• Latest News

    February 01, 2014

    வெளித் தரப்பினரால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய-நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் : யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம்

    இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டில் மேற்கொள்ளப்படக் கூடிய விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்பதால் பிரச்சனையில் சம்பந்தமில்லாத வெளித் தரப்பினரால், மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய-நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
    இன்று சனிக்கிழமை, யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இந்தக் கருத்தை கூறியிருக்கின்றார்.
    மூன்று நாள் விஜயமாக இலங்கை சென்றுள்ள நிஷா தேசாய் பிஸ்வால் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார்.
    யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, வெளியில் இருந்து எந்தத் தீர்வையும் கொண்டு வருவதிலும் பார்க்க, உள்நாட்டிலேயே இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவருவதே நல்லது என்று அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.
    ஆனால், மனித உரிமை மீறல் விடயத்தில் உள்நாட்டில் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரே அல்லது இராணுவத்தினருடன் சம்பந்தப்பட்டவர்களே விசாரணைகளை மேற்கொள்வதால் மக்களுக்கு அந்த விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்பதை தான் சுட்டிக்காட்டியதாக ஆயர் தெரிவித்தார்.
    குறிப்பாக காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் ஜெனிவா மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை தான் அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக் கூறியிருப்பதாகவும் யாழ் ஆயர் தெரிவித்துள்ளார்.
    இதேவேளை, சர்வதேச விசாரணையின் அவசியம் குறித்து வெள்ளியன்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர்.
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அரச தரப்பினரையும் அமெரிக்க பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெளித் தரப்பினரால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய-நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் : யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top