ் மனிதன் விவகாரத்தின் அடுத்த பாகம் போல இப்போது உருவாகியுள்ள இந்த மர்ம நபர்களின் நடமாட்டத்தை அடக்க வேண்டியதே இன்றைய உடனடி தேவையாகும். பாதுகாப்பு தரப்பினரும் பொதுமக்களும் முரண்பட்டுக் கொள்ளாமல் கூட்டாக செயலாற்றி சமூக விரோத சக்திகள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.

    இவ்வளவு பிரச்சினை நடந்தேறிய பிற்பாடும் நிந்தவூரில் முன்னர் போன்ற அச்சமளிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே குறிப்பிட்ட சில படையினர் வேறொரு நிகழ்ச்சி நிரலுக்காக இவ்வாறு நடந்து கொள்கின்றனரா? அல்லது அவர்களுக்கும் இதற்கும் அறவே தொடர்பில்லையா? அன்றேல் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரிந்திருக்க வேறு யாரோ முஸ்லிம்களை சீண்டிப்பார்க்க முனைகின்றனரா?.... என ஆயிரத்தெட்டு கேள்விகளுக்கு விடைகாண வேண்டியிருக்கின்றது. நிந்தவூரில் பிடிபட்ட படையினரை தீரவிசாரித்து அவர்களது வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டால் அரைவாசி கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    உண்மையில் அரசாங்கத்தை செயற்கை அசௌகரியம் ஒன்றிற்குள் தள்ளுகின்ற ஒரு கைங்கரியமாக இருப்பதால் ஜனாதிபதியும் அரசியல்வாதிகளும் இது விடயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும்.

    திருடனாய் பார்த்து திருந்தும் வரை காத்திருக்க சொல்லக் கூடாது.  
    நன்றி: கேசரி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'கள்ளன்-பொலிஸ் விளையாட்டு....? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top