• Latest News

    November 14, 2013

    மாத்தளை மனிதப்புதைகுழி: மக்களிடம் விவரம் கோருகிறது அரசு

    இலங்கையில் மாத்தளை அரசாங்க பொது வைத்தியசாலை வளாகத்தில் சென்ற ஆண்டு இறுதியில அகழ்வுப் பணியொன்றின் போது கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து விவரங்களை கோரும் வகையில் இது தொடர்பான அறிவித்தலை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறது.
    வடகிழக்கு மாகாணத்திற்கு வெளியே பெரும் எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூடுகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், எதிர்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் இதில் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.
    இது தொடர்பாக ஆணைக்குழுவினால் வியாழனன்று உள்நாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவித்தலில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் தேதிக்கு முன்னதாக தனி நபராகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ விபரங்களை சமர்பிக்க முடியும். தேவையென கருதும் பட்சத்தில் சாட்சியம் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி வைத்தியசாலை வளாகத்தில் அகழ்வு பணியின் போது சில மனித எலும்பு கூடுகள் தென்பட்டதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை அகழ்வுப் பணிகள் இடம் பெற்றபோது, சுமார் 155 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவித்தல் கூறுகின்றது.

    குறித்த மனித எலும்புக் கூடுகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களின் மரணத்திற்கான காரணம், எக்காலப்பகுதியில் யாரால் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று இதுவரை கண்டறிப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ள அந்த பத்திரிக்கை அறிவித்தலில், இது தொடர்பான விபரங்களை பொது மக்களிடமிருந்தும், சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

    ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி செய்யித இஸ்ரத் இமாம் தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியொருவரும் இடம் பெற்றுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாத்தளை மனிதப்புதைகுழி: மக்களிடம் விவரம் கோருகிறது அரசு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top