• Latest News

    February 01, 2014

    ரவுப் ஹகீமின் ‘தாடி’யில் மண் ஒட்டாது !

     அ. நவாஸ் ;
    தேர்தல் வந்து விட்டது, இனி பூட்டிக்கிடந்த பிரச்சாரப் பீரங்கிகளைத் திறந்து வாய் கிழிய தத்துவம் பேசத் தயாராகிவிட்டார்கள் அரசியல்வாதிகள். அதிலும் முக்கியமாக மகா நடிகர் ரவுப் ஹகீம் நகைச்சுவைத் திலகம் பட்டத்தை வெல்லாமல் விட மாட்டேன் எனும் அளவுக்கு நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார்.
    இலங்கை எனும் ஜனநாயக சோசலிச குரயரசிற்குத் தெளிவான அரசியல் யாப்பு இருக்கிறது. அந்த யாப்பின் பிரகாரம் ஏனைய மதங்களை பாதுகாத்து,பெளத்த மதத்தை கட்டிக் காக்கும் கடமைப்பாடு அரசிடம் இருப்பதாக மிகத் தெளிவாக எடுத்தியம்பப் படுகிறது.
    அப்பேற்பட்ட நாட்டின் நீதியமைச்சராகவும், அந்த நாட்டிலேயே ஒரு சட்டத்தரணியாகவும் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனக்குப் பழகிப்போன அரசியல் அடிமைத்தனத்தை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குப் போதிக்கக் கிளம்பியிருக்கிறார்.
    அரசாங்கத்துடன் சேர்ந்து தான் போட்டியிட வேண்டும் என்று ஜனாதிபதி கட்டளையிட்டாராம் ஆனால் அவரது கட்சி “சமூகத்துக்காக” ஜனாதிபதியை எதிர்த்து தனியாகப் போட்டியிடுகிறார்களாம். நல்ல நகைச்சுவை!
    துவண்டு போய் இருக்கும் தமது செல்வாக்கை ஐக்கிய தேசிய கட்சி நிமிர்த்துவதற்குப் படாதபாடு படுகிறது. அதற்கு ஒருவேளை நாளடைவில் பலன் கிடைக்கலாம். ஆனாலும் ரவுப் ஹகீம் அன் கோ வை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து விரட்டியடிக்க வீடு தேடி சென்றாலும் அவர் ஜனாதிபதியை விட்டு விலக மாட்டார் என்பது இலங்கை முஸ்லிம்கள் நன்கறிந்த விடயம். காரணம் போலியான “பதவி” என்பது சிறுபிள்ளையும் அறிந்த விடயமாக இருக்கிறது.
    சட்டக்கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள் நுழைவதற்கு காடையர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது கூட, தனது பெயருக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என அந்த மாணவர்களை சந்தித்து எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுங்கள் என கேட்டுக்கொண்டாரே தவிர சமூகத்திலிருந்து அறிவாளிகள் உருவாவதற்கு ஏற்படும் தடையை ஆகக்குறைந்தது நீதியமைச்சர் எனும் அடிப்படையிலாவது ஏறிட்டும் பார்க்காத மகா நடிகர், தமது கட்சியின் செல்வாக்கை உயர்த்த திடீரென தெஹிவளையில் திட்டமிட்ட இனவாத நாடகத்தை அரச ஆதரவுடன் நடாத்தி தம்மையும் முஸ்லிம் மக்களின் சேவகர்களாக இனங்காட்டிக்கொள்ள எடுத்த முயற்சி தோற்றுப் போன நிலையில் இப்போது மீண்டும் வாய்ப்பேச்சோடு வெளியாகியுள்ளார்.
    கடந்த தேர்தலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் செல்வாக்கை சரிப்பதற்காக ஜனாதிபதியால் ஏவிவிடப்பட்ட கூலியாக தனித்துப் போட்டியிடப் போகிறோம் எனும் போர்வையில் கிளம்பிய நடிகர், நாட்டு நிலைமையைக் கருத்திற்கொண்டு அனைத்து முஸ்லிம் சக்திகளையும் ஒன்று சேர்க்கத் தவறி வாங்கிக்கட்டிக்கொண்டதோடு முஸ்லிம் சமூகத்துக்குப் பெயரளவிலாவது ஒரு பிரதிநிதித்துவத்தை தமிழ்க்கூட்டமைப்பு வழங்கியதால் வெட்கித் தலை குனிந்து நி்ற்கிறது.
    இந்நிலையில் முஸ்லிம் குரல் வானொலியில் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஹஸன் அலி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்பது வட – கிழக்கை அடிப்படையாகக் கொண்டது எனவே அது வேறு இடங்களில் வெற்றி பெறும் என தமக்கு எதிர்பார்ப்பு இல்லை என்று வெளிப்படையாக கருத்து வெளியிட்டார்.
    ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய மர்ஹும் அஷ்ரபின் கனவு இவ்வாறு இலங்கை முஸ்லிம்களை பிரித்தாள்வதாக இருக்கவில்லை மாறாக ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் குரலாக முஸ்லிம் காங்கிரஸ் விளங்கவேண்டும் எனும் அவாவுடன் செயற்பட்டார் என்பதை இலங்கை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்கிறது.
    நிலைமை இவ்வாறிருக்க, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாக தேசிய அரசியலிலிருந்து தேய்ந்து பிரதேச அரசியலுக்குள் தம்மைத் தாமே தள்ளிக்கொண்டிருக்கும் கட்சியின் தலைவர், பெளத்த மக்களை எம்மால் பகைத்துக்கொள்ள முடியாது, எமது பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தவும் கூடாது, பக்குவமாக நிதானமாக கையாள வேண்டும் என வர்ணித்து தனது அடிமைத்தனத்துக்கு வக்காளத்து வாங்கி நச்சை விதைக்க ஆரம்பித்துள்ளார்.
    நாட்டில் எந்தப்பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை எனக்கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரும் உறுப்பினராக இருக்கும் பள்ளிவாசல் தாக்கப்பட்டதோடு இப்போது அவரது சத்தத்தைக் காணவில்லை. அவருக்கு கவலையில்லை ஏனெனில் தேசியப்பட்டியலில் அவருக்கான இடம் இருக்கிறது. அதே போல் ஹகீமுக்கும் தேசியப்பட்டியல் ஆசை வந்துவிட்டது போன்றே எண்ணத் தோன்றுகிறது.
    முஸ்லிம் காங்கிரசின் பலம் அரசுக்குள் இருந்து கொண்டு தனியாகப் போட்டியிடுவதுதான் எனும் ரவுப் ஹகீமின் ஸ்பெஷல் நகைச்சுவையைப்பற்றி கட்டாயம் பேசியாக வேண்டும். ஏனெனில், எந்தப் பள்ளத்தில் விழுந்தாலும் அவரது தாடியில் இறுதிவரை மண் ஒட்டப்போவதில்லை.
    இப்போது இங்கு எழும் பிரதான கேள்வியானது, முஸ்லிம் காங்கிரஸ் ஏன் அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்பதுதான். பெரும்பாலானவர்கள் “பதவி” என பதிலளித்தாலும் அவர்களைப் பொறுத்தவரை வேறு வியாக்கியானம் வைத்திருக்கிறார்கள்.
    எனவே, அன்றைய தினம் ஹஸன் அலியின் பேட்டியை நுணுக்கமாக கேட்டுக்கொண்டிருந்த போது முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு விலகப்போவதில்லை ஆனாலும் அரசாங்கம் வேண்டுமானால் எம்மை விரட்டலாம் என தெரிவித்தார். அப்படியும் ஏன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு மேலதிக விளக்கம் அளித்த அவர் அரசாங்கத்துக்கும் தமது கட்சிக்கும் இடையே சில வாக்குறுதிகள் , இணக்கப்பாடுகள் இருப்பதாகவும் அந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையே தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
    சமூகம் துவண்டு போயிருந்த தருவாயில் கூட அடையாள எதிர்ப்பைத்தானும் வெளியிட முடியாமல் இவர்களைத் தடுத்த அந்த “வாக்குறுதிகள்” என்னவென்று கேட்கப்பட்டபோது அது நேரம் வரும் போதுதான் சொல்லப்படும் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்  முஸ்லிம் காங்கிரசின் செயலாளர்.
    ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக இருந்து கொண்டு சமூகத்துக்காகத்தான் பெறப்பட்ட வாக்குறுதிகள் என்றால் அவை எவை எனக்கூற முடியாத அளவு இரகசியம் காக்கும் ‘கட்சி’ யைப் பொறுத்தவரை அவர்களுக்காக, குறிப்பாக தற்போதைய தலைமையை நம்பி வழங்கப்படும் வாக்குகள் என்பது நமது சமூகத்தை நாமே விலை பேசி விற்பது போன்றதாகும்.
    அடுத்தடுத்து அனைத்து தேர்தல்களும் வந்தும் மீண்டும் தம் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வரை இப்படி மழுப்பல் அரசியல் செய்யத் துணிந்து விட்ட இந்த நடிகர்கள் இலங்கை முஸ்லிம்களுக்காக இந்த ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டிய விடயங்களை விட பதவிப் போட்டிக்காகவும் உட்பூசல்களுக்காகவும் கூட்டம் கூடியதே அதிகம் என்பது ஊரறிந்த ரகசியம்.
    நிலைமை இவ்வாறிருக்க, தங்கி வாழ்வதில் சுகம் காணும் சமூகத்தை திருப்திப்படுத்த மீண்டும் தம் வழமையான மழுப்பல்களோடு கிளம்பியிருக்கிறார்கள் நடிகர்கள்.
    முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தேசிய கட்சியாக இருக்க வேண்டும் ஆனால் சோரம் போகும் முதுகெலும்பற்ற தலைமையின் கீழ் இருக்கக்கூடாது எனும் எண்ணப்பாடு இன்று பெருமளவில் வளர்ந்திருப்பதை அறியாமல் கிளம்பியிருக்கும் நடிகர்களைப் புறந்தள்ளி சிறந்ததொரு தலைமை உருவாக மக்கள் சிந்திக்க வேண்டும், அதற்கான குரலை ஜனநாயக ரீதியில் மக்கள் தெளிவுபடுத்தத்தான் தேர்தல்கள் !

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரவுப் ஹகீமின் ‘தாடி’யில் மண் ஒட்டாது ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top