• Latest News

    November 16, 2013

    இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா இழந்தது சச்சினை, கண்ணீர் மல்க விடை பெற்றார் சச்சின்

     இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்ளின் கரகோசத்துடன்  கண்ணீர் மல்க தனது 200ஆவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    இதில் முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 182, இந்தியா 495 ஓட்டங்கள் எடுத்தன. இறுதி கடைசி டெஸ்டில் விளையாடிய சச்சின். முதல் இன்னிங்சில் 74 ஓட்டங்கள் விளாசினார். இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 187 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    முடிவில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்றதும், மைதானத்தில் இருந்த இந்திய வீரர்களை சச்சின் கட்டி அணைத்தார். பின் இருபுறமும் வீரர்கள் நின்று கொண்டுஇ சச்சினை நடுவில் வரச் செய்து விடை கொடுத்தனர்.
    அப்போது கண்ணீர் விட்டு அழுதார். பிறகு மேற்கிந்திய தீவுகளின் அணி வீரர்கள் அனைவரும் கைகொடுத்து வாழ்த்தினர். 16 வயதில் இந்திய அணியில் களமிறங்கிய சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் சாதித்து, வெற்றியுடன் வெளியேறிய போது, மைதானமே எழுந்து நின்று விடை கொடுத்தது.

     சச்சின் டெண்டுல்கரின் உரை

    மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் நீண்ட கரகோஷத்துக்கு மத்தியில் தனது நன்றி உரையை ஆற்றினார். சச்சின் பேச வந்ததும், ரசிகர்களின் கரகோஷம் நீண்ட நேரத்துக்கு நிற்கவேயில்லை. கரகோஷம் தொடர்ந்த நிலையிலேயே சச்சின் பேசத் தொடங்கினார்.
     நன்றி தெரிவிக்க வேண்டிய வர்களின் பட்டியல் அவர் கையில் வைத்திருந்தார். முதல் முறையாக தான் இந்த பட்டியலை தயாரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    நா தழுதழுத்த குரலில் அவர் உணர்ச்சிப் பொங்க பேசியதாவது, '1999ஆம் ஆண்டு எனது தந்தையை இழந்தது எனக்கு மிகப்பெரிய பின்னடைவு. அவருடைய வழிகாட்டல் இல்லாமல் நான் இந்த அளவுக்கு முன்னேறி இங்கு நிற்கிறேன் என்றால், அது அவரது வளர்ப்புதான். அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். எனது 11 வயதில் நான் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எனக்கு சுதந்திரம் அளித்தார்.
    கனவு  காண வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். அதுவும் குறுகிய கனவுகளைக் காணக் கூடாது என்றும் கூறுவார். பாதை கடினமாக இருக்கும். அதனால் துவண்டு போகக் கூடாது என்று எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார். என்னை ஒரு நல்ல மனிதனாக உருவாக்கினார் எனது தந்தை. அவர் இல்லாததது. இந்த நேரத்தில் என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது.

    அடுத்து எனது தாய், என்னைப் போன்ற மிகவும் சுட்டித்தனமான குழந்தையை வளர்க்க அவர் அதிகம் சிரமப்பட்டார். எனக்காக அவர் ஏராளமான தியாகங்களை செய்துள்ளார். எனது ஆரோக்கியம், எனது நலனை மட்டுமே அவர் நினைத்து வாழ்ந்துள்ளார். உங்களது வாழ்த்துக்களும், தியாகமுமே என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று கூறினார் சச்சின்.

    1991ஆம் ஆண்டு அஞ்சலியை திருமணம் செய்தது எனது வாழக்கையில் நடந்த மிக அருமையான விடயம். அஞ்சலி எனது குடும்பத்தை அழகாக கவனித்துக் கொண்டார். நான் கிரிக்கெட்டை கவனித்தேன். அவர் எனது குடும்பத்தை, எனது அனைத்து சுமைகளையும் அவரே தாங்கிக் கொண்டார் என்று தழுதழுத்த குரலில் கூறினார். அப்போது அஞ்சலி அதைக் கேட்டு கண் கலங்கினார்.

    நான் காயம் அடைந்து விளையாடாமல் இருந்த போதெல்லாம், என்னை அடிக்கடி தொடர்பு கொண்டும், என்னுடன் நேரத்தை செலவிட்டும், இதோடு கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடாது என்று கூறி எனக்கு உற்சாகம் அளித்த நண்பர்களுக்கும் நன்றி.
     இந்திய அணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அடுத்த தலைமுறையினருக்கும் இது கிடைக்கும். நாட்டுக்கு சேவையாற்ற உங்களுக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்தை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    எனக்கு இது நாள் வரை துணையாக இருந்த அனைத்து ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பிள்ளைகளுக்காக இதுவரை நான் நேரம் செலவிட்டதே இல்லை. இதுவரை உங்களுக்கு எதை எல்லாம் செய்ய முடியாமல் போனதோ.. அதை எல்லாம் இனி உங்களுக்காக நான் செய்வேன். இனி எனது நேரம் முழுமையாக உங்களுக்காகவே செலவிடுவேன்.

    எனது பேச்சு நீண்டு கொண்டிருக்கிறது. எனினும், இதுவே உங்களிடம் நான் கடைசியாக பேசுவது என்பதால் மன்னித்துக் கொள்ளுங்கள்..

    எனது இதயத்தில் எப்போதும் கிரிக்கெட் நீங்கா இடம்பெற்றிருக்கும்.

    இவை எல்லாவற்றையும் விட கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவும், உற்சாகமும் தான் என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

    நீங்கள் எனக்காக விரதம் இருந்து இருக்கிறீர்கள், பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். பல விஷயங்கள் கடந்துவிடும். ஆனால், உங்களைப் பற்றிய நினைவுகள் எப்போதும் என்னை விட்டு நீங்காது.. உங்களது சச்சின் சச்சின் என்ற வார்த்தைகள் என் காதுகளில் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

    (அந்த நேரத்தில் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் ஒரு சேர சச்சின் சச்சின் என்று கோஷமெழுப்பினர். அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் தளும்பியது)

    அந்த கோஷத்தின் மத்தியில் கண்ணீர் மல்க சச்சின் கூறினார்.... குட்பாய்...







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா இழந்தது சச்சினை, கண்ணீர் மல்க விடை பெற்றார் சச்சின் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top