• Latest News

    March 08, 2014

    ஜனாதிபதியின் புறக்கணிப்பால் கடும் அதிருப்தியில் சிறிய கட்சிகளின் அமைச்சர்கள்

    ஜனாதிபதியின் புறக்கணிப்பு மற்றும் தொந்தரவு காரணமாக அரசாங்கத்தில் இருக்கும் சிறிய கட்சிகள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசாங்கத்தின் உட்தரப்பு வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ஜெனிவா மனித உரிமை பேரவையில், நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானம் கொண்டு வரப்படுவதை தவிர்ப்பதற்காக அரசில் அங்கம் வகிக்கும் பிரதான அமைச்சர்கள் சிலர் முன்வைக்கும் அறிக்கை தொடர்பில், மூன்று வார காலமாக ஜனாதிபதி பதில் எதனையும் வழங்காதது மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை ஜனாதிபதி திட்டியது ஆகிய காரணங்களினால் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட சில கட்சிகளும் அமைச்சர்களும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது.


    ஜெனிவா மனித உரிமை பேரவையில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானம் கொண்டு வரப்படுவதை தவிர்க்க இலங்கை தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்மொழிந்து, அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரட்ன, டக்ளஸ் தேவானந்தா, டியூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, ரொஜினோல்ட் குரே மற்றும் பிரதியமைச்சர் நவீன் திஸாநாயக்க உட்பட நிபுணர்கள் தயாரித்த அறிக்கை ஒன்றை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர்.

    இந்த அறிக்கைக்கு ஜனாதிபதி இதுவரை பதிலளிக்காத நிலையில், அதனை மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அமைச்சர்கள் அந்த அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமது அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனத்தை செலுத்தவில்லை என்பதால், அந்த அறிக்கையை தொடர்ந்தும் ரகசியமான ஒன்றாக வைத்திருக்காது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளதாக கூறினார்.

    அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் முன்வைத்த யோசனைக்கு மதிப்பளிக்காது, புறக்கணித்தமை கவலைக்குரியது.

    அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் காரணமாகவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாகவும் அரசாங்கத்தில் உள்ள பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் அமைச்சர் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.

    அதேவேளை கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளை ஜனாதிபதி விமர்சித்த காரணத்தினால் அந்த கட்சியும் அதிருப்தியில் இருப்பதாக அதன் உட்தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

    தமது கட்சி மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மன வேதனையை தரும் பல சம்பவங்கள் நடந்துள்ளதுடன் அது குறித்து ஜனாதிபதியோ அரசாங்கமோ செவிக்கொடுக்காது, தொடர்ந்தும் புறக்கணித்து வருவதால் தமது கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லாம் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியின் புறக்கணிப்பால் கடும் அதிருப்தியில் சிறிய கட்சிகளின் அமைச்சர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top