“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்டப்
நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் ஏறாவூரிலுள்ள
ஐயன்கேணி எனும் தமிழ் முஸ்லிம்;களின் எல்லைக் கிராமங்களுக்குள் அத்துமீறிப்
புகுந்து மக்களை அச்சுறுத்தி விட்டுப் போயிருக்கின்றார்கள்.”
இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சமகால நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து பிரஸ்தாபித்த அவர்,
“ஐயன்கேணி எல்லைக் கிராமத்திலுள்ள தமிழ்
மக்களும் முஸ்லிம் மக்களும் மிக நெருக்கமான அந்நியோன்ய நட்புறவோடு
காலங்காலமாக வாழ்கின்றவர்கள்.
ஐயன்கேணியில் வாழும் தமிழ் மக்கள் ஏறாவூர் முஸ்லிம் பகுதிகளுக்குள்ளேதான் காலங்காலமாக தொழில் புரிந்து ஜீவனோபாயம் நடத்தி வருபவர்கள்.
ஒருவரில் மற்றவர் தங்கி வாழும் இத்தகைய
சகவாழ்வைக் குலைப்பதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சமகால
நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
ஐயன்கேணியிலுள்ள தமிழ் மக்களை அவர்களது
அபிவிருத்தி சம்பந்தமாகச் சந்திக்கப் போவதாகக் கூறி கோயில் முன்றலுக்கு
அழைத்து விட்டு அபிவிருத்தி பற்றி எதுவுமே பேசாமல் அருகிலுள்ள
அந்நியோன்யமாக வாழும் முஸ்லிம்களைப் பற்றிய தவறான அச்ச உணர்வை ஏற்படுத்தி
விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
சரணடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள்
உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கூடவே வந்துதான் இந்த
எச்சரிக்கையை விடுத்துவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
இந்தத் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினருக்கு எப்பொழுதுமே இனக்கலவரம் எங்காவது ஒரு மூலையில் நடக்க
வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அப்பொழுதுதான் அதனை வைத்து இவர்களால்
அரசியல் பிழைப்பு நடத்த முடியும்.
இந்தக் கிராமத்திலிருந்து முஸ்லிம்களை
விரட்டியடிக்க வேண்டும், இந்தக் கிராமத்திலுள்ள கிராம சேவகர் முஸ்லிம்
என்பதால் அவரையும் விரட்ட வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கை அச்சுறுத்தலை
பகிரங்கமாகவே விடுத்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அத்துடன்
முஸ்லிம்களை வெள்ளை வானில் கடத்துவோம் என்று கூடக் கூறியிருக்கின்றார்கள்.
இதையெல்லாம் திட்டமிட்ட ஒரு
பின்னணியில்தான் அவர்கள் செய்திருக்கின்றார்கள். இது நாட்டின் அமைதிக்குப்
பங்கம் விழைவிக்கக் கூடிய பயங்கரவாத செயலாகவே பார்க்கப்பட வேண்டும். இது
விடயமாக பொலிஸ்மா அதிபருக்கு நான் எழுத்து மூலம் அறிவித்திருப்பதோடு
ஐயன்கேணி மக்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறும் கேட்டிருக்கின்றேன்.
முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து
அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுப்பதைத் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பினரும் அவர்களோடு எந்நேரமும் கூடவே உலாவரும் முன்னாள் புலிப்
போராளிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில்
முஸ்லிம்கள் தமது பூர்வீகப் பூமியிலிருந்து குறிப்பாக எல்லைப்புறக்
கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இப்பொழுது நிலை சுமுகமாகியிருப்பதால்
முஸ்லிம்கள் தமது பழைய பூர்வீக இடத்திற்குச் செல்கின்றார்கள். இதனைப்
பொறுத்துக் கொள்ள முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும்
இப்பிரதேசங்களில் இனக்கலவரங்களைத் தூண்டி விட முயற்சிக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் தமிழ் மக்களின் ஒரு அங்குல
நிலத்தையேனும் அடாத்தாகப் பிடிக்கவில்லை. அப்படி எங்காவது நடந்திருந்தால்
அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும்.
எனினும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினருக்கு தற்போது தேவைப்பட்டதெல்லாம் தமிழ் முஸ்லிம் மக்களின்
அமைதியற்ற வாழ்வே. அதனால்தான் அவர்கள் தமிழ் முஸ்லிம் எல்லைக்
கிராமங்களுக்கு வந்து துவேஷ உணர்வை ஊட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இந்த
விடயத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்’ என்றார்.
மேலும், இவ்விடயத்தில் கிழக்குமாகாண
முஸ்லிம் தலைமைகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல்
தலைமைகள் தமிழ் கூட்டமைபினருக்கு தகுந்த பாடம் புகட்ட ஒன்று சேர வேண்டும்”
என்றும் கேட்டுக் கொண்டார்.

0 comments:
Post a Comment