• Latest News

    January 24, 2014

    அமெரிக்காவுக்கு கோட்டாபய கடும் கண்டனம்

    இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
    மட்டகளப்புக்கான ஒரு நாள் பயணமாக வியாழனன்று வந்த கோட்டாபய, இந்த பகுதியின் சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர் மத்தியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
    உள்நாட்டுப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம் என்று கூறிய அவர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட அமெரிக்க அதிகாரிகளை கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டார்.
    அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவரிடம், "உங்களின் கருத்துக்களை எங்களிடம் திணிக்க வேண்டாம்", என்று தாம் கூறியதாக தெரிவித்த கோட்டாபய, நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதியுடைய தலைவர்கள் இலங்கையிலேயே பலர் இருக்கிறார்கள் என்று தான் தெளிவாக அவரிடம் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
    "அமெரிக்க தூதரால் இலங்கை பிரச்சனையை தீர்க்கமுடியுமா?"
    "இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவரால் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியுமா?", என்று வினா எழுப்பிய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய, அவர் தற்போது எல்லா இடமும் செல்வதாகவும், சிலர் அவருக்கு பின்னால் செல்வதாகவும் கூறினார்.
    கோட்டாபய ராஜபக்ஷ கூட்டத்தின் ஒரு பகுதி
    கோட்டாபய ராஜபக்ஷ கூட்டத்தின் ஒரு பகுதி
    "அவரிடம் சிலர் சில விடயங்களை சொல்கிறார்கள். நான் அவரிடம் எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது உங்கள் வேலை அல்ல என கூறியுள்ளேன். ராஜதந்திரிகள் ராஜதந்திர வேலைகளை மட்டும் பார்க்காமல் வேறு வேலைகள் பார்க்கிறார்கள்", என்று கூறினார் கோட்டாபய ராஜபக்ஷ.
    இந்த பயணத்தின்போது மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு சென்ற கோட்டாபய ராஜபக்‌ஷ, மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப்பை சந்தித்து உரையாடினார்.
    இந்த சந்திப்பில் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக அவரது கவனத்திற்கு தான் கொண்டு சென்றதாக ஆயர் பொன்னையா ஜோசப் கூறுகினறார்.
    அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குதல், வழக்கு விசாரனைகளை துரிதப்படுத்துதல் அல்லது புனர்வாழ்வு வழங்குதல் போன்ற விடயங்களை அவரிடம் தான் சுட்டிக்காட்டியதாகவும் இது தொடர்பில் சாதகமான முறையில் அவரது பதில் அமைந்திருந்தது என்றும் ஆயர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
    இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஐநாவின் மனித உரிமை ஆணையர் நவிபிள்ளையை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெனீவாவில் சந்தித்து இலங்கையின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசு தரப்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
    BBC-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்காவுக்கு கோட்டாபய கடும் கண்டனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top