• Latest News

    March 28, 2014

    சர்வதேசத்தில் இலங்கையும் - உள்ளூர் அரசியலும்

    இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.

    ஆனால் இப்படியான சூழ்நிலையை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
    அரசாங்கமோ சர்வதேச மட்டத்தில் தமக்கான ஆதரவு பலமடைந்திருப்பதாக வாதிடுகிறது.

    இலங்கையின் தலைநகர் உள்ளடங்கலாக மேல் மாகாணத்திலும் ஜனாதிபதி குடும்பத்தின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையை உள்ளடக்கிய தென் மாகாணத்திலும் சனிக்கிழமை மாகாணசபைத் தேர்தல் நடக்கின்றது.

    இந்த சூழ்நிலையில், ஜெனீவாவில் நிறைவேறிய இலங்கை மீதான தீர்மானம் தான் நாட்டின் அரசியல் களத்தில் சூடு பிடித்துள்ள விவகாரமாகியுள்ளது.

    இலங்கை சர்வதேசத்திடமிருந்து அந்நியப்பட்டுப் போயிருப்தையே ஜெனீவாத் தீர்மானம் காட்டுவதாகக் கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

    'ஐநா தலைமைச் செயலர், ஐநா மனித உரிமைகள் பேரவை, இந்தியப் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கு அளித்த உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ள படியால் தான் இந்த நிலைமை' என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.

    'இலங்கை பலமடைந்துள்ளது'- ஜீ.எல்
    'அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டது': ஐதேக
    ஆனால் ஹம்பாந்தோட்டையில் வியாழன் இரவு செய்தியாளர் சந்திப்பை நடத்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜெனீவாவில் தமக்கு கிடைத்தது ஒரு வகையில் வெற்றிதான் என்று வாதிட்டார்.

    'கடந்த ஆண்டை விட சர்வதேசத்தில் இலங்கையின் நிலைமை பலமடைந்திருக்கிறது' என்றார் ஜீ.எல். பீரிஸ்.

    '2013 ஆண்டு தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களிக்க, 8 நாடுகள் ஒதுங்கி கொண்டன. இந்தத் தடவை தீர்மானத்துக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களிக்க, 12 நாடுகள் ஒதுங்கிக்கொண்டுள்ளன' என்றார் வெளியுறவு அமைச்சர்.

    அமெரிக்கா மற்ற நாடுகளை பலவந்தப்படுத்தி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

    தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் தமது நட்பு நாடாக அந்த நாடுகள் கருதப்பட மாட்டாது என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாகவும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் போனதாகவும் ஜீ.எல்.பீரிஸ் வாதிட்டார்.

    ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளையே இலங்கை பெரும்பாலும் நம்பியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அமெரிக்காவைத் திட்டிக்கொண்டே மக்களின் கவனைத்தை திசைதிருப்பாமல் சர்வதேசத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கு அரசாங்கம் முன்வந்தாலேயே பிரச்சனையை தீர்க்க முடியும் என்று தமிழோசையிடம் கூறினார். BBC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேசத்தில் இலங்கையும் - உள்ளூர் அரசியலும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top