விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசிய விமானத்தைத் தேடும்
முயற்சிகள் இது வரை நடந்து வந்த இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியிலிருந்து
1,100 கிமீ வடகிழக்காக மாறுகின்றன.
இந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான துப்புக்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுகிறது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.
ராடார் தரவுகள், அந்த விமானம், மேலும் மிக விரைவாக பறந்து
கொண்டிருந்தது, எரிபொருளை அதிகமாக செலவழித்தது, என்று காட்டுவதை அடுத்து
இந்த தேடல் வேட்டையில் மாற்றம் வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை வரை தேடல் வேட்டை, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு
தென் மேற்கே சுமார் 2,500 கிமீ தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலின் ஒரு
பகுதியில் நடந்து வந்தது.
ராடார் தரவுகள் , அந்த விமானம் முன்பு கணிக்கப்பட்டதை விட வேகமாகப்
பறந்துகொண்டிருந்ததைக் காட்டுவதால், அது மேலும் வேகமாகப் பெட்ரோலை
செலவழித்திருக்கும், இதன் விளைவாக, அது இந்தியப் பெருங்கடல் திசையில் பறந்த
தூரம் குறைவானதாகவே இருந்திருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தத் தரவுதான், விமானத்தின் உடைந்த பாகங்கள் எங்கே விழுந்திருக்கும்
என்பதைப் பற்றி கிடைத்திருக்கும் மிக நம்பகமான துப்பு என்று ஆஸ்திரேலிய
கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தீர்மானித்திருக்கிறது என்று அந்த அறிக்கை
கூறுகிறது. மேலும் சீரான வானிலை உள்ள புதிய பகுதிஇந்த தரவின் அடிப்படையில்,
விமானம் விழுந்திருக்கக்கூடிய புதிய பகுதி,பெர்த் நகருக்கு மேற்கே 1,850
கிமீ தொலைவில் இருக்கலாம் என்றும், அதன் பரப்பளவு சுமார் 3.19 லட்சம் சதுர
கிமீ என்றும் அது கூறுகிறது. இந்தப் பகுதிதான் விமானம் கடலில்
விழுந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறான பகுதியைப் பற்றி மிக நெருங்கிய
கணிப்பு என்று அந்த அமைப்பின் அதிகாரி ஜான் யங் கூறினார்.
இந்தப் புதிய பகுதி, இது வரை தேடுதல் வேட்டை நடந்து வந்த பகுதியைவிட
சற்று வானிலை நன்றாக உள்ள பகுதி என்றும், இதன் காரணமாக, விமானங்கள் மற்றும்
கப்பல்கள் இந்தப் பகுதியில் சற்று நின்று நிதானித்துத் தேடமுடியும்
என்றும் அவர் கூறினார். மேலும் இந்தப் பகுதி நிலப்பகுதிக்கு மேலும் அருகே
அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விமானப் பயணிகளின் உறவினர்களுக்கு, சீன காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையைத் தரட் தொடங்கியிருக்கின்றன.
வியாழனன்று, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நியூ ஸ்ட்ரைய்ட்ஸ் டைம்ஸ்
பத்திரிகையில் பிரசுரித்த முழுப்பக்க விளம்பரம் ஒன்றின் மூலம்,
இவ்விபத்தில் இறந்துபோனதாகக் கருதப்படும் 239 பயணிகளின் உறவினர்களுக்கும்,
தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தது.

0 comments:
Post a Comment