கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் அடங்கும் பல வீதிகள் பெயரிடப்படாமலும், அநேக வீதிகளுக்கான பெயர்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படாமலும் காணப்படுவதால் கல்முனை மாநகர சபை, அவ்வீதிகளை உத்தியோகபூர்வமாக ஆராய்ந்து பெயர்களை வர்த்தமானியில் பிரகடனம் செய்ய முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியின் பெயரை உத்தியோகபூர்வமாக சூட்டி- வர்த்தமானி பிரகடனம் செய்வது தொடர்பில் கல்முனை மாநகர சபையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு- அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு (21.01.2014) செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போது அவரால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.இப்பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் குறித்த வீதிக்கு மேற்படி பெயரை சூட்டுவதற்கு தம்மால் உடன்பட முடியாது எனத் தெரிவித்து- தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அதேவேளை ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் இப்பெயர் சூட்டப்படுவதற்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் குறித்த பெயர் சூட்டும் பிரேரணை முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கிய சபை, இது தொடர்பில் பொது மக்களின் மாற்றுக் கருத்துகளுக்காக 21 நாள் கால அவகாசம் வழங்குவது எனவும் தீர்மானித்தது.
இந்த 21 நாள் அவகாசத்திற்குள் கிடைக்கப் பெறுகின்ற மாற்றுக் கருத்துகள் குறித்து அடுத்த கூட்டத்தில் ஆராய்வது எனவும் அதனைத் தொடர்ந்தே குறித்த பெயரை வர்த்தமானியில் பிரகடனம் செய்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் இதன்போது முதல்வர் நிசாம் காரியப்பர் சபைக்கு அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

0 comments:
Post a Comment