• Latest News

    January 14, 2014

    நிந்தவூர் தொ.ப. அலுவலக விவகாரம்:

    அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டால் ஆத்திரமடைந்த அமைச்சர்

    சஹாப்தீன்;
    நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் நேற்றைய ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன்அலி எம்.பி. கேள்வி எழுப்பினார்.  இதற்குப் பதிலளித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, தனக்கு தெரியாமல் இவ்வலுவலகத்தை இடமாற்ற தொடர்ந்தும் முயற்சித்து வரும் உயரதிகாரிகள் தொடர்பில் ஆத்திரமடைந்ததுடன், இவ்வாறான நடவடிக்கைகளை உடன் கைவிடுமாறும் பணிப்புரை விடுத்தார்.

    நிந்தவூரில் சுமார் 17 வருடங்களாக இயங்கிவரும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட அலுவலகத்தை உடனடியாக அம்பாறைக்கு இடமாற்றுமாறு அதன் தலைவர் சில தினங்களுக்கு முன்னர் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இருப்பினும் தமிழ் பேசும் மக்களின் சொத்தாக கருதப்படும் இதனை சிங்கள பகுதிக்கு மாற்றும் சதித்திட்டத்தை கல்வி சமூகமும் நலன்விரும்பிகளும் கடுமையாக எதிர்த்தனர்.

    இதனையடுத்து மு.கா.தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி மற்றும் பைசால் காசீம் எம்.பி. ஆகியோர் இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவை சந்தித்து இது குறித்து கலந்துரையாடினர். இந்த அலுவலகம் நிந்தவூரில் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அமைச்சர் டளஸ், அது அம்பாறைக்கு மாற்றப்படாது என்று வாக்குறுதி அளித்தார்.

    இருப்பினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் அதிகார சபை தலைமையகத்தால் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனை காரணம்காட்டி, உடனடியாக அலுலகத்தை அம்பாறைக்கு கொண்டு சென்றுவிட மாவட்ட உதவிப் பணிப்பாளர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டது மட்டுமன்றி, எதிர்வரும் வியாழக்கிழமை அனைத்து ஊழியர்களும் அம்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்பமிடவேண்டும் என்று எஸ்.எம்.எஸ். ஊடாக நேற்று அறிவித்திருந்தார். இச் சிக்கல்நிலை குறித்து மு.கா. குழுவினருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையிலேயே மேற்படி அமைச்சுக்கான பாராளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. அமைச்சின் ஆலோசனைக்குழுவில் நிரந்தர உறுப்பினரான ஹசன் அலி எம்.பி. இவ்விவகாரத்தை அமைச்சர் டளஸ் முன்னிலையில் சபையில் முன்வைத்தார்.

    இது குறித்து ஹசன் அலி எம்.பி. கூறுகையில்,
    'நீங்கள் வாக்குறுதி அளித்திருந்த நிலையிலும் மாவட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு கொண்டு செல்ல அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எவ்வாறு? உதவிப் பணிப்பாளர் அம்பாறையில் ஒப்பமிட்டுள்ளதுடன் ஏனைய ஊழியர்களையும் 16ஆம் திகதி வருமாறு அறிவித்துள்ளார் என்று கூறி, குறுந்தகவலை ஆதாரமாக காட்டினேன். இதனை கேட்ட அமைச்சர் டளஸ், இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தனக்கு தெரியாது எனவும் இது தனது உத்தரவை மீறிய செயல் என்றும் கூறி ஆத்திரப்பட்டார்.

    அத்துடன், இதற்கு காரணமானவர்கள் யார் என்று அதிகார சபை தலைவரை நோக்கி கடுந்தொனியில் கேள்வி எழுப்பிய அவர், இப்பிரச்சினை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க தான் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் தனது உத்தரவை மீறி தான்தோன்றித்தனமாக செயற்படுபவர்களை கண்டித்தார். அதேவேளை, முன்னர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அவ் அலுவலகம் நிந்தவூரிலேயே இருக்கும் என்று உறுதியளித்தார். இத்தீர்மானத்தை சபை ஆமோதித்து ஏற்றுக் கொண்டது என்று கூறினார்.

    இதே வேளை, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அமைச்சர் டளஸ் அழகப் பெருமவோடு நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தினை இடமாற்றுவதற்கு அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை விபரமாக எடுத்துக் கூறியிருந்தார். இதனை செவிமடுத்தஈ அமைச்சர் டளஸ், நிந்தவூரில் உள்ள மாவட்ட தொழிற் பயிற்சி நிலையம் அம்பாரைக்கு கொண்டு செல்வதற்கு நாள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் தொ.ப. அலுவலக விவகாரம்: Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top