• Latest News

    November 14, 2013

    மேயர் விவகாரத்தில் நன்மையடைந்தது யார்?

    எஸ்.றிபான் -
    பல்வேறு விவாதங்கள், சவால்கள், எச்சரிக்கைகள், எதிர் பார்ப்புக்கள் மத்தியில் கல்முனை மாநகர சபையின் மேயராக செயற்பட்ட சிராஸ் மீராசாஹிப்பின் இராஜினாமா இடம் பெற்றுள்ளது. எனது மக்களின் ஆணைப்படியே செயற்படுவேன் என்று துணிந்து நின்றவருக்கு, அதில் உறுதியாக நிற்க முடியவில்லை. காரணம், சிராஸ் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் மெல்ல மெல்ல கழுத்தறுத்துக் கொண்டிருப்பதனை உணரத் தொடங்கினார். இதனால், சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுத்து கட்சியில் கோலாட்சி செய்து கொண்டிருக்கும் சிரேஸ்டமானவர்களுக்கு இதுதான்டா அரசியல் என்று காட்டுவதற்கு சிராஸ் தவறி விட்டார்.
    சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்கத் தவறியது மட்டுமன்றி, சரியான நேரத்தில் பிழையான முடிவினையும் எடுத்து விட்டார். ஆனால், சிராஸிற்கு வேறு வழிகளும் இல்லை. அவர் மேயர் பதவியை துறக்க மாட்டேன் என்று முரண்டுபட்டுக் கொண்டிருப்பராயின், இறுதியில் 45 நாட்களில் பெற்றுக் கொண்ட அரசியல் வெற்றியினை, அரசியலில் சாணக்கியமற்றவர் என்ற பெயரோடு, தலைக் குனிவினை (இரண்டு வருடங்களின பின்னர்) கடைசிப் பெறுமதியாக பெற்றுக் கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும்.
    இப்போதைக்கு சிராஸ் தனது தலைக்கு வந்த கத்தியை, தலைப்பாகையுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனாலும், தாமதித்து அவர் எடுத்துக் கொண்ட முடிவினால், அரசியலில் தமது காலை ஆழப்பதித்துக் கொள்ளவும், தமது கட்சிக்குள் இருக்கும் அரசியல் எதிரிகளை சமாளித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கும் அவர் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது.
    மு.காவின் அரசியல் பாதையில் இன்றைய தலைவர், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் கூட வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவற்றில் பல இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதே போன்று கட்சியின் தலைமையிடம் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். அவைகளில் பல இன்னும் கடனாகவே இருந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு, இருக்கின்ற நிலையில் சிராஸ் மீராசாஹிப் அளித்த உடன்பாட்டில் மட்டும் ரவூப் ஹக்கிம் கடும் போக்கையும், மூர்க்கத்தனத்தையும் ஏன் காட்ட வேண்டுமென்று சிந்திக்க வேண்டும். இதில் இருக்கின்ற பின்புலம் என்ன? என்றெல்லாம் சிராஸ் சிந்தித்து இருந்தால், அவரால் இலகுவாக முடிவினை எடுத்திருக்க முடியும்.
    ரவூப் ஹக்;கிம் சிராஸின் இராஜினாமா மூலமாக பல அரசியல் நகர்வுகளை மேற் கொண்டுள்ளார். அதில் ஒன்றுதான், தனது தலைமைத்துவத்திற்கு இருக்கும் சவாலாகும். நிஸாம் காரியப்பர் மு.காவின் அரசியல் தலைமைத்துவம் கிழக்கில்தான் இருக்க வேண்டும். அந்த தலைமைக்குத்தான் கிழக்கு மக்களின் உண்மையான உணர்வுகளை அறிந்து கொள்ள முடியுமென்று கருத்துக்களை முன் வைத்து, ரவூப் ஹக்;கிமை நெருக்கடிக்குள்ளாக்கினார். நிஸாம் காரியப்பரின் இக்கருத்துக்கள் கிழக்கில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது, மு.காவின் தலைமைத்துவத்திற்கு நிஸாம் காரியப்பர் பொறுத்தமானவர் என்ற கதைகளும் மு.காவின் ஆதரவாளர்கள் பலரிடமும் மோலோங்கியும் இருந்தன.
    மேலும், அம்பாரை மாவட்டத்தில் மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் ரவூப் ஹக்கிமை மிரட்டும் பாணியில் அடிக்கடி தங்களின் கருத்துக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதி அமைச்சர் ஆசை விவகாரத்தில், ரவூப் ஹக்;கிம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்ததனை, வேண்டுமென்றுதான் அமெரிக்காவுக்கு போயுள்ளான் என்று மரியாதைக் குறைச்சலாக பக்கத்தில் நின்றவர்களுடன் பேசியும் உள்ளார்.
    இத்தகையவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும், நிஸாம் காரியப்பரின் ஆளுமையை வெளிக்கொணர்வதற்கும் சிராஸின் வாக்குறுதியை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ரவூப் ஹக்கிமுக்கு ஏற்பட்டது. தனது கருத்தை ஏற்றுக் கொண்டால், சிராஸ் அரசியலில் நன்மையடைவார் என்றும் ரவூப் ஹக்;கிம் எடை போட்டுக் கொண்டார். இதனைப் புரிந்து கொள்ளும் அரசியல் பக்குவமும், சாணக்கியமும் சிராஸிடம் இருக்கவில்லை. 45 நாட்களில் தனக்கு கிடைத்த வெற்றியை தனது முயற்சிக்கு கிடைத்த செல்வாக்கின் வெற்றி என்று சிராஸ் கணிப்பீடு செய்து கொண்டாரே அன்றி, மு.காவின் ஆதரவாளர்களின் மனப் போக்கை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.
    அதாவுல்லாவோடு மு.காவிற்கு அரசியல் சூழ்ச்சி செய்த தவம், தனக்குரிய இடம் கிடைக்காது போன போது, அதாவுல்லாவுக்கு பாடம் புகட்ட வேண்டுமாக இருந்தால், தான் எதிரியாக நினைத்துச் செயற்பட்ட மு.காவில் இணைவதனைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. மு.காவில் இணைந்தார். மு.காவின் ஆதரவாளர்களின் மனப் போக்கை அறிந்து தமது பேச்சு வன்மையால் கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இதுதான் அரசியல் சாணக்கியமாகும். மு.காவில் தவம் இணைந்து கொண்ட போது, பெரிய மாற்றங்கள் ஏற்படுமென்றெல்லாம் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இப்பத்தியில், அதாவுல்லாவின் அரசியல் நகர்வினை தோற்கடிக்க முடியாதென்று நாம் தெரிவித்திருந்தோம்.
    அதன்படியே தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதாவுல்லா அம்பாரை மாவட்டத்தில் தமது சார்பில் 03 பிரதிநதிகளைப் பெற்;றுக் கொண்டார். மு.கா 04 பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதாவுல்லா 03 பிரதிநிதிகளையும், மு.கா 04 பிரதிநிதிகளையும் பெற்றுக் கொண்டன. ஆதலால், தவத்தின் வரவு மு.காவிற்கு ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தவில்லை. தவம் சாத்தியமானதை சாதித்துக் கொண்டார். அதாவுல்லாவுக்கு தவத்தின் வெற்றி ஒரு அதிர்ச்சியானதாகும்.
    ஆகவே, சிராஸினால் ஒரு சாணக்கியமான முடிவினை எடுத்துக் கொள்ளுவதற்கு முடியாமைக்கான காரணம், அவருக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கப்படவில்லை. அவருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கக் கூடிய அரசியல் தெரிந்தவர்கள் அவரைச் சூழ இருக்கவுமில்லை. எங்கோ நின்று கொண்டிருந்தவர்களுக்கு சிராஸ் ஒரு காய்க்கும் மரமாக தென்பட்டார். வந்தார்கள். ஒட்டிக் கொண்டார்கள். அவர்கள் சிராஸினால் பிழைப்பு நடத்த வேண்டுமென்று எண்ணினார்களே அன்றி அவரை அரசியலில் உயர்த்த வேண்டுமென்று எண்ணவில்லை. சிராஸ் அரசியலில் ஒரு உயர்நிலையை அடைய வேண்டுமென்று அவர்கள் திட்டமிட்டு இணைந்து கொண்டவர்களுமில்லை. சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்தால் தங்களின் பிழைப்பு கெட்டுவிடுமென்று கணக்குப் போட்டார்களே அல்லாமல், ரவூப் ஹக்கிம் என்ன கணக்குப் போடுகின்றார், சிராஸை அரசியலில் இருந்து ஒரங்கட்ட நினைப்பவர்கள் என்ன கணக்குப் போடுகின்றார்கள் என்ற கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் சூத்திரங்களை ஆளுக்கும், இடத்திற்கும் ஏற்ப பயன்படுத்தாது, எல்லாவற்றையும் பெருக்கியே பார்த்தார்கள். இதனால்தான், சிராஸின் சமன்பாடு பிழைத்துக் கொண்டது.
    இப்போதைக்கு சிராஸ் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயராவார். அவர் தமது பதவிக் காலத்தில் எப்படித் தொழிற்பட்டார் என்பதனை மக்கள் அறிவர். புதிய மேயராக அரசியலில் சிராஸை விடவும் 25 வருடங்கள் அனுபவம் கொண்டவர். நாட்டில் புகழ் மிக்க சட்டத்தரணிகள் ஒருவர். மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மிகவும் நெருக்கமான உறவினர். சட்டத்துறையில் அஸ்ரப்பின் வழிகாட்டலில் முன்னேறிச் சென்றவர். இவர் தனக்கு கிடைத்திருக்கும் மேயர் பதவி என்ற சந்தர்ப்பத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார் என்பதுதான் அவரின், ஆளுமையையும், திறமையையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப் போகின்றன. அவரின் அனைத்து நடவடிக்கைகளையும் சிராஸின் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டே பார்ப்பர். ஆதலால், நிஸாம் காரியப்பர் ஏற்றுக் கொள்ள இருக்கும் மேயர் பதவி நிச்சயமாக பஞ்சு மெத்தையாக இருக்காது.
    அரசியல் என்பது மக்களோடு இருக்கின்ற நெருக்கத்தினாலும், ஆளுமையினாலும் கட்டி எழுப்பப்பட வேண்டியதொரு நுட்பமான கலையாகும். இந்த இரண்டோடு சாணக்கியமும் தேவை. இதில் எதில் குறைவு ஏற்பட்டாலும் அரசியலில் சாதிக்க முடியாது. நிலைத்திருக்க இயலாது. நிஸாம காரியப்பர் தனது தொழிலின் நிமித்தம் கொழும்பிலேயே அதிக நாட்கள் தங்கியிருக்கக் கூடியவர். சாதாரண மக்களை விடவும், உயர்மட்ட குழுக்களுடனும், தொழிலின் நிமித்தம் வருகின்றவர்ளிடம்தான் இவருடைய தொடர்புகள் பெரும்பாலும் அமைந்துள்ளன. கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இருந்த காலத்தில் கூட சபையின் ஒரு சில அமர்வுகளில் கூட அவர் கலந்து கொள்ளாமல் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் இருந்துள்ளார். அந்தளவிற்கு வேலைப் பளுக்களையுடையவர். ஆதலால், அவரினால், மேயர் பதவி என்ற சிம்மாசனத்தை திறம்படச் செய்ய முடியாது போய்விடும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
    நிஸாம் காரியப்பரின் திறமைகள் மீது இலங்கை முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிரூபிக்க வேண்டியவாராக அவர் உள்ளார். அவர் சிறந்த சட்டத்தரணி என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று இதுவரைக்கும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் அவருக்கு கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் இப்போது வழங்கப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தை நிஸாம் காரியப்பர் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டியவாராக இருக்கின்றார். சிராஸ் சரியான நேரத்தில் இராஜினாமாக் கடிதத்தினை தலைவரிடம் வழங்காது இருந்ததனால் எப்படி அவரின் இமேஜில் ஒரு சரிவு ஏற்பட்டதோ, அதே போன்றதொரு ஆபத்தில்தான் நிஸாம் காரியப்பரும் இருக்கின்றார். மேயர் பதவியால் தான் அலங்காரம் பெறாது, மேயர் பதவியை அலங்கரிப்பராயின் அவர் தானாகவே அலங்காரம் பெறுவார். மேயர் பதவியை பெற்றுக் கொண்டததன் பின்னர் கொழும்புதான் கதியென்று இருப்பராயின், அவர் மீது இருக்கின்ற அரசியல் ரீதியான இமேஜ் நிச்சயமாக மக்களிடமிருந்து சரியத் தொடங்கும். அதன் பின்னர் அவரால் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
    இதே வேளை, சிராஸ் மாநகர சபையில் உள்ள தனது கட்சி சார்ந்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் பின்தள்ளப்பட்டவராகவே இருந்தார். சிராஸ் தன்னை அதிகாரம் கொண்டவராக கருதிக் கொண்டமையும், உறுப்பினர்கள் சிராஸிடம் இருந்து அதிகம் எதிர் பார்த்துக் கொண்டதும்தான் இதற்கு காரணமாகும். இவை இரண்டிற்குமிடையே ஒரு சமநிலையினை ஏற்படுத்திக் கொள்வதில் எந்தவொரு கரிசனையும் அவர் காட்டவில்லை. தன்னோடு இருந்த இரண்டு உறுப்பனர்களையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு மாநகர சபையை நடத்த முடியுமென்று கணக்குப் போட்டுக் கொண்டார். ஆதலால், நிஸாம் காரியப்பர் இவற்றையும் கருத்திற் கொள்ள வேண்டியவராக இருக்கின்றார்.
    நிஸாம் காரியப்பர் கத்தி மேல் நடக்க வேண்டியவராகவே இருக்கின்றார். அவரின் இமேஜில் ஏற்படுகின்ற சரிவு, சிராஸின் இமேஜை சற்று அதிகரிக்கச் செய்யும் என்பதுதான் எமது தீர்மானமாகும்.
    நிஸாம் காரியப்பருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளதனால், அடுத்த பொதுத் தேர்தலில் நிஸாம் காரியப்பர் போட்டியிடுவதற்கு அதிகம் வாய்ப்புக்களில்லை. அதே வேளை, ஒரு வருடத்தின் பின்னர் நிஸாம் காரியப்பர் மேயர் பதவியை மற்றுமொருவருக்கு வழங்க இருப்பதாகவும், அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
    இதே வேளை, சிராஸ் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அம்பாரை மாவட்டத்தில் மு.கா தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே ஆகக் குறைந்தது இரண்டு ஆசனங்களையாவது பெற்றுக் கொள்ள முடியும். இதனால், சிராஸிற்கு பொதுத் தேர்தலில் மு.கா சீட் வழங்கும் என்பதில் ஐயமில்லை. சிராஸ் கடைசி வேளையிலாவது ஒரளவிற்கு சரியான முடிவினை எடுத்துக் கொண்டு மு.காவிற்குள் நின்று கொண்டிருப்பதனையிட்டு அம்பாரை மாவட்டத்தில் உள்ள மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று உசாராகியுள்ளார்கள்.
    மறுபுறத்தில். ரவூப் ஹக்கிமின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவர் அம்பாரை மாவட்டத்தில்தான் அடுத்த பொதுத் தேர்தலில் குதிக்க இருக்கின்றார் என்ற அச்சம் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பலரிடம் தெரிவித்துக் கொண்டு வருகின்றார். நமக்கான பிரதிநிதித்துவம் பறிபோய்விடும் என்றும் சில இடங்களில் பிரஸ்தாபித்துக் கொண்டும் வருகின்றார். மேலும், அடுத்த பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தற்போதுள்ள மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் போட்டியிட உள்ளார்கள். பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் இருந்துதான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளார்கள். இதனிடையே ரவூப் ஹக்கிம் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றதனை எம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
    இப்படியாக மாறவுள்ள அம்பாரை மாவட்ட அரசியல் களத்தில் சிராஸின் நடவடிக்கைகள் என்னவாக அமையப் போகின்றதென்பது அவரின் நிதானமான போக்கே தீர்மானிக்கும். நிஸாம் காரியப்பர் தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலேயே அவரின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. மொத்தத்தில் ரவூப் ஹக்கிம் தமது அதிரடி நடவடிக்கையால் சில அறுவடைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்.
    நன்றி: விடிவெள்ளி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மேயர் விவகாரத்தில் நன்மையடைந்தது யார்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top