சஹாப்தீன் -
முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்திய
தினம் 2024 நவம்பர் 26ஆம் திகதி! கனமழையால் காட்டாறு போல் வெள்ளம்
பாய்ந்தது! காரைதீவு சந்தியை அண்மித்த இடத்திலிருந்து மாவடிப்பள்ளி பெரிய
பாலம் வரை பெருவெள்ளம்! போக்குவரத்துக்கள் பாதிப்பு! சம்மாந்துறைக்கு
செல்லும் மக்கள் காரைதீவு பிரதேசத்திலிருந்தும், காரைதீவு பக்கத்திற்கு வர
வேண்டியவர்கள் மாவடிப்பள்ளியிலிருந்தும் பாதுகாப்பான முறையில் உழவு
இயந்திரங்களின் பெட்டிகளில் ஏறி போக்குவரத்தைக் மேற்கொண்டிருந்தார்கள்.
அம்பாரை
மாவட்டத்தில் மாத்திரமின்றி ஏனைய மாவட்டங்களில் பெரும் மழை. நாடு
பூராகவும் வெள்ளம். மக்கள் பலரும் பாதிப்பு. நிந்தவூர் காஷிபுல் உலூம்
அரபுக் கல்லூரியும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. விடுதிகளில் மழை நீர்
உட்புகுந்தது.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக்
கல்லூரியின் நிர்வாகத்தினர் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கு முடிவு
செய்தனர். மாணவர்களின் பெற்றோர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தினர். மாணவர்களை
பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கு தனியான பஸ் வண்டி ஒன்றையும் வாடகைக்கு
அமர்த்தினர்.
சம்மாந்துறைக்கு செல்லும்
மாணவர்களை உழவு இயந்திரம் ஒன்றின் பெட்டியில் பாதுகாப்பாக ஏற்றினர்.
அவர்களோடு பொது மக்களும் ஏறிக் கொண்டனர். குறித்த உழவு இயந்திரம் காரைதீவு –
மாவடிப்பள்ளி வீதியில் சென்று கொண்டிருக்கும் போது, இடைநடுவில்
குடைசாய்ந்தது. அதில் பயணம் செய்த மாணவர்களில் 06 பேர் அல்லாஹ்வின்
நாட்டத்தின் பிரகாரம் உயிர் இழந்தனர். சுஹதாக்கள் என்ற பெயரை வாங்கிக்
கொண்டனர்.
இந்த சம்பவம்தான் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. சம்மாந்துறை
முழுவதும் கண்ணீரில் நனைந்தது. நிந்தவூர் சோகத்தில் சோபை இழந்தது.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி பிள்ளைகளை இழந்த தாயைப் போல்
தவித்தது. ஒப்பாரி வைத்து அல்லாஹ்விடம் அருளை வேண்டி நின்றது.
இந்த மாணவ வெண்புறாக்கள் வெள்ள நீருக்குள் சுஹதாக்களாகி சுவனவாசிகள் எனும்
அந்தஸ்தை அடைந்து கொண்டு 2025 நவம்பர் 26ஆம் திகதியோடு ஒரு வருடம்
நிறைவடைந்தது. இத்தினத்தில் இவர்களின் நினைவு தினத்தை இறையருளால்
மேற்கொள்வதற்கு மேற்படி கல்லூரியின் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச்
செய்திருந்தனர். ஆயினும், இத்திகதியிலும் கனமழை முழு நாட்டையும்
சிறைப்பிடித்துக் கொண்டது. இதனால், நிர்வாகத்தினர் இந்த சுஹதாக்களின்
நினைவு தினத்தை ஒத்தி வைத்தனர்.

எதுவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்பார்கள். அதுமட்டுமன்றி ஒரு
காரியம் நடக்காது போகுமானால், அதில் அல்லாஹ்வின் அருள் இருக்குமென்றும்
சொல்வார்கள். அது உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சுஹதாக்களின் நினைவு
பிற்போடப்பட்டு, 2026.01.29 வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. முன்னரை
விடவும் சிறப்பான ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்தனர். அதுமட்டுமல்லாது,
இக்கல்லூரியின் வரலாற்றில் மாணவர்கள் தூங்குவதற்கு கட்டில் வசதிகளும், பிற
வசதிகள் தனியொருவரினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், வெள்ள
நீருக்குள் வெண்புறாக்களான சுஹதாக்கள் நினைவு தினம் மேற்படி அரபுக்
கல்லூரிக்கு வரலாற்று நன்மைகளை கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில்...
'வெள்ள நீருக்குள் வெண்புறாக்கள்'
மேற்படி
வெள்ள நீருக்குள் வெண்புறாக்களான சுஹதாக்களின் நினைவு தினம் நேற்று
(2026.01.29) காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் மண்டபத்தில் கல்லூரியின்
ஆளுநர் சபையின் தலைவரும், நிந்தவூர் பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர்
சபையின் முன்னாள் தலைவரும், கல்வி அதிகாரியும், நிந்தவூர் பிரதேச சபையின்
(மு.கா) உறுப்பினருமான அல் - ஹாஜ் எம்.ஏ.எம்.றஸீன் தலைமையில் வெகு சிறப்பாக
நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை
மஜ்லிஸ் அஷ்-ஷூரா சபையின் தலைவரும், ஓய்வு பெற்ற நிர்வாக சேவை
அதிகாரியுமாகிய அஷ் - ஷெய்க் எம்.ஐ. அமீர் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து
கொண்டார்.
கௌரவ அதிதியாக நிந்தவூர்
பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப், சம்மாந்துறை
ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ் - ஷெய்க் எம்.ஏ.எம். பஷீர் (மதனி),
விசேட அதிதியாக சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையின் தலைவர்
அஷ் - ஷெய்க் றம்சீன் காரியப்பர் (தப்லீஹி) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்,
இந்நிகழ்வில் சஹிதான மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், கல்லூரியின்
அதிபர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் உடல்களை
மீட்டெடுப்பதற்கு தமது உயிரையும் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட
அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுழியோடிகள், கல்லூரியின் ஆளுநர் சபை
உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் (தேசிய மக்கள் சக்தி) உறுப்பினர்
ஏ. இப்திகார் அஹமட், கல்லூரியின் செயலாளர் அஷ் - ஷெய்க் அபிர்ஷாத் (காஷிபி)
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








பாராட்டுக்களும், கௌரவங்களும்
சாய்ந்தமருது
ஜனஸா அமைப்பு, மாளிகைக்காடு ஜனஸா அமைப்பு, கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள்
அமைப்பு, காரைதீவு ராவணா சமூக சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள்
உயிர்நீத்த மாணவர்களின் உடல்களை மீட்டெடுப்பதில் அரும்பாடுபட்டனர். இந்த
அமைப்புக்கள் பாராட்டி கௌரவகிகப்பட்டன.
15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு
வெள்ள நீருக்குள் வெண்புறாக்களான சுஹதாக்களை நினைவு கூறப்பட்ட இந்நாளில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் 40 ஆண்டு கால வரலாற்றில் தேவையாக இருந்த மாணவர்கள் உறங்குவதற்காக கட்டில்கள் வழங்கப்பட்டன. இதனை கல்லூரியின் ஆளுநர் சபை உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளருமான மீராலெப்பை சம்சுன் அலி சுமார் ரூபா 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட செலவில் மாணவர்கள் உறங்குவதற்காக கட்டில்களுடன், மாணவர்களின் உடமைகளை வைப்பதற்கான அலுமாரிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட தளபாடங்கள் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

மலர் வெளியீடு
வெள்ள அனர்த்தத்தில் உயிர்நீத்த
சுஹதாக்களின் நினைவாக 'வெள்ள நீருக்குள் வெண்புறாக்கள்' எனும் பருவ மலரும்
வெளியிடப்பட்டது. இம்மலர் வருடாவருடம் வெளியிட இருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டது.
நினைவு மலர் வைபவ
ரீதியாக வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், அந்த அனர்த்தத்தின் போது மீட்பு
பணிகளில் ஈடுபட்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை நன்றியோடு நினைவு
கூர்ந்து நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment