இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை
ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்க வேண்டுமென இந்தியாவின் நிதியமைச்சர் ப.
சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, ம.தி.மு.க. தலைவர்
வைகோ ஆகியோரும் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு தங்கள் கண்டனத்தைத்
தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இந்தியக்
கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து இல்லாத நிலையில் வெளியுறவுத் துறை
வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க முடிவுசெய்தது என்றும் அவர்
கூறியுள்ளார்.
இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீது நம்பகத் தன்மையுடன் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி, வைகோ கண்டனம்
இந்தத் தீர்மானத்தின் போது இந்தியா கடைப்பிடித்த
அணுகுமுறை, தமிழகத்தில் உள்ள தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள
தமிழ்ச் சமுதாயத்தையும் மீண்டும் ஏமாற்றத்திலும் வருத்தத்திலும்
ஆழ்த்தியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர்களின் தாயகமான இந்தியா அந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்திருப்பது
தான் பெற்ற தாயே தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்வதற்குச் சமமாகும்
என்று கூறியுள்ளார்.
ஐ.நா. வுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா “
மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை போன்ற பிற
நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக்
குலைப்பதாகவும் அமைந்துள்ளது” என்று கருத்து தெரிவித்திருப்பது கடும்
கண்டனத்திற்குரியது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
வாக்கெடுப்பில் பங்க்கேற்காமல், பாம்புக்கு
தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகிற விலாங்கு மீன் போன்ற ஏமாற்று
வேலையைச் செய்த 12 நாடுகளின் பட்டியலில் இந்திய அரசும் சேர்ந்துகொண்டதாக
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
ஈழத் தமிழர் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக்
குற்றவாளி என்பதுதான் இதற்குக் காரணம் என்றும் வைகோ தனது அறிக்கையில்
கூறியுள்ளார்.
BBC

0 comments:
Post a Comment